

மருத்துவமனையில் முத்துராமன் (படம் நன்றி: தி இந்து)
நீங்கள் பொம்பள பொறுக்கியாக இருக்கலாம் அல்லது கந்து வட்டி கும்பலாக கூட, ஏன் ஏழைகளின் நிலங்களை அபகரிப்பவராகக் கூட இருக்கலாம். உங்களது இந்த தேசியப் பணியில் உற்சாகத்துடன் ஈடுபட உங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றால் பாஜகவிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.லோ இணைந்து முசுலீம் தீவிரவாதி அரிவாளால் தாக்கியதாக பிளேடால் அறுத்து கொண்டு மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டால் போதும். இத்தகைய மோசமான டிரண்ட் இன்று மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்து தேசியம், இந்துக்கள் ஒற்றுமை, இந்துக்கள் பாதுகாப்பு என பீற்றிக்கொள்ளும் இந்துத்துவ அமைப்புகளின் முக்கிய பொறுப்பாளர்களின் வணிகம் என்னவென்றால் கந்து வட்டி, நில மோசடி, நிதி மோசடி, கட்டப் பஞ்சாயத்து. இந்த சமூக தீமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு எச்சரிக்கை விடும்போது பயந்து ஒழிந்துகொள்ள இவர்கள் எடுக்கும் ஆயுதம் முசுலீம் தீவிரவாதம்.
இந்துத்துவா தலைவர்களுக்கு முசுலீம் தீவிரவாதிகளால் ஆபத்து என்ற வலுவான போலி பிம்பம் இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ் ஆல் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. மாலேகான், சம்ஜோத்தா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இந்துத்துவ பயங்கரவாதத்தின் கொடூரமான இருப்பை உறுதிபடுத்தின. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறவும், பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் அமரவும், சொந்த எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறவும், இந்துத்துவ தலைவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் "முசுலீம் பயங்கரவாதிகளால் உயிருக்கு ஆபத்து" என்ற சொற்பதம். கொடூரமான இன ஒடுக்கலை உள்ளடக்கிய இந்த சொற்பதத்தை நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. பாமர இந்துக்களிடம் இந்த சொற்பதம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஆங்காங்கே நடக்கும் வன்முறைகள் உணர்த்துகின்றன. இந்த வாக்கியம் குறித்து உண்மையான ஆய்வை ஜனநாயக வாதிகள் வெகுஜன ஊடகங்கள் மூலமாக மக்கள் மன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்.
நாட்டின் எந்த மூலையில் இந்துத்துவ தலைவர்கள் அவர்களது சொந்த எதிரிகளால் தாக்கப்படும்போதோ அல்லது தாக்குதல் நாடகத்தை அவர்களே அரங்கேற்றும்போதோ அனைத்து பாமர இந்துக்கள் மட்டுமல்லாமல் முசுலீம் மக்களின் மனதிலும் இசுலாமிய பயங்கரவாதிகளின் கொடூர செயல் என்ற பின்னூட்டமான வார்த்தை மேற்கூறிய சொற்றொடரின் மூலம் அவர்களது ஆள்மனதில் பதிந்து போய்விடுகிறது. காட்சிகள் நடக்கும்போது காரணங்களை அவர்களது மூளை அவர்களுக்குத் தெரிவித்து விடுகிறது. மிக நுட்பமான இந்த ஆபத்தின் மூலம் எளிதாக ஒரு இனம் ஒடுக்கப்படுகிறது. இந்த சதியின் காரணகர்த்தாக்களுக்கு அனுதாபமும் ஆதாயமும் கிடைக்கிறது.
ஜனவரி 2ம் தேதி நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்த பாஜக வர்த்தகப் பிரிவின் மாநில துணைத் தலைவர் வேல்சந்திரன் திசையன் விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் தனது தோட்டத்திற்குச் சென்று காரில் திரும்பிக் கொண்டிருக்கும்போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து குத்தியதாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொண்ட வள்ளியூர் போலீசார் நடத்திய விசாரணையில் இது வேல்சந்திரன் போலீஸ் பாதுகாப்புக்காக நடத்திய நாடகம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போன்று பாஜகவில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்காகவும் தேர்தலில் சீட் கிடைப்பதற்காகவும் கோவை வடவள்ளி சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியைச் சேர்ந்த பாஜக முன்னாள் மண்டலச் செயலாளர் ராமநாதன் என்பவர் கூலிப்படையினரை வைத்து தனது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு அல் உம்மா அமைப்பினர் மீது பழியை போட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது நாடகம் அம்பலமானது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 5, 2014 அன்று அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அனுமன் சேனா பிரமுகர் சக்தி வேல் என்பவரும் இதே போன்ற போலி நாடகத்தை அரங்கேற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் கடந்த டிசம்பர் 17ம் தேதி நடந்த சம்பவம் பெரும் வேடிக்கையானது. பாஜகவின் மூத்த பிரமுகரான எம்.ஆர்.காந்தி என்பவர் முசுலீம்கள் அதிகமாக வசிக்கும் இடலாக்குடி என்ற பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தண்ணீர் நிரம்பிய பலூன் ஒன்று அவரது வாகனத்தில் லேசாக பட்டுவிட்டது. உடனே அவர் செய்த அலப்பறை மிகவும் கொடூரமானது. ஊடகங்களுக்கு தவறான தகவல்கள் பரப்பபட்டன. எம் ஆர் காந்தியின் வாகனத்தின் மீது கல் வீச்சு என்றும் ஆசிட் வீச்சு என்றும் செய்திகள் பரப்பப்பட்டு கலவர சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
மிகவும் முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் இவ்வளவு மோசமாக எம் ஆர் காந்தி நடந்து கொள்ள காரணம் என்ன? இதே பலூன் இந்து சிறுவர்கள் எறிந்திருந்தால் அவர்களைப் பார்த்து சிரித்து விட்டு டாட்டாகாட்டி சென்றிருப்பார். ஆனால் முசுலீம் சிறுவர்கள் என்பதால் ஒரு கேவலமான அரசியல் நாடகத்தை நடத்தியிருக்கிறார். இதன் மூலம் இடலாக்குடி முசுலீம்கள் மீது ஒரு சந்தேகப்பார்வையை பாமர இந்துமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம்.
கடந்த 2ம் தேதி இதே நாகர்கோவில் இடலாக்குடியில் நடந்த சம்பவமும் மிகுந்த சந்தேகங்களை எழுப்புகிறது. அன்று காலை 8.30 மணிக்கு பாஜகவின் மாவட்ட வர்த்தகப் பிரிவுத் தலைவர் முத்துராமன் என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்கியதாக தனியார் மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டார். இந்த சம்பவங்கள் நடந்த சில நிமிடங்களிலேயே வெள்ளாடிச்சி விளை என்ற பகுதியில் உள்ள முசுலீம் குடியிருப்புகள் மீது ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பேருந்துகள் மற்றும் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. ஷேக் அலி என்ற அப்பாவி கூலித் தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த உடன் முத்துராமன் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதன் பின் விளைவு தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று வன்முறையைத் தூண்டி விட்டுச் சென்றார்.
இது குறித்து விசாரணை நடத்திய கோட்டாறு போலீசாரிடம் முகமூடி அணிந்து வந்த நபர்கள் அரிவாளால் வெட்டியதாகத்தான் கூறினார். ஆனால் அவர்கள் தாடி வைத்திருந்ததை முத்துராமன் அந்த பதட்டமான சூழ்நிலையிலும் எப்படி கவனித்தார் என்று தெரியவில்லை. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத அப்பாவி முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீசாரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். முசுலீம்களிடம் மிகவும் நட்புறவுடன் பழகி வந்த முத்துராமன் முசுலீம்கள் மீது அபாண்ட பழியை சுமத்தியது இந்துத்துவ அரசியலின் கொடூர சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே பல்வேறு நில மோசடி வழக்குகள், கொலை வழக்குகளில் தொடர்புடைய முத்துராமனுக்கு எதிரிகள் அதிகம். இதனால் ஏற்கனவே இவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தார். பொறுக்கிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியுமா? என போலீசார் மறுத்து விட்டனர். இந்த நிலையில்தான் சிராய்ப்பு காயங்களுடன் மருத்துவமனையில் அரிவாளால் வெட்டியதாக சென்று அலப்பறையை உருவாக்கி உள்ளார்.
முக்கிய பாஜக மற்றும் இந்துத்துவ தலைவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளால் ஏராளமான எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பாஜகவின் தேசியச் செயலாளரும் ஏதோ அப்பழுக்கற்ற ஒழுக்கவாதி என்றும் ஊடகங்களில் தன்னை காட்டிக் கொள்ளும் மேனாமினுக்கி ஹெச்.ராஜா லோட்டஸ் பெனிபிட் பண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி பாஜகவினரிடமே மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் பழனியப்பன் இவர் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியே அரை டவுசர்களை அணிந்து தேசியவாதி என காட்டிக்கொள்ளும் இந்துத்துவ தலைவர்களின் சொந்த வாழ்க்கை என்பது முடை நாற்றம் வீசும் பாதாள சாக்கடையை விட மோசமானது. இந்த பொறுக்கிகளைத்தான் முசுலீம்கள் தாக்க முயற்சிக்கிறார்களாம். இவர்களுக்குத்தான் போலீஸ் பாதுகாப்பாம்.
- ஷாகுல் ஹமீது (ibnsheik@gmail.com)
எழுத்தாளர்: ஷாகுல் ஹமீது
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
வெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2015
No comments:
Post a Comment