Followers

Tuesday, April 28, 2015

'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' இனி அவ்வளவுதானா?

சகோ முஹம்மத் ஆஷிக்!

//இப்பல்லாம் த்த்ஜவை விட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டு இருக்காங்க. அவர்களின் பேச்சும் ஒழுக்கமும் பண்பும் அகபாவமும் மரியாதைக்கெட்டத்தனமும் எல்லாம் தெரிஞ்ச ஈகோத்தனமும் மக்களை வெறுக்க வைத்து விட்டன. நானும் த்த்ஜவ விட்டு விலகி தள்ளிப்போனவன் தான். நான் கொஞ்சம் சீக்கிரம்... மத்தவங்க கொஞ்சம் லேட்டு அவ்வ்ளோதான்....

இப்ப உள்ளமாதிரியே தப்பு தப்பா பத்வா தந்துட்டு இருந்தா கடைசியா த்க்லீது செய்யிறவங்க மட்டும் தா ன் ததஜவில் மீதி இருப்பாஙக. குர் ஆன் ஹதீசை சிந்திக்கிறவ்ங்க எல்லாரும் வெளியேறிடுவாங்க//


மீண்டும் தவறான புரிதல். தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறிய பாக்கராகட்டும், தமுமுகவிலேயெ தங்கி விட்ட ஜவாஹிருல்லாவாகட்டும் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இந்த ஜமாத்தை விட்டு விலகிச் சென்றாலும் விலகியவர்கள் தவ்ஹீத் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். பாக்கர் அண்ணன் என்றாவது தர்ஹாவில் சென்று தலை முட்டியதை பார்த்திருக்கிறீர்களா? அல்லது அண்ணன் ஜவாஹிருல்லா ஏகத்துவ கொள்கைக்கு எதிராக என்றாவது பேசியாவது பார்த்திருக்கிறீர்களா? எனவே தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் இயங்காமல் வேறு பெயர்களில் இயங்கினாலும் அது தாய்க் கழகதத்துக்கு பெருமைதானே!

லட்சக் கணக்கான மக்கள் அங்கம் வகிக்கும் தவ்ஹீத் ஜமாத்தில் சில முறுகல்கள் வருவது இயற்கை. பிஜே அண்ணன் ஓரு முக்கியஸ்தரின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் உள்ளனர். :-) சிலருக்கு அரசியல் ஆசை வந்தது. அதனால் தமுமுக என்று பிரிந்து சென்று தங்களின் பணியை செய்து கொண்டுள்ளனர். அங்கும் 50 சதவீதத்துக்கு மேல் தவ்ஹித் வாதிகளே! நிர்வாகத்தில் சில முறுகல்கள் வரலாம். உலக ஆதாயம் கருதி சிலர் தவ்ஹீத் ஜமாத்தை நோக்கி வரலாம். அந்த ஆதாயம் கிடைக்காதவர்கள் சில நாட்களில் விலகியும் செல்லலாம். எனக்கு மரியாதை தரவில்லை என்ற அற்ப காரணங்கள் கூட இந்த ஜமாத்தை விட காரணமாக இருக்கலாம். எத்தனை ஆயிரம் பேர் இவ்வாறு விலகிச் சென்றாலும் தவ்ஹீத் கொள்கையிலிருந்து சிறிதும் பிறழ மாட்டார்கள். எனவே தவ்ஹீத் நாளுக்கு நாள் வளர்கிறதே யொழிய தேயவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து தவ்ஹீத் சகோதரர்கள் கோபமாகவும் வரம்பு மீறியும், தரம் தாழ்ந்தும் விமரிசிப்பதாக குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். தவ்ஹீத்வாதிகள் ஒன்றும் மலக்குகள் அல்ல. அவர்களும் மனிதர்களே. அவ்வாறு எழுதுபவர்களின் பதிவுகளுக்கு சென்று நானும் அறிவுரை வழங்கியுள்ளேன். அவர்களும் திருத்திக் கொண்டுள்ளார்கள்.

குர்ஆனையும் நபி மொழிகளையும் நாம் வாழ்வியலாக கொண்டுள்ளோம். தியாகங்களோடு வாழ்ந்து வரும் நம்மை ஊர் விலக்கம் செய்கிறார்கள்: பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை: இறந்த உடலை அடக்க அனுமதி தருவதில்லை என்ற ஆதங்கத்தினால் சிலரிடமிருந்து கண்ணிய குறைவான வார்த்தைகள் வந்து விடுகின்றன. போகப் போக அவையும் சரியாகும் இன்ஷா அல்லாஹ். தமிழகத்தில் உள்ள அனைத்து சுன்னத் ஜமாத் பள்ளிகளிலும் 'யாரும் எந்த முறையிலும் தொழுது கொள்ளலாம்' என்ற ஒரு சிறு அறிவிப்பை மட்டும் அறிவித்து விட்டால் 90 சதவீதமான ஐந்து வேளை தொழுகையாளிகள் தவ்ஹீத் ஜமாத்துக்கு வந்து விடுவர். ஊர் ஜமாத்துக்கு பயந்து கொண்டே பெரும்பாலான மக்கள் தவ்ஹீத் கொள்கையை மனதுக்குள் வைத்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் சில ஆண்டுகளில் அவர்களும் தங்களை வெளிக்காட்டிக் கொள்வர்.

தர்ஹா வணக்கம், தட்டு தாயத்து, மூரீது, பேய் ஓட்டுதல், மந்திரம், சூன்யம், வரதட்சணை என்று அனைத்து மூடப்பழக்கங்களையும் எவ்வாறு கடந்த 25 வருடங்களாக தவ்ஹீத் ஜமாத் பாடுபட்டு ஒழித்துக் கட்டியதோ அதே வீரியத்தோடு வரும்காலத்திலும் பணியாற்றும் இன்ஷா அல்லாஹ்.

எனவே ஒரு சிலர் விலகுவதை வைத்து அல்லது நீங்கள் இந்த ஜமாத்தை விட்டு விலகுவதை வைத்து தவ்ஹீத் ஜமாத்துக்கு ஏதோ மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதாக எண்ணி குதூகலிக்க வேண்டாம். ஏக இறைவனையும், நபிகள் நாயகத்தின் உண்மையான சொற்களையும் பரப்புவதையே தனது வேலையாக கொண்டிருக்கும் இந்த தவ்ஹீத் ஜமாத்தை காப்பாற்றும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்வான். அது பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை சகோ.

No comments: