Followers

Saturday, June 20, 2015

வெப்பச் சலனம் என்றால் என்ன? குர்ஆனின் அறிவியல்





சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் டைரக்டர் ரமணன் அடிக்கடி 'வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையில் ஆங்காங்கே மிதமானது முதல் பலத்த மழை பெய்யக் கூடும்' என்று அடிக்கடி தொலைக் காட்சியில் அவருக்கே உரிய அழகிய தமிழில் நம்மை பயமுறுத்திக் கொண்டிருப்பார்.

நாம் வாழும் இந்த பூமியானது மனிதர்கள் தாவரங்கள் விலங்கினங்கள் பறவையினங்கள் பூச்சியினங்கள் போன்ற அனைத்து வகையான உயிரினங்களும் வாழத் தகுதியாக படைக்கப்பட்டுள்ளது. சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும். மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.

இந்த நிலையில் மனிதன் காடுகளை அழித்து பூமியை அதீத வெப்ப மயமாக்கி விடுகிறான். எனவே தான் முன் எப்போதும் இல்லாமல் பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. இந்த வெப்பமானது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்கும் போது இறைவன் வகுத்த அருமையான செயல்பாடுகளினால் பல அரிய மாற்றங்கள் தானாகவே நிகழ்கின்றது. அது எப்படி என்று பார்போம்.

சூரியன் பூமியை சூடாக்குகின்றது. பூமி உள்வாங்கிய வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் அருகிலுள்ள காற்றை சூடாக்குகின்றது. சூட்டினால் காற்றினுடைய அடர்த்தி குறைவடைவதனால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்ப நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் என்று கூறுவர். பூமியின் மேற்பரப்பானது புல் தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை என மாறுபடுவதால் ஒரே சூட்டில் இருப்பதில்லை. இதனால் காற்றும் வெவ்வேறு உஷ்ணத்தில் சூடேற்றப்பட்டு பல இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும் மேலெழும்புகின்றது. இவ்வாறு குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கின்றது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகள், உப்பு ஆகியவற்றின் மீது மையம் கொண்டு திரண்டு, பரவி திரவமாகவும், ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய சிறு நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் மேகங்கள் காற்றின் உதவியுடன் ஒன்று திரட்டப்பட்டு சில படிமுறைகளுக்குப் பின் மேகங்களிலுள்ள நீர் ஒடுங்கி மழையாக பூமிக்கு வந்து விழுகின்றது. அதனை நாம் சந்தோஷமாக அனுபவிக்கிறோம். ஆஹா என்ன ஒரு அருமையான ஏற்பாடு? இந்த ஏற்பாட்டை மட்டும் இறைவன் செய்ய வில்லை என்றால் இன்று நானும் நீங்களும் கணிணி முன்னால் உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருக்க மாட்டோம். தற்போது உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு பிடித்து வருகிறார்கள். மனிதர்கள் தாங்கும் அளவுக்கு மழையையும் இறக்கி வளி மண்டல சீதோஷ்ண நிலையை சீராக்கி வைத்தள்ள இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

இது பற்றி இறைவன் என்ன கூறுகிறான் என்று பார்போம்.

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

இந்த வசனத்தின் மூலம் பூமியில் கால நிலையில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்து மனிதன் வாழத் தகுந்த கோளாக இதனை மாற்றி விடுவதாக இறைவன் நமக்கு அறிவுறுத்துகிறான்.

வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே சிரம் பணிகின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் அவ்வாறே சிரம் பணிகின்றன. (குர்ஆன் 13:15)

"நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)


மேற்கண்ட வசனங்களில் மழையை இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான். மனிதர்களின் தேவைக்கேற்ப அளந்து தருகிறான். அவனது கிருபையினாலேயே பூமியில் நாம் சிரமமின்றி வாழ்ந்து வருகிறோம் என்பது இந்த பதிவின் மூலம் நாம் விளங்கிக் கொண்டோம்.

ஒரு சில இடங்களில் மழையை மித மிஞ்சி கொடுத்து மக்களை அழிக்கவும் செய்கிறான். சில இடங்களில் வறட்சியையும் தருகிறான். அந்த மக்களை சோதிப்பதற்காகவும் அல்லது இறைவனை மறந்த அந்த மக்களை தண்டிப்பதற்காகவும் அதிகமான மழையை இறைவன் கொடுத்திருக்கலாம். வறட்சியையும் தந்திருக்கலாம். அதன் விளக்கத்தை இறைவனே அறிந்தவன். அவை உலகின் ஒரு சில இடங்களில் அரிதாக நடப்பவையே! பூமியின் பெரும்பாலான மக்களுக்கு இறைவனின் கிருபை இருப்பதால் தான் இந்த பூமியானது நாம் வாழத் தகுந்த இடமாக உள்ளது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

No comments: