Followers

Monday, July 11, 2016

இரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்! கண் கலங்கினேன்!

இரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்! கண் கலங்கினேன்!

(சென்ற வருடத்திய மீள் பதிவு!)

25 வருடங்களுக்கு முன்பு ரியாத்தில் ரமலான் இருபதுக்கு பிறகு இரவு இரண்டு மணிக்கு 'கியாமுல் லைல்' என்ற இரவுத் தொழுகை நடைபெறும். இந்த தொழுகையை நபிகள் நாயகம் அவர்கள் விரும்பி தொழுது வந்துள்ளார்கள். தனது குடும்பத்து பெண்களையும் தொழச் சொல்லி ஏவுவார்கள். சஹாபாக்களும் இந்த தொழுகையை விரும்பி தொழுது வந்தனர். இந்த நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகளை இறைவன் செவி மடுத்து அதற்கு உடன் பதிலளிக்கிறான் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதால் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக பள்ளிக்கு வருவர். இது எனக்கு புதுமையாக இருந்தது. இப்படி ஒரு நிகழ்வை நான் தமிழகத்தில் கண்டதில்லை. தமிழகத்துக்கு ஒரு இஸ்லாம்: சவுதிக்கு ஒரு இஸ்லாமா என்று ஆச்சரியப்பட்டேன்.

அந்த நேரத்தில்தான் தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் உருவானது. நபி மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குர்ஆனின் மொழி பெயர்ப்பு வீடுகள் தோறும் மக்கள் வாங்கி படிக்க ஆரம்பித்தனர். நபிகள் நாயகம் வலியுறுத்திய அந்த இரவுத் தொழுகையை தவ்ஹீத் சகோதரர்கள் தங்கள் வீடுகளுக்கு தங்கள் குடும்பத்தாரோடு இரவு இரண்டு மணிக்கு தொழுது கொண்டிருந்தனர். ஊருக்கு வரும் சமயம் நானும் வீடுகளில்தான் தொழுது கொள்வேன். ஏனெனில் அப்போது தவ்ஹீத் பள்ளிகள் கட்டப்படாத சமயம். ஊரில் பயங்கர எதிர்ப்பு இருந்த சமயம். ரகசியமாகவும் இந்த இரவுத் தொழுகையை தொழுது வந்தோம்.

காலம் உருண்டோடியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த முறைதான் ரமலானில் ஊரில் உள்ளேன். 25 வருடங்களுக்குப் பிறகு இன்று எனது கிராமத்தில் மூன்று தவ்ஹீத் பள்ளிகள் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இரவு ஒன்றரை மணிக்கெல்லாம் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக தவ்ஹீத் பள்ளிகளை நோக்கி நடந்தும், சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், ஆட்டோக்களிலும் அணி வகுத்து செல்கின்றனர். அங்கு பள்ளியில் அன்று நான் ரியாத்தில் பார்த்த காட்சிகளைப் பார்க்கிறேன். இரவு 9 மணிக்கு எவ்வளவு பேர் தொழுவார்களோ அந்த எண்ணிக்கை சற்றும் குறைவில்லாமல் மூன்று வரிசைகள், நான்கு வரிசைகளில் ஆண்களும் பெண்களும் நின்று நள்ளிரவு இரண்டு மணிக்கு தங்கள் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடும் காட்சியைப் பார்த்தேன். அழுது இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இரண்டு கிலோ மீட்டர் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருந்தெல்லாம் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் ஆட்டோக்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ள காட்சியானது கண் கொள்ளாக் காட்சியாகும். ஆனந்தக் கண்ணீர் என் கண்களில் ததும்பியது.

25 வருட சத்திய தவ்ஹீத் பிரச்சாரத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியுமா? இறைவனின் ஆசியும் கிருபையும் இல்லா விட்டால் இது சாத்தியப்படுமா? எண்ணி ஆச்சரியப்படுகிறேன்.

இதற்காக உடலாலும் பொருளாதாரத்தாலும் உழைத்த தவ்ஹீத்வாதிகளுக்கு இறைவன் தனது கருணையை பொழிவானாக! அவர்களின் அந்தஸ்தை மேலும் உயர்த்தி சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!
எல்லா புகழும் இறைவனுக்கே!

No comments: