Followers

Thursday, June 18, 2015

நம்புங்கள்... ஊழலுக்கு எதிரான அரசு BJP :-)



முதன்முதலில் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது காவல் துறை அதிகாரிகளே கொஞ்சம் திகைத்துதான் போயிருக்கிறார்கள். அதுவரை சினிமாவில்கூட அவர்கள் இதையெல்லாம் பார்த்திருக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் ரெட்டி சகோதரர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லை. “அவர்கள் பண்ணை வீடு மட்டும் எத்தனை ஏக்கர் தெரியுமா? 50 அறைகள் இருக்கின்றன தெரியுமா? குண்டு துளைக்காத பாதாள அறை தெரியுமா? மூன்று ஹெலிகாப்டர்கள் தெரியுமா? வீட்டைச் சுற்றி பாதுகாப்புக்கு மட்டும் 100 பேர் தெரியுமா? தங்க நாற்காலியின் விலை ரூ. 2.2 கோடி தெரியுமா?” என்ற பேச்சுகளையெல்லாம் அவர்களும் கேட்டவர்கள். ஆனால், காதால் கேட்பதும் கண்ணால் கேட்பதும் ஒன்றல்லவே? மலைத்துப்போனார்கள்!

சுமார் ரூ.50,000 கோடிகளுக்கு அதிபதிகளாகச் சொல்லப்படும் ரெட்டி சகோதரர்களுக்கு எங்கிருந்து வந்தது அந்தப் பணம்? கர்நாடகத்தில் உள்ள குழந்தைகள்கூடச் சொல்லும், “பெல்லாரியின் இரும்புச் சுரங்கங்கள் சூறையாடப்பட்டதிலிருந்து வந்தது.”

நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட வகையில் நடந்த சுரண்டல் அது. பெல்லாரியின் சுரங்கங்களுக்கு இடையில் தடை விதிக்கப்பட்டபோது, சுரங்க லாபி ஆட்கள் எழுதினார்கள், “ஐயோ, 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டார்கள், 65,000 டிரக் உரிமையாளர்கள் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள், தடை விதிப்பவர்கள் இதையெல்லாம் யோசிக்க மாட்டார்களா?” ஆமாம். இயற்கை அவ்வளவு கொடூரமாகச் சூறையாடப்பட்டது, எல்லோரும் பார்த்திருக்க. ஆனால், அன்றைக்கு ரெட்டி சகோதரர்கள் மீது கை வைக்கும் துணிச்சல் யாருக்கும் கிடையாது. ஏனென்றால், அவர்கள் கையில் பண அதிகாரம் மட்டும் அல்ல; அரசியல் அதிகாரமும் இருந்தது. தென்னிந்தியாவில் முதல் முறையாக பாஜக கர்நாடகத்தில் ‘இந்து ராஜ்ஜியம்’ அமைப்பதற்கான ‘ஆபரேஷன் தாமரை’யை வெற்றிகரமாக நடத்தியவர்கள் அவர்கள்.

கர்நாடகத்தின் அப்போதைய லோகாயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ரூ.16,000 கோடி சுரங்க ஊழல் முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்தார் (சுவாரஸ்யமான ஒரு விஷயம், அந்த அறிக்கையில் இன்றைய பிரதமருக்கு நெருக்கமான அதானியின் குழுமமும் சிக்கியிருந்தது. சட்ட விரோதமான இரும்புத் தாதுவை பெலகரே துறைமுகத்தின் வழியே கையாள அனுமதி கேட்டு லஞ்சம் கொடுத்ததாக அதானி என்டர்பிரைசஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. கூடவே, அந்நிறுவனத்தைத் தடைப் பட்டியலில் சேர்க்குமாறும் கூறியிருந்தது அறிக்கை). கிட்டத்தட்ட 18 மாதங்கள் சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கை மீது பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் அவர் பதவி விலகும் முடிவை எடுத்தார். வேறு வழியில்லாமல், முதல்வர் எடியூரப்பா நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, ரெட்டி சகோதரர்கள் தங்கள் கைக்குள் வைத்திருந்த 40 சட்டப்பேரவை உறுப்பினர்களை பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து, எடியூரப்பாவின் முதல்வர் பதவியையே கேள்விக்குள்ளாக்கி. தங்கள் செல்வாக்கின் எல்லையைக் காட்டினர்.

இப்பேர்பட்ட ரெட்டி சகோதர்களின் அரசியல் ரட்சகர் யார் தெரியுமா? இன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். ரெட்டி சகோதரர்களின் இல்ல விழாக்களில் மட்டும் அல்ல; ஒருகட்டத்தில் ஆண்டுதோறும் அவர்கள் இல்ல மகாலட்சுமி விரத சிறப்பு பூஜைகளையும்கூடத் தவறவிடாத விருந்தினராக இருந்தார் சுஷ்மா என்கிறார்கள். காரணம் இல்லாமல் இல்லை. 2008-ல் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் தாமரை’க்குப் பின் ஓசைப்படாமல் இன்னொரு செயல்திட்டத்தை ரெட்டி சகோதரர்கள் தொடங்கியிருந்தார்கள். அது, ‘ஆபரேஷன் சுஷ்மா’. பிரதமர் பதவியை நோக்கி சுஷ்மாவைக் கொண்டுவரும் திட்டம். சுரங்க ஊழல் பெரிய அளவில் வெடித்து, ஜனார்த்தன ரெட்டி 2011-ல் சிறையில் அடைக்கப்படும் வரை கிட்டத்தட்ட இந்த நெருக்கம் தொடர்ந்தது. அதன் பிறகுதான், சுஷ்மா ரெட்டிகளைக் கைவிட்டார்.

கர்நாடகம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியோடு பார்த்த காட்சிகள் இவை. இன்றைக்கு நம்முடைய மறதிநோய் வசதியாக எல்லாவற்றையும் மூடிமறைத்துவிட்டது. இந்த முன் வரலாற்றோடெல்லாம் ஒப்பிடும்போது, ரூ. 1,700 கோடி நிதி மோசடி, சூதாட்டம், தில்லுமுல்லு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய 16 வழக்குகளில் சிக்கி, இங்கிலாந்து தப்பிவிட்ட லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் செய்திருப்பது வெகு சொற்பம். ஏனென்றால், சுஷ்மாவுக்கும் லலித் மோடிக்குமான உறவின் நெருக்கம் அப்படியானது. லலித் மோடியின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், “சுஷ்மா என் குடும்ப நண்பர். அதைத் தாண்டி சட்டரீதியான (தொழில்ரீதியான) உறவும் எங்கள் குடும்பங்களுக்குள் இருக்கிறது. சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்குச் சட்ட ஆலோசனை வழங்கிவருகிறார். சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார்.”

கூடவே, லலித் மோடி தனக்கும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் இடையேயுள்ள 30 ஆண்டு உறவைப் பற்றியும் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். வசுந்தராவிடம் உதவி கோரியதையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட மறந்தாலும் அவர்கள் இருவர் மத்தியிலும் தனிப்பட்ட உறவைத் தாண்டி இருந்த உறவுகளை வசுந்தரா மகனும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் சிங் சார்ந்த நிறுவனத்தில் லலித் மோடி சார்ந்த நிறுவனத்திலிருந்து சென்ற பணமும் கை மாற்றப்பட்ட பங்குகளும் சொல்கின்றன.

லலித் மோடி இங்கிலாந்திலிருந்து போர்ச்சுகலுக்குச் செல்ல சுஷ்மா உதவியதை மனிதாபிமான உதவி என்கிறது அரசு. ‘‘லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா நேர்மையுடனும் நல்லெண்ணத்துடனும் செயல்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் அரசும் எங்கள் கட்சியும் அவருக்கு முழு ஆதரவாக நிற்கின்றன. இதில் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லை” என்று கூட்டுப் பேட்டி அளிக்கின்றனர் அருண் ஜேட்லியும் ராஜ்நாத் சிங்கும்.

லலித் மோடிக்கு ஆதரவாக இப்படியான ‘மனிதாபிமான முடிவு’ ஒன்றை நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் இந்நேரத்திலா சுவிட்சர்லாந்து மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும்? “சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவு ரூ. 12,615 கோடி - 10.6% - குறைந்துவிட்டது.” அதாவது, பணம் போட்டிருந்தவர்கள் பாதுகாப்பாக எடுத்துவிட்டார்களாம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்றும் ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்போம் என்றும் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்றைக்குக் கருப்புப் பணத்தோடு விளையாடுபவர்களோடு கொண்டாடும் சொந்தத்தையும் அவர்களைக் காக்க எடுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் கண்டு நாம் வேகப்பட ஏதுமில்லை. ஏனென்றால், ஊழலுக்கு எதிரான அரசு இது. ஏனென்றால், இதில் ஊழல் என்று எதுவும் இல்லை!

- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
19-06-2015

No comments: