

26-11-2015 அன்று குஞ்சம்மாள் என்ற என்பது வயதைக் கடந்த மூதாட்டி இயற்கை எய்தியுள்ளார். ஊரே வெள்ளக்காடாக இருந்த நேரம் அது. குஞ்சம்மாள் சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல முயற்சிக்கின்றனர், ஆதிக்க சாதியினர் தடுக்கின்றனர். குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகி புகார் கொடுக்கிறார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் மூன்று நாள் கடக்கிறது. பிணம் அழுகிக்கொண்டிருந்த நிலையில் “சடலத்தை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்லுங்கள்; இல்லையேல் நாங்களே அடக்கம் செய்வோம்” என்று தாழ்த்தப்பட்ட மக்களை நிர்பந்திக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்ற சூழலில் 29-11-2015 அன்று உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் பிணம் எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வயல்வெளி வழியாகச் சென்று அடக்கம் செய்யப்படுகிறது.
அடுத்த ஒரு மாதத்தில் 90 வயதைக் கடந்த குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து 03-01-2016 அன்று இயற்கை எய்துகிறார். பேரன் கார்த்தி இரவோடு இரவாக சென்னை சென்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 04-01-2016 அன்று நீதிமன்றம் “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லமுத்துவின் சடலம் கவுரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அவசர கோலத்தில் வயல்வெளியில் பாதை ஏற்படுத்தி உள்ளனர். வாய்க்கால்களில் மண்மூட்டைகளை அடுக்கி, சாலைகளை இணைத்துள்ளனர். தங்கள் நிலையில் உறுதியாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லமுத்து சடலம் வைத்துள்ள வீட்டில் ஒன்று குவிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மின்சாரத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி பகுதிக்கு மின் தொடர்பை துண்டித்துள்ளனர். “ஊரில் சாவு மின்தொடர்பை துண்டிக்கக் கூடாது” என்று கடைநிலை ஊழியர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “மேலிட உத்தரவு அமல்படுத்துங்கள்” என்று கடைநிலை ஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தங்களது இயலாமையையும், கையறு நிலையையும் கண்கலங்கியபடியும், தயக்கத்துடனும் மின்துறை ஊழியர்கள் வெளிப்படுத்தினர். திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் பட்டியலில் மின்வாரிய அதிகாரிகளையும் இணைக்கப்படவேண்டும்.
குளிர்சாதனப் பெட்டி செயல்படாமல் பிணம் அழுகத் தொடங்குகிறது. ஆகையால் அங்கிருந்த இளைஞர்கள் ஐஸ்கட்டிகளை வாங்கி வந்து சடலத்தைப் பாதுகாத்துள்ளனர். “இங்கேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கிறோம். நாங்களும் அதிலேயே விழுந்து சாகிறோம்” என்று பெண்கள் மண்ணெண்ணெயுடன் களத்தில் இறங்கியுள்ளனர். செல்லமுத்து சடலம் இருந்த இடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு மக்கள் விரட்டப்பட்டுள்ளனர். மேலத்தெரு, வடக்குத்தெரு மற்றும் பிற பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
நிலைமை கட்டுமீறவே மக்களிடம் பொதுப்பாதை வழியாக அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து சாலை பிரியும் இடத்தில் தடிஅடி நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களைக் கைது செய்து சடலத்தைக் கைப்பற்றி வயல்வழியே எடுத்துச் சென்றது காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், தேவர் – இமானுவேல் குருபூசை பாதுகாப்பு புகழ் ஜெயசந்திரன் காவல் துறையினரைப் பிணம் தூக்க வைத்து சாதனை படைத்துள்ளார். குஞ்சம்மாள் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே செல்லமுத்துவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.
500-க்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்து சம்பவத்தை வெளியுலகிற்கு அறிவித்தனர். மயிலாடுதுறையிலும், திருவாரூலும் சமூக ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தில் நிலவிய கள்ள மௌனத்தைக் கலைத்துப் பொது விவாதத்தைத் தூண்டியுள்ளது.
நன்றி வினவு
http://www.vinavu.com/2016/01/21/thirunalkondacheri-caste-atrocity-report/
இப்படி ஒரு கொடுமை உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா? அவர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தானே! இறந்த பிணத்தை தெரு வழியாக தூக்கிச் செல்வதில் அப்படி என்ன கௌரவம் குறைந்து போய் விடும். திட்டமிட்டு பிணம் அழுக வேண்டும் என்பதற்காக மின்சாரத்தையும் துண்டித்திருக்கிறார்கள்? வயல் பாதை கரடு முரடாக இருக்கும் என்பதால் மணல் மூட்டைகளை போட்டு தற்காலிக சாலை அமைத்துள்ளதை பாருங்கள். சிரமப்பட்டு மணல் மூட்டை கொண்டு சாலைகள் அமைப்பார்கள். ஆனால் தெரு வழியாக பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். என்னவொரு அழகிய மனிதாபிமானம்.
மனித குலம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வு இது.
1 comment:
கால முன்னேற்றம் என்ற கதிரவன்
இவர்கள் வாழ்வில் இனனும்
உதிக்கவேயில்லை.
இவர்கள் தங்களை இந்துக்கள் என்றோ இந்தியா்கள் என்றோ நினைத்துக் கொள்வதில்லை.
வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாவோம்என்பதுதான் கொள்கை.பழமையில் உள்ள பயித்தியக்காரத்தனங்களை அடையாளம் காண இயலாத நிலையில் இருக்கும் அப்பாவி குழந்தைகள் இவர்கள்.
Post a Comment