Followers

Thursday, November 22, 2018

களம் இறங்குவோம் !! கண்ணீர் துடைப்போம் !!

சுற்றறிக்கை 416-  2018

களம் இறங்குவோம் !! கண்ணீர் துடைப்போம் !!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களும் சோகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றன. மின்சாரம் கிடைக்க இன்னும் ஒரு மாதமாவது ஆகும் என்ற அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக 15 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள் மண்ணில் வீழ்ந்து கிடப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் வீடு வாசல்களை இழந்து, உணவுக்கும் தண்ணீருக்கும் கூட வழியில்லாமல் நிர்கதியாய் நிற்கின்றனர்.

நமது ஜமாஅத்தின் கொள்கைச் சொந்தங்கள், மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளைத் தொய்வின்றி தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தப் புயலின் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பொறுப்பு நமக்குக் கூடுதலாக வந்து சேர்ந்துள்ளது.

மறுமை சிந்தனை இல்லாத மக்கள் கூட இன்று மனிதாபிமான சிந்தனையோடு களம் இறங்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகள் துயர் துடைக்க வீதிகளில் கையேந்தி நிற்கிறார்கள்.

பல ஊர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவும், தண்ணீரும் இல்லாமல் பரிதவிக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் பணி செய்ய வேண்டிய அரசாங்கம் ஆமை வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் செய்யும் உதவிகள் யானைப் பசிக்கு சோளப்பொறியாகத் தான் இருக்கிறது.

தமிழமெங்கும் பல மாவட்டங்களிலிருந்து புறப்பட்டு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் குவிந்துள்ள நமது ஜமாஅத் தொண்டர்கள் மீட்புப் பணியில் களமிறங்கி, இரவு பகலாகச் சுழன்று களப்பணி ஆற்றிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் எவ்வளவு தான் உழைத்தாலும் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரி செய்வதற்கு அதிக அளவில் பொருளாதாரம் தேவைப்படுகின்றது.

மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் என்று அனைவரும் களத்தில் நிற்கிறார்கள். அனுப்பப்படும் அனைத்துப் பொருட்களும் உடனுக்குடன் விநியோகம் செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, உணவு பொருட்கள், அரிசி, பால் பவுடர், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள், புதிய ஆடைகள் என அவர்களுக்கு தேவையான பொருட்களை சேகரியுங்கள். நமது சக்திக்கு மீறியதாக இருந்தாலும் இந்த சமயத்தில் அவர்களுக்கு உதவித்தான் ஆக வேண்டும். நேரில் பார்த்த உள்ளங்கள் பரிதவிக்கின்றன. பல கிராமங்களை தத்து எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

பஞ்சப் பராரிகளாய் வந்த முளர் கூட்டத்தின் ஏழ்மை நிலையைப் பார்த்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிப் போய் மக்களிடம் தர்மம் செய்யுமாறு அறிவுரை செய்தார்கள். அதைக் கேட்ட நபித்தோழர்கள்,  தங்கக் காசுகள், வெள்ளிக்காசுகள், பேரீச்சம் பழம், கோதுமை போன்ற உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள். தர்மப் பொருட்கள் மலையளவு குவிந்தது. அதைப் பார்த்த பின்னர் தான் நபியவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னியது என்ற செய்தியை ஹதீஸ்களில் (முஸ்லிம் 1848) நாம் பார்க்கிறோம்.

எனவே, நபிவழியைப் பின்பற்றும் நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாரி வழங்குவதுடன், மக்களிடம் அறிவிப்புச் செய்து உணவு, ஆடை போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் பொருளாதாரத்தையும் திரட்டி, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் டெல்டா மற்றும் கடலோர மாவட்ட மக்களின் துயரைத் துடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வார ஜூம்மா வசூலையும் கஜா புயலுக்கு  என்று வசூல் செய்து மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கவும்.

இன்ஷா அல்லாஹ்

களம் இறங்குவோம் !! கண்ணீர் துடைப்போம் !!

இப்படிக்கு,
இ. முஹம்மது
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

No comments: