
T.M.உமர் பாருக் (T.M.மணி) இறைவனடி சேர்ந்தார்.
25 வருடங்களுக்கு முன்னால் எங்கள் ஊரில் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' நடத்தினோம். பி.ஜெய்னுல்லாபுதீன், பாக்கர், டி.எம்.மணி இம்மூவரும் முக்கிய பேச்சாளர்கள். ஊரில் பிஜேயை அழைத்ததால் பயங்கர எதிர்ப்பு. வழியிலேயே அவரை மடக்கி கூட்டத்தில் கலந்து கொள்ள செய்யாமல் ஆக்கி விடலாம் என்பது எதிரிகளின் திட்டம். அதனையும் மீறி சென்னையிலிருந்து மூன்று பஸ்கள் மாறி வேறு தடங்களின் மூலமாக பிஜேயை எங்கள் ஊருக்கு கொண்டு வந்து பேச வைத்தோம். போலீஸ் பாதுகாப்போடு மிகச் சிறப்பாக நடந்தது கூட்டம்.
அந்த கூட்டத்தில் டி.எம்.மணியும் சிறப்பாக உரை நிகழ்த்தினார். 'இவ்வளவு அழகாக இஸ்லாமிய கருத்துக்களை பேசும் நீங்கள் இன்னும் ஏன் இஸ்லாத்தை தழுவவில்லை' என்று கேட்டேன்? அதற்கு அவர் “குறைந்தது 1000 பேருக்கு மேல் எனது இனத்தை இஸ்லாத்தில் புக வைத்து விட்டுத்தான் நான் மதம் மாறுவேன்” என்று என்னிடம் சொன்னார். சிறிது நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பெயரை உமர் பாரூக் என்று மாற்றிக் கொண்டு இஸ்லாத்தை தழுவினார். தற்போது ஒரு முஸ்லிமாக மரணித்துள்ளார்.
விடியல் வெள்ளி பத்திரிக்கை மு.குலாம் முஹம்மது அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ஆரம்ப நாள்களில் ‘சாதி ஒழிந்தது’ என்கிற பெயரில் அவர் எழுதிய தொடர் சாதீயத்துக்கு எதிரான புரட்சிப் பறையாக முழங்கியது எனலாம்.
திருப்பனந்தாள் மடம் மற்றும் பெரும் நில முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அந்த பெரியவர் இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து என்று முழங்கியதோடு மட்டும் நின்று விடாமல் அந்த இஸ்லாத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்றது மாத்திரமல்லாது தான் பெற்ற அந்த இன்பத்தை தம் குடும்பத்தாரும் தமது சமூகத்தாரும் பெற்றிட உழைத்தவர் ஆவார்.
இஸ்லாமிய அழைப்புப் பணியில் தம்மை இறுதி காலம் வரை ஈடுபடுத்திக் கொண்டிருந்த அந்த பெரியவர் தலித் மக்களின் விடுதலைக்காக “தலித் நீலப்புலிகள் இயக்கம்” என்ற சமூக அமைப்பையும் நடத்தி வந்தார்.
அவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்படும்.
இஸ்லாமிய, பெரியாரிய, அம்பேத்கரிய தளங்களில் அனைவராலும் மதிக்கப்பட்ட அந்த புரட்சியாளரின் சேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது இயக்கத் தோழர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்…
அல்லாஹ், அன்னாரது நல்லறங்களைப் பொருந்திக் கொண்டு மறுமை வாழ்வை சிறக்கச் செய்வானாக. அன்னாரது குடும்பத்தினருக்கு இப்பேரிழப்பைத் தாங்கும் வலிமையைக் கொடுப்பானாக.!
No comments:
Post a Comment