Followers

Tuesday, January 05, 2016

கோவில்கள் சாமி கும்பிட மட்டும் இல்லை - ராம் நிவாஸ்

//கோவில் வெறும் சாமி கும்பிடுற இடமாக மட்டும் இருக்கவில்லை....
அரசனோட காலத்துல கஜானா... இயற்கை சீற்றத்துக்கான அடைக்கல கூடம்....
போர்காலத்துல எதிரி படைகளின் நகர்வை கவனிக்கும் வாட்சிங் டவர்னு கோவில் திட்டமிட்டு நிர்மானிக்கப்பட்டது....
போதாக்குறைக்கு அங்கிருந்து செல்வத்தை இடம்மாற்ற சுரங்கப்பாதைகள் வேறு....//

-Rajendra Ramnivas

ராம் நிவாஸ் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை பேச ஆரம்பித்திரக்கிறார். வாழ்த்துவோம்.

இப்போ அவருடைய வாதப்படி அந்த காலத்தில் கோவில்கள் கடவுளை கும்பிடும் இடமாக மட்டும் இல்லை. அரசின் கஜானாவும் கோவில்தான். மன்னர்கள் அடைக்கலம் அடைவதும் அங்குதான். எனவேதான் சுரங்கப் பாதைகள் எல்லாம் வைத்து கட்டுவார்கள். எதிரி நாட்டை கைப்பற்றி விட்டால் தப்பி ஓடுவதற்கு இந்த சுரங்கங்கள் பயன்பட்டது.

அந்த காலத்தில் ஒவ்வொரு நாடாக பிடித்து அதனை தன் வசமாக்கிக் கொள்வதுதான் அரசர்களின் வேலையே... 'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' சேரர்களும் சோழர்களும் பாண்டியர்களும் பல்லவர்களும் மராட்டியர்களும் பல கோயில்களைக் கொள்ளையடித்துள்ளார்கள். பல கோவில்களை இடித்தும் இருக்கிறார்கள். இதே போல் தான் ஆப்கனில் இருந்து வந்த ஒரு சில முஸ்லிம் அரசர்கள் கோவிலை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. ஒரு சிலர் கொள்ளையும் அடித்துள்ளார்கள். இது அந்த கால மரபு. இஸ்லாமியர் வந்து கொள்ளையடித்ததை அழுத்தமாக சொல்லும் நமது வரலாறு இந்துக்கள் இதை விட அதிகமாக கோவிலை கொள்ளையடித்ததையும் அதனை இடித்ததையும் சொல்வதில்லை.

இனிமேலாவது வரலாற்றை புதிதாக எழுதக் கூடியவர்கள் இரு பக்க நியாயாத்தையும் அலசி ஆராய்ந்து எழுத முனைவார்களாக!

-----------------------------------------

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.

ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.

No comments: