Followers

Sunday, May 21, 2017

நபிகள் நாயகம் அவர்களின் எளிய வாழ்க்கை!

நபிகள் நாயகம் அவர்களின் எளிய வாழ்க்கை!

ஒரு முறை நபித் தோழர் உமர்பின் கத்தாப் அவர்கள் முகமது நபி அவர்களின் இல்லத்திற்கு வந்திருந்தார். வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்தார். மகமது நபி அவர்களின் வீட்டில் பதனிடப்பட்ட மூன்று தோல் துண்டுகளும் வீட்டின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடி பார்லிஅரிசியும் கிடந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். வேறு பொருட்கள் எதுவும் தென்படவில்லை. உமர் அழத் தொடங்கினார். 'உமரே ஏன் அழுகிறீர்கள்?' என்று முகமது நபி கேட்டார். அதற்கு உமர் 'இறைவனின் தூதரே! நான்ஏன் அழக் கூடாது? அழாமல் வேறென்ன செய்வது? தங்கள் திரு மேனியில் பாயின் அச்சு பதிந்திருப்பதைப் பார்க்கின்றேன். மேலும் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களையும் பார்க்கின்றேன். இறைவனின் தூதரே! வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை நமக்கு அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்தியுங்கள். பாரசிகர்களும், ரோமானியரும் இறைவனை வணங்குவதில்லை. அவர்களுக்கு உண்மையான நம்பிக்கையும் கிடையாது. என்றாலும் ரோமானியப் பேரரசர்களும் பாரசீகப் பேரரசர்களும் அற்புதமான நீரோடைகளுக்கிடையே அமைந்துள்ள அழகிய வீடுகளில் வாழ்கின்றனர். ஆனால் இறைவனின் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள், இறைவனின் அடிமை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தாங்கள் வறுமையில் வாழ்கிறீர்கள்.' என்று முகமது நபியைப் பார்த்துக் கூறினார்.

அதுவரை தலையணையில் சாய்ந்திருந்த முகமது நபி அவர்கள் சட்டென எழுந்து அமர்ந்து பின் வருமாறு கூறினார்: 'உமரே! தாங்கள் இந்த விஷயம் குறித்து இன்னுமா சந்தேகம் கொள்கிறீர்கள்? இந்த உலகில் கிடைக்கும் அமைதியான வசதியான வாழ்க்கையை விட மறு உலகில் கிடைக்கக் கூடிய அமைதியும் வசதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையே சிறந்தது.'
-திர்மதி, ரியாளுஸ் ஸாலிஹீன்

486- ஹதீது எண்.

பிலால் அவர்கள் அறிவிக்கிறார்கள் : முகமது நபி அவர்கள் தமக்குக் கிடைத்த அன்பளிப்புப் பொருட்களைத் தமக்கு எதிர்காலத்தில் பயன்படட்டும் என்று எந்தப் பொருளையும் தமக்கென்று வைத்துக் கொண்டதில்லை. தமக்குக் கிடைத்தவற்றை எல்லாம் ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் வழங்கி விடுவார்.ஒருமுறை முகமது நபி அவர்களுக்கு நான்கு ஒட்டகங்கள் நிறைய பொருட்கள் கிடைத்தன. ஆனால் அவர் அவற்றில் தமக்கென்று எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் பொருட்கள் அனைத்தையும் தேவைப் படுவோருக்கு வழங்காமல் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.'
-ரியாளுஸ்ஸாலிஹீன்
465,466- ஹதீது எண்

முகமது நபி அவர்கள் தம் வாழ்நாளில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் குவித்தவர்.ஆனால் அவர் மரணத் தருவாயில் கடனாளியாக இருந்தார். அவரது கேடயம் மதீனாவில் உள்ள ஒரு யூதக் குடி மகனிடம் அவர் பெற்றக் கடனுக்குப் பகரமாக வைக்கப்பட்டிருந்தது.
-ரியாளுஸ் ஸாலிஹீன்
504 - ஹதீது எண்.

'முகமது நபி அவர்கள் நன்கு அரைக்கப்பட்ட மாவை ரொட்டியாகச் சமைத்து சாப்பிட்டதுண்டா? என ஸஹ்ல் பின் ஸஃத் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'முகமது நபி அவர்கள் மரணிக்கும் வரை அந்த மாவைப் பார்த்ததே இல்லை' எனக் கூறினார்கள். 'அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடை இருந்ததா?' என்று கேட்டதற்கு 'சல்லடைஇருந்ததில்லை' என்று கூறினார். பிறகு 'அப்படியாயின் கோதுமையை எப்படி மாவாக்கினீர்கள்?' எனக் கேட்கப்பட்டதும் 'அதை இடித்த பின் அதில் ஊதுவோம். பறக்கக் கூடிய உமி போன்றவை பறந்ததும் அதில் நீரைச் சேர்த்து குழைத்துக் கொள்வோம்'
ஆதாரம் : புகாரி, அஹ்மத், இப்னுமாஜா

No comments: