'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, January 18, 2016
தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை....
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலித் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் வன்முறையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டிருந்த ரோஹித் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2-ம் தேதியன்று ரோஹித் உள்ளிட்ட 5 பேரும் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் (ASA) சேர்ந்தவர்களாவர்.
இந்நிலையில், ரோஹித் வெமுலா விடுதி அறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்பு எனக் கூறிய அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அறையில் இருந்து ரோஹித் உடலை அப்புறப்படுத்தவிடாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீஸார், மாணவர்கள் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பதற்றத்தை தணிக்கை போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இடைநீக்கத்தின் பின்னணி:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்தில் முசாபர்நகர் பாக்கி ஹை ‘Muzzafarnagar Baqi Hai’ என்ற விளக்கப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. இத்திரைப்படத்தை திரையிடுவது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மற்றும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (ASA) சேர்ந்தவர்களிடையே மோதல் வெடித்தது.
இதனையடுத்து அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 5 பேர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து கல்லூரி விடுதியில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஐவரும் கல்லூரி வளாக்த்திலேயே கூடாரம் அமைத்து தங்கி வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
துணை வேந்தர் ராஜினாமா செய்ய கோரிக்கை:
பல்கலைக்கழகத்தில் இருந்தும், தங்கும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டதாலேயே ரோஹித் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் பல்வேறு மாணவ கூட்டமைப்பினர், இதற்கு பொறுப்பேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் பி.அப்பா ராவ், தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் மீது குற்றச்சாட்டு:
தலித் மாணவர்கள் 5 பேரும் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செகந்தராபாத் தொகுதியில் மக்களவை எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எழுதிய கடிதத்தில், "ஹைதராபாத் பல்கலைக்கழக வளாக தரத்தை மேம்படுத்த வேண்டுமானால் 5 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்" என வலியுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே தலித் மாணவர்கள் ஐவரும் நீக்கப்பட்டனர் என மாணவ தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
தற்கொலை குறிப்பு:
ரோஹித் வெமுலாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் குண்டூர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரோஹித், பல்கலைக்கழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வு அறிஞர்களுக்கான (JRF) உதவித்தொகையை பெற்றுவந்தார்.
அவர் எழுதிய 5 பக்க தற்கொலைக் குறிப்பில், "என் கண்கள் எப்போதும் நட்சத்திரங்களையே கண்டு கொண்டிருந்தன. ஒரு நாள் எழுத்தாளராக, பெயர்பெற்ற கல்வியாளராக உருவாக வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக எனக்கு ஜெ.ஆர்.எஃப் உதவித்தொகைகூட வழங்கப்படவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.
144 தடை உத்தரவு அமல்:
ரோஹித் தற்கொலையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
Keywords: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், தலித் மாணவர் தற்கொலை, அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஜாதி, அரசியல், பாஜக
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
18-01-2016
காதல் தோல்வியால் இந்த மாணவர் இறந்தார் என்று வழக்கை மூடி விடுவார்கள். இந்த தற்கொலைக்கு ஸ்மிருதிராணியும் பிஜேபியும் பொறுப்பேற்க வேண்டும். ஐந்து மாணலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டால்தான் கல்லூரியின் தரம் உயரும் என்று அறிக்கை ஸ்மிருதிராணிக்கு அனுப்பப்பட்டு அந்த அமைச்சகத்தின் உத்தரவிலேயே ஐந்து மாணவர்களும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்து மதத்தில் எந்த உரிமையையும் கொடுக்காமல் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவதற்கென்றே தலித்களை சேர்த்து வைக்கும் காலமெல்லாம் இது போன்ற கொடுமைகளுக்கு பஞ்சமிருக்காது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment