





24-04-2015 அன்று இரவு தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் உள்ள செக்கடித் தெருவில் சகோதரர் அப்பாஸ் அவர்களின் தாயார் மும்தாஜ் அம்மாள் அவர்கள் சுகவீனம் காரணமாக இறந்து விட்டார். மறுநாள் காலையில் உடலை அடக்கம் செய்ய வேண்டும். இறந்தவர் உயிரோடு இருக்கும் போது 'தன்னை நபி வழியில் அடக்கம் செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார். சகோதரர் அப்பாஸ் ஓரிறைக் கொள்கையை (ஏகத்துவம்) ஏற்றுக் கொண்டிருப்பதால் தனது தாயாருக்கு தானே தொழ வைப்பதாக சொல்லியுள்ளார். இதனை ராஜகிரி பெரிய பள்ளி நிர்வாகிகள் ஒத்துக் கொள்ளவில்லை. பள்ளியின் இமாம் தொழ வைத்தால்தான் மையவாடி (கபுர்ஸ்தான்) யில் அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்பது பள்ளி நிர்வாகிகளின் வாதம்.
தகடு, தாயத்து, மவுலூது, கபுர் வணக்கம், ஃபாத்திஹாக்கள் என்று இணை வைப்பிலும் மூடப்பழக்கத்திலும் மூழ்கி திளைத்துக் கொண்டு அதனை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை பின்பற்றி நான் எப்படி தொழுவது? என்பது சகோ அப்பாஸின் வாதம். எனது தாயாருக்கு கடைசி மரியாதையான பிரார்த்தனை தொழுகையை என்னை தொழ வைக்க அனுமதியுங்கள் என்று அப்பாஸ் அலி பிடிவாதமாக இருக்க பள்ளி நிர்வாகிகளும் அனுமதி தர மாட்டோம் என்று சொல்ல விஷயம் காவல் துறை வரை சென்று விட்டது. பிறகென்ன... ராஜகிரி கடைத் தெரு முழுக்க காவல்துறையினர்தான். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு வந்தனர். பிறகு காவல் துறை ஆய்வாளர், அரசு அதிகாரிகள் முன்னிலையில் பள்ளி அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இரண்டு பக்கத்திலும் ஐந்து ஐந்து பேராக அமர்ந்து காரசாரமான பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதற்கிடையில் நேரமாகிக் கொண்டே செல்வதால் சகோ அப்பாஸ் அவர்களின் வீட்டில் எல்லோரும் குழுமி தொழுகை நடத்த தயாரானோம். இறந்து போன தனது தாயார் யாருக்கும் கடன் பாக்கி வைத்திருந்தால் அதற்கு தான் பொறுப்பேற்பதாக சகோ அப்பாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு தனது தாயாருக்காக பிரார்த்தனை தொழுகையை சகோதரர் அப்பாஸ் அவர்களே நடத்தினார். அதிக எண்ணிக்கையில் மக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் இறந்த உடலை எடுத்துக் கொண்டு அடக்கம் செய்ய மையவாடியை நோக்கி பயணித்தோம். மையவாடிக்கருகில் உடலை கொண்டு வந்தவுடன் 'பேச்சு வார்த்தை முடியவில்லை. அதற்குள் உடலை ஏன் கொண்டு வந்தீர்கள்' என்று காவல் துறை ஆட்சேபணை தெரிவிக்கவே அனைவரும் உடலை எடுத்துக் கொண்டு ராஜகிரி மெயின் ரோட்டுக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 10 நிமிடத்துக்கு போக்குவரத்து தடைபட்டது. உடன் காவல் துறையினர் குறுக்கிட்டு 'உடலை அடக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். தயவு செய்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டதற்கினங்க உடலை ஓரமாக வைத்து போக்குவத்துக்கு வழி விட்டனர்.
இதன்பின் ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு 'மூன்று மாதத்துக்குள் அடக்கத் தளம் உங்களுக்கு தனியாக ஒதுக்கித் தருகிறோம்' என்ற உத்தரவாதத்தின் பேரில் உடலை அடக்க பள்ளி நிர்வாகம் அனுமதி தந்தது. அடக்கத்தளத்தின் பூட்டும் திறக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் குழி வெட்டி முடிக்கப்பட்டு சகோ அப்பாஸ் விரும்பியபடி நபி வழியில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நின்ற அனைவரும் அவரின் தாயாருக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக களைந்து சென்றோம்.
பள்ளி நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகள்...
வட்டி வாங்கி வாழ்வை ஓட்டுபவன், விபசாரம் செய்பவன், பள்ளி வாசல் சொத்தை திருடி தின்பவன், பங்காளிக்கு துரோகம் செய்பவன், சாராயம் குடிப்பவன் என்று இவர்களை அடக்கம் பண்ணுவதற்கு உங்கள் நிர்வாகம் எந்த தடையும் விதிப்பதில்லை. ஆனால் நபி அவர்களும் குர்ஆனும் காட்டித் தந்த வழியில் ஒருவன் வாழ முயற்சித்தால் அவர்களுக்கு உங்களால் முடிந்த தொல்லைகளை தருகிறீர்கள். தாயை இழந்து ஏற்கெனவே சோகத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கையாளனை மேலும் மன உளைச்சலைக் கொடுத்து சந்தோஷப்படுகிறீர்கள். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். ஒரு நரம்பை இறைவன் பிடித்து இழுத்தான் என்றால் உங்கள் கதி அதோ கதி தான். இறைவனின் கோபம் மிகக் கடுமையானது. சிறிதாவது மார்க்கத்தை விளங்க முயற்சி செய்யுங்கள். இறைவன் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக!
2 comments:
நபி வழியில் தொழுகை நடத்த தனி பள்ளிவாசல் கட்டி கொள்வார்களாம் .ஆனால் அடக்கம் செய்ய மட்டும் சுன்னத் பள்ளிவாசல் வேண்டுமாம் .தனி பள்ளிவாசல் கட்டிவவர்கள் தனி கபர்ஸ்தான் கட்டி கொள்ள வேண்டியது தானே .
நபி வழியில் தொழுகை நடத்த தனி பள்ளிவாசல் கட்டி கொள்வார்களாம் .ஆனால் அடக்கம் செய்ய மட்டும் சுன்னத் பள்ளிவாசல் வேண்டுமாம் .தனி பள்ளிவாசல் கட்டிவவர்கள் தனி கபர்ஸ்தான் கட்டி கொள்ள வேண்டியது தானே .
Post a Comment