'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, January 11, 2016
மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!
மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!
'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'
-குர்ஆன் 103:1,2,3
காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இறைவன் 'காலத்தின் மீது சத்தியமாக' என்று இந்த வசனத்தை ஆரம்பிக்கிறான். அன்றைய அரபுகள் தவறான காரியங்களைச் செய்யக் கூட சத்தியம் இட்டு சொல்வார்கள். அவர்களின் இந்த தவறை சுட்டிக்காட்டும் முகமாகவும் இறைவன் 'காலத்தின் மீது சத்தியமாக!' என்று ஆரம்பிக்கிறான். தொழுகையும் நேரம் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் தொழுகையை முடிக்க வேண்டும் என்பது நமக்கு இடப்பட்ட கட்டளை. ஒருவன் காலத்தை சரிவர உபயோகப்படுத்தினால் அவன்தான் வெற்றி பெறுகிறான் என்ற படிப்பினையும் இங்கு வருகிறது.
நமது வள்ளுவரும் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல குறள்களை நமக்கு தந்துள்ளார்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது
என்றும்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
காலமறிதல்: அதிகாரம் 48
வெற்றி வாகை சூடக் கருதும் அரசன் அதற்குச் சாதகமான காலத்திற்க்காக காத்திருந்து இடம் அறிந்து செயல்பட்டால் வெற்றி பெற முடியும். விழிப்புடன் செய்தால் கைகூடாதனவும் கைகூடும் என்பது கருத்து.
இனி மேலே கூறிய குர்ஆன் வசனம் இறங்கிய காரணத்தைப் பார்ப்போம்:
அபுபக்கர் அவர்களின் பழைய தோழரான கல்தா இப்னு உஸைத் என்பவர் ஒரு நாள் அபுபக்கரிடம் சற்று கிண்டலாக 'நண்பரே! முன்னர் உமது திறமையாலும் உழைப்பாலும் வாணிபத்தில் பெரும் பொருளீட்டி வந்தீர். இஸ்லாத்தை ஏற்றதால் தற்போது பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்படுகிறீர். முன்னோர்களின் தெய்வமான லாத், உஜ்ஜா போன்ற தெய்வங்களையும் தற்போது வணங்குவதை விட்டு விட்டீர். மூதாதையர் மார்கத்தை உதறி தள்ளி இஸ்லாத்தில் இணைந்து விட்டீர். இதனால் நமது தெய்வங்களின் அன்பையும், சொந்தங்களின் ஆதரவையும் இழந்து பெரும் நஷ்டத்தில் அல்லவா உள்ளீர்?' என்று கேட்டார். இந்துத்வாவாதிகளில் சிலர் நம்மை பார்த்து கேட்பதைப் போல் அன்று அரபிகளும் கேட்டுள்ளார்கள்
கல்தாவின் கிண்டலான சொற்களைக் கேட்ட அபுபக்கர் அவர்கள் 'சத்தியத்தை ஏற்று நற்செயலாற்றுவோர் ஒருபோதும் நஷ்டமடைய மாட்டார்' என சட்டென பதிலளித்தார்கள். இந்த உரையாடலின் பின்னணியை வைத்தே இந்த வசனம் அருளப்பட்டதாக பத்ஹூல் அஜீஸ் என்ற நபிமொழி விளக்கவுரை நூல் கூறுகிறது.
குர்ஆனின் மிகச்சிறிய அத்தியாயமான இந்த வசனங்கள் மனிதன் வெற்றிபெறும் இலக்கை துல்லியமாக காட்டுகிறது. ஏக இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையை போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர மற்ற அனைவரும் நஷ்டவாளிகளே! என்பது இந்த வசனத்தின் சுருக்கமான விளக்கம்.
இரண்டு நபித்தோழர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அல் அஸர்' என்ற இந்த அத்தியாயத்தை ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்திக் கொள்ளாமல பிரியமாட்டார்களாம். அந்த அளவு இந்த அத்தியாயத்தை நபித் தோழர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதனால்தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிப் பெற்றார்கள்.
ஏக இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து உண்மையை போதித்து பொறுமையையும் போதிக்கும் மக்களாக உங்களையும் என்னையும் இறைவன் ஆக்கி அருள்புரிய வேண்டும் என்று நாம் பிராரத்திப்போமாக!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நபித் தோழர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதனால்தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிப் பெற்றார்கள்.
பச்சைப் பொய். அரேபிய வரலாற்றபை் படித்தால் முகம்மது அவர்களின் இறப்புக்கு பின்னா் எற்பட்ட அதிகாரச் சண்டையில் இவரகள் அநியாயங்களைச் செய்து மகம்மது நபியின் குடும்பத்தினா் அனைவரையும் கொல்ல நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்திருக்கினறாா்கள்.இவர்கள் அவைவரும் பாவிகள் என்றுதான் சொல்ல வேண்டும்
Post a Comment