Followers

Thursday, July 02, 2015

மோடி மீது மகாராட்டிர பிஜேபி தலைவர் பகிரங்கக் குற்றச்சாட்டு





மகாராட்டிர பிஜேபி தலைவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

மும்பை ஜூன் 28 மோடி மற்றும் அமித்ஷா குறித்து பாஜக மகாராஷ்டிரா தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ் புரோகித் பத்திரிகையாளர் ஒருவருடன் உரையாடல் நடத்திய காணொளிக் காட்சி வெளியாகியுள்ளது. இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கொலாபா தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், பாஜகவின் மூத்த தலைவருமான ராஜ் புரோகித் இந்தி செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருடன் நடத்திய காணொளிக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது: மத்தியில் மக்களாட்சி தற்போது நடைபெற வில்லை, பாஜக தலைமையில் சமத்துவமில்லாத சூழல் நிலவுகிறது. பாஜகவின் பிரபல தலைவர்கள் அனைவரும் ஓரம்கட்டப் பட்டு நேற்று வந்த சிலர் ஆட்சி அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளனர். அதிகாரம் தனிப்பட்ட நபர்கள் கையில் இருந்தால் ஜனநாயகம் சீர் குலைந்துபோகும், இதை நாம் எமர்ஜென்சி காலத்திலேயே பார்த்து விட்டோம். தற்போது பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகம் உள்ளது.

இது வெளிப் படையாக தெரியத் துவங்கி விட்டது. இவ்வளவு நடந்த பிறகும் உண்மையை மறைக்கவேண்டிய அவசியமில்லை. டில்லித் தலைமை தற்போது மோடி, அமித்ஷா இருவரின் கையில் சென்று விட்டது. இவர்கள் இருவரும் வைத்தது தான் சட்டமாகிவிட்டது. மூத்த தலைவர்களுக்கு அங்கே மரியாதையில்லை.

மக்களாட்சி இல்லை

பாஜகவில் மக்களாட்சிக்கு இடமில்லாமல் போய்விட்டது. தேர்தலில் அனைவருடன் சேர்ந்து வளர்ச்சியைக் காண்போம் என மோடி கூறினார். ஆனால், தற்போது அவர் மற்றும் அமித்ஷா மாத்திரமே எல்லாம் செய்யவேண்டும். எதிர் காலத்தில் பாஜக என்றாலே தங்கள் இருவர் பெயர் மட்டும் தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்; அவர்கள் இருவரும் தங்கள் தவற்றை திருத்திக் கொள்ள வேண்டும். இது ஜனநாயக நாடு, இங்கே கருத்துப் பரிமாற்றம் மூத்தவர்களின் ஆலோசனை மற்றும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும். மக்கள் எதற்காக காங்கிரசை வெறுத்து நமக்கு வாக்களித்தனர்.

நாம் நல்லாட்சி கொண்டு வருவோம் என்பதற்காகத்தான். ஆனால், மோடியோ பெரும் வியாபாரிகளுக்கு மாத்திரம் நல்லது செய்கிறார். தவறுகளைத் தவிர்த்துவிட்டு மக்கள் நலப்பணிகளை செய்ய வேண்டும். பொதுமக்களும் சிறுவியாபாரிகளும் பாஜகமீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள்? சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். கருப்புப் பணத்தைக் கொண்டுவரும் வழியைக் காணோம். ஆனால் பெரிய தொழிலதிபர்களுக்கு சலுகைகளைக் கொடுக்கிறார்கள். இதன் மூலம் பெரிய வியாபாரிகள் அதிக லாபம் பார்த்து பணத்தைப் பதுக்க முயல்வார்கள். நாட்டின் 90 விழுக்காடு சிறுவியாபாரிகள் மோடி அரசின் மோசமான நிதிக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர் கூறியதாவது:

நாளுக்கு நாள் பாஜக வின் புகழ் அதல பாதாளத்தில் சரிந்து கொண்டு வருகிறது. ஆனால் கட்சியினர் இந்தச் செய்தியை தலைமையிடம் பேச பயப்படுகின்றனர். அப்படிப் பேசினால் தங்கள் பதவி போய்விடும் என்று அஞ்சுகின்றனர். காரணம் பதவியை வைத்து அவர்கள் பிழைக்கின்றனர். மும்பையில் இருந்து தான் பாஜகவிற்கு பெருமளவில் நிதி போய்ச் சேர்கிறது. ஆனால் மோடியோ தனது மாநிலத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கிளிப்பிள்ளைபோல் மாறிவிட்டார்கள் அவர்கள் மோடி சொல்வதையும் கட்டளையிடுவதையும் நிறைவேற்றுவதில் போட்டி போடுகிறார்கள். அவர்களுக்கு பதவிதான் முக்கியம். இது போன்ற காரணத்தால் பாஜக நாடு முழுவதும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது என்று கூறினார்.

கட்சியில் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துவோர் யார்?

அவர் பாஜக மற்றும் சில மாநிலக் கட்சித் தலை வர்களைப் பற்றிக் கூறும்போது பிறப்பினால் அரசியல் குடும்பத்தைச் சாராத தங்களுடைய சமூகத்தில் அவரவர்களுக்கு இட்ட பணிகளைச் செய்யாமல் பலரும் அரசியலில் வந்து விட்டார்கள். இதனால் அரசியலில் பெருங்குழப்பம் நிலவுகிறது. இவர்களால் கட்சிக்கும் பெருமையில்லை, அவர்கள் சமூகத் திற்கும் பெருமையில்லை, அரசியல் நடத்த குடும்பப் பாரம்பரியம் வேண்டும், ஆனால் எந்த ஒரு அரசியல் தொடர்பும் இல்லாமல் கட்சிப்பணியில் இறங்கி மேலிடத்தில் நல்ல பெயர் வாங்கி பதவிக்கு வந்துவிடுகிறார்கள். இவர்களால் கட்சிக்கு அவப் பெயர் தான் உருவாகிறது. கட்சியில் சில தொழிலதிபர்கள் பெரிய பதவிகளை பெற்றுவிட்டனர். அவர்கள் கட்சிப்பணியை ஆற்றமாட்டார்கள், இந்தப் பதவிமூலம் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்வார்கள், அரசியலுக்கு என்று பாரம்பரிய குணம் உள்ளது அவர்கள் மாத்திரமே அரசியலுக்கு வரவேண் டும் அப்படி இல்லாதவர்கள் அவர்களுக்கான பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யவேண்டும்.

இந்தக்காணொளி இன்று காலைவெளியான பிறகு மகாராஷ்டிரா பாஜக தலைவர் ஆஷிஷ் சோலார் கூறியதாவது இது ராஜ் புரோகித்திடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். அவர் என்ன மனநிலை யில் இதைக் கூறினார் என்று தெரியவில்லை என்றார்.

இருப்பினும் அவரிடமிருந்து விளக்கம் வந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அரசியலில் ஜாதிச் சாயம் பூச முயலும் ராஜ் புரோகித்தின் இந்தப் பேட்டியின் காரணமாக மகராஷ்டிராவைச் சேர்ந்த பல்வேறு மாநிலக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள் ளன. மும்பையில் உள்ள ராஜ் புரோகித்தின் கட்சி அலுவலகத்தை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் கட்சித் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அவர் கள் கூறியதாவது அரசிய லுக்கு வரத் தகுதி வேண்டும் என்று மறைமுகமாக ராஜ்தாக்கரேவைக் குறிப் பிட்டுத்தான் பேசியுள்ளார்.

அரசியலுக்கு வர என்ன தகுதிவேண்டும் என்று அவரே விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும், அவர்களின் பிரதமர் மோடி என்ன அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவரா? அல் லது பாஜக தலைவர் அமித்ஷா அரசியல் குடும் பத்தில் இருந்து வந்தவரா? என்று கேள்வி கேட்டனர். பாஜக விரைவில் ராஜ் புரோகித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட் டத்தில் கலந்துகொண்ட ராஜ்தாக்கரே கட்சித் தொண்டர்கள் கூறினார்கள்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
விடுதலை
27-06-2015

No comments: