
பீஹார் மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரராக கருதப்படும் ராம் மனோஹர் லோகியாவுக்கு சிலை ஒன்று உள்ளது. சென்ற வாரம் மரியாதை நிமித்தமாக அந்த சிலைக்கு ஜிதன்ராம் மனிஹி மாலையிட்டார். இவர் பீஹாரை 9 மாதங்கள் முதல் மந்திரியாக இருந்து ஆட்சி செய்தவர். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் மாலையிட்டு சென்றவுடன் சிலை தீட்டு பட்டு விட்டதாகக் கூறி உயர் சாதி இளைஞர்கள் நான்கு பேர் அந்த சிலையை தண்ணீர் ஊற்றி முழுவதுமாக கழுவி தீட்டைக் கழித்துள்ளனர். ஜிதன்ராம் போட்ட மாலையையும் கழற்றி புதிதாக வேறொரு மாலையை அந்த சிலைக்கு போட்டுள்ளனர் சாதி வெறியர்கள்.
மாலையிட்ட ஜிதன்ராம் சாதாரணமான ஆள் அல்ல. பீஹாரை முதல் மந்திரியாக இருந்து 9 மாதங்கள் ஆட்சி செய்தவர். இவர் முதல்வராக இருந்தபோதே ஒரு கோவிலுக்குள் நுழைந்து இறைவனை வழிபட்டார் என்பதற்காக அன்றே அந்த கோவிலை தண்ணீர் ஊற்றி கழுவி தீட்டைக் கழித்தனர். அப்போதும் அது பெரும் பிரச்னையாக்கப்பட்டது. அதே இன ஒதுக்கல் சென்ற வாரம் மீண்டும் பல மக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளது. மற்ற மூவரை காவல்துறை தேடி வருகிறது.
இதற்கு முன்பு ஜெகஜீவன்ராம் ராணுவ மந்திரியாக இருந்த போதும் இதே போல் உயர் சாதி இந்துவுக்கு மாலையிட்டதற்காக சிலையை கழுவி தீட்டு கழித்தனர் உயர் சாதி இந்துக்கள். இத்தனை வருடம் சென்றும் அதே சாதி வெறி மீண்டும் அரங்கேற்றப்பட்டள்ளது. படித்து விட்டால் சாதி மறைந்து விடும் என்ற வாதம் முன்பு வைக்கப்பட்டது. படித்தவர்கள் மத்தியில்தான் இந்த சாதி வெறி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 'நீ முதல் மந்திரியாக இருந்திருக்கலாம், மத்தியில் ராணுவ மந்திரியாகவும் இருந்திருக்கலாம். எவ்வளவு உயர் பதவியைப் பெற்றாலும் எனது பார்வையில் நீ தலித். நீ தீண்டத்தகாதவன்' என்று சொல்கிறது மேற்படி சம்பவம்.
'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பவர்களுக்கு சென்ற வாரம் நிகழ்ந்த இந்த சம்பவம் சிறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
தகவல் உதவி
ndtv
outlookindia
06-04-2015

http://www.ndtv.com/india-news/lohia-statue-washed-after-being-garlanded-by-ex-chief-minister-jitan-ram-manjhi-752700
http://www.outlookindia.com/news/article/Lohias-Statue-Cleaned-After-Manjhi-Garlands-It-Four-Booked/889903
No comments:
Post a Comment