Followers

Saturday, July 11, 2015

இரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்! கண் கலங்கினேன்!

இரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்! கண் கலங்கினேன்!

25 வருடங்களுக்கு முன்பு ரியாத்தில் ரமலான் இருபதுக்கு பிறகு இரவு இரண்டு மணிக்கு 'கியாமுல் லைல்' என்ற இரவுத் தொழுகை நடைபெறும். இந்த தொழுகையை நபிகள் நாயகம் அவர்கள் விரும்பி தொழுது வந்துள்ளார்கள். தனது குடும்பத்து பெண்களையும் தொழச் சொல்லி ஏவுவார்கள். சஹாபாக்களும் இந்த தொழுகையை விரும்பி தொழுது வந்தனர். இந்த நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகளை இறைவன் செவி மடுத்து அதற்கு உடன் பதிலளிக்கிறான் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதால் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக பள்ளிக்கு வருவர். இது எனக்கு புதுமையாக இருந்தது. இப்படி ஒரு நிகழ்வை நான் தமிழகத்தில் கண்டதில்லை. தமிழகத்துக்கு ஒரு இஸ்லாம்: சவுதிக்கு ஒரு இஸ்லாமா என்று ஆச்சரியப்பட்டேன்.

அந்த நேரத்தில்தான் தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் உருவானது. நபி மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குர்ஆனின் மொழி பெயர்ப்பு வீடுகள் தோறும் மக்கள் வாங்கி படிக்க ஆரம்பித்தனர். நபிகள் நாயகம் வலியுறுத்திய அந்த இரவுத் தொழுகையை தவ்ஹீத் சகோதரர்கள் தங்கள் வீடுகளுக்கு தங்கள் குடும்பத்தாரோடு இரவு இரண்டு மணிக்கு தொழுது கொண்டிருந்தனர். ஊருக்கு வரும் சமயம் நானும் வீடுகளில்தான் தொழுது கொள்வேன். ஏனெனில் அப்போது தவ்ஹீத் பள்ளிகள் கட்டப்படாத சமயம். ஊரில் பயங்கர எதிர்ப்பு இருந்த சமயம். ரகசியமாகவும் இந்த இரவுத் தொழுகையை தொழுது வந்தோம்.

காலம் உருண்டோடியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த முறைதான் ரமலானில் ஊரில் உள்ளேன். 25 வருடங்களுக்குப் பிறகு இன்று எனது கிராமத்தில் மூன்று தவ்ஹீத் பள்ளிகள் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இரவு ஒன்றரை மணிக்கெல்லாம் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக தவ்ஹீத் பள்ளிகளை நோக்கி நடந்தும், சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், ஆட்டோக்களிலும் அணி வகுத்து செல்கின்றனர். அங்கு பள்ளியில் அன்று நான் ரியாத்தில் பார்த்த காட்சிகளைப் பார்க்கிறேன். இரவு 9 மணிக்கு எவ்வளவு பேர் தொழுவார்களோ அந்த எண்ணிக்கை சற்றும் குறைவில்லாமல் மூன்று வரிசைகள், நான்கு வரிசைகளில் ஆண்களும் பெண்களும் நின்று நள்ளிரவு இரண்டு மணிக்கு தங்கள் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடும் காட்சியைப் பார்த்தேன். அழுது இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இரண்டு கிலோ மீட்டர் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருந்தெல்லாம் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் ஆட்டோக்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ள காட்சியானது கண் கொள்ளாக் காட்சியாகும். ஆனந்தக் கண்ணீர் என் கண்களில் ததும்பியது.

25 வருட சத்திய தவ்ஹீத் பிரச்சாரத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியுமா? இறைவனின் ஆசியும் கிருபையும் இல்லா விட்டால் இது சாத்தியப்படுமா? எண்ணி ஆச்சரியப்படுகிறேன்.

இதற்காக உடலாலும் பொருளாதாரத்தாலும் உழைத்த தவ்ஹீத்வாதிகளுக்கு இறைவன் தனது கருணையை பொழிவானாக! அவர்களின் அந்தஸ்தை மேலும் உயர்த்தி சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!

எல்லா புகழும் இறைவனுக்கே!

------------------------------------------------------------

இது ஒரு புறம் இருக்க....... ராஜகிரி கீழப்பள்ளியின் இமாம் சாஹூல் ஹமீது என்பவரின் பள்ளிவாசலில் நடைபெற்ற ஒரு பயானை கேட்டேன். அதில் அவர் 'எந்த படித்த அறிவுள்ள இளைஞனும் தவ்ஹீத் ஜமாத்தில் இருக்க மாட்டான்: நல்ல குடும்பத்தில் நல்ல குடும்ப பாரம்பரியத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் தவ்ஹீத் ஜமாத்தில் இருக்க மாட்டார்கள். உங்கள் குழந்தைகளை தவ்ஹீத் ஜமாத்தில் சேர விடாதீர்கள்' என்று அல்லாஹ்வுடைய பள்ளியில் நின்று கொண்டு சொல்கிறார். அதனை அந்த ஊர் பள்ளி நிர்வாகிகளும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

மார்க்கம் அனுமதிக்காத வகையில் ஊர் மக்களிடம் பொருளீட்டும் இந்த இமாம் நல்ல பாரம்பரியம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவராம். அதே நேரம் ஏகத்துவ பணிகளுக்காக சொந்த பணத்தை செலவு செய்து உடல் உழைப்பையும் கொடுத்து வரும் என்னைப் போன்றவர்கள் நல்ல இஸ்லாமிய குடும்ப பாரம்பரியம் இல்லாதவர்களாம். இந்த ஒன்றுக்காகவே மறுமையில் இறைவனின் முன்னால் இந்த இமாம் ஷாகுல் ஹமீதுக்கு எதிராக வழக்கு தொடுப்பேன்.

தட்டு, தாயத்து, முரீது வியாபாரங்கள் படுத்து விட்டது. இறந்து போன வீடுகளில் கத்தம் பாத்திஹா என்ற பெயரில் 3ம் நாள், 10 ஆம் நாள், 40 ஆம் நாள் என்று வரிசையாக ஃபாத்திஹா ஓதி காசு பார்த்த காலம் மலையேறி விட்டது. அங்கு சென்று பிரியாணி சாப்பிட்ட காலமும் மலையேறி விட்டது. ஊர் மக்கள் ஃபித்ரா பணத்தை முன்பு பள்ளி இமாமுக்கு மாத்திரமே கொடுத்து வந்தனர். ஆனால் தவ்ஹீத்வாதிகள் வீடு வீடாக வசூலித்து ஒரு லட்சம் இரண்டு லட்ச ரூபாய் வரை வசூல் செய்து ஊரில் உள்ள ஏழைகளுக்கு பிரியாணி அரிசி, மற்றும் சமையல் செய்ய பணம் என்று ஏழை வீடுகளாக தேடிச் சென்று கொடுத்து வருகின்றனர். இதனால் பெருநாள் அன்று எங்கள் ஊர் ஏழைகள் கவுரவமாக பிச்சையெடுக்காமல் அவர்கள் வீட்டில் அன்று சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இது நபிகள் நாயகம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறை. சுய மரியாதை மிளிரக் கூடிய தருணம் இது. வரதட்சணை வாங்காத திருமணங்கள் பல நடந்துள்ளன தவ்ஹீத் வாதிகளின் பிரசாரத்தால். முன்பு தவறுதலாக வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. தர்ஹா வணக்கம் கிட்டத்தட்ட ஒழியும் நிலைக்கு வந்துள்ளது. இதை எல்லாம் பார்த்து அரண்டு போன கீழப் பள்ளி இமாம் ஷாகுல் ஹமீது முன்பு தனக்கு கிடைத்த வருமானங்கள் பாழாகிறதே என்று எண்ணி தனது மனம் போன போக்கில் அல்லாஹ்வுடைய பள்ளியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

ஊரில் ஒரு சிலர் இவரது பேச்சை ஆமோதிக்கலாம். நிர்வாகிகளும் அனுமதியளிக்கலாம். ஆனால் நாளை மறுமையில் இறைவனின் முன்னால் கேவலப்பட்டு இந்த இமாம் நிற்கும் காலமும் வரும். தவ்ஹீத் ஜமாத்தை எதிர்த்தால் ஊரில் எல்லோராலும் பேசப்படும் ஒரு இமாமாக தான் வலம் வரலாம் என்ற அற்ப ஆசையைத்தான் பார்க்கிறோம். சென்ற வாரத்தில் கூட இந்த இமாமை காவல் நியைத்தில் வைத்து இறைவன் இழிவு படுத்தினான். விசாரணை செய்த காவல் துறை அதிகாரி 'நீங்கள் பேசியது தவறு' என்று அறிவுரை கூறக் கூடிய நிலையைத்தான் பார்தோம்.மாற்று மத காவல் துறை அதிகாரி முன்னால் கூனிக் குறுகி குற்ற உணர்ச்சியில் நின்றதைத்தான் பார்தோம். ஏனெனில் சத்தியம் எது என்று தெரிந்து கொண்டே அற்ப உலக ஆதாயங்களுக்காக மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கும் இவருக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் இழிவையே பரிசாகத் தருவான். இவரும் சத்தியத்தை உணர்ந்து நேர் வழியில் வர இந்த இரவுத் தொழுகைகளில் பிரார்த்திப்போமாக!

No comments: