Followers

Wednesday, May 17, 2017

மரணம் – சிறுகதை

மரணம் – சிறுகதை

மரணம் - சிறுகதை

'
நமதூர் கீழத் தெருவை சேர்ந்த அப்துல் குத்தூஸ் அவர்களின் தகப்பனார் அப்துல் ரஹ்மான் இன்று இரவு 8 மணியளவில் காலமாகி விட்டார். அன்னாரின் ஜனாஜா(இறந்த உடல்) நாளை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்


பள்ளிவாசலின் ஒலி பெருக்கியிருந்து இந்த செய்தியானது மூன்று முறை சொல்லப்பட்டது. ஊர் முழுக்க ரஹ்மான் பாய் இறந்த செய்தியைப் பற்றியே பேச்சாக இருந்தது. நெருங்கிய உறவினர்களும் அக்கம் பக்கத்து வீட்டாரும் ரஹ்மான் பாயின் உடலைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர்.


அப்துல் குத்தூஸ் ஒரே பையன். கவலை தோய்ந்த முகத்துடன் தகப்பனாரின் அருகில் அமர்ந்திருந்தான். இன்னும் திருமணம் ஆகவில்லை. பிகாம் பட்டதாரி. சவுதியில் ஒரு அலுவலகத்தில் கணக்கராக வேலை பார்த்து வருகிறான். தந்தையின் உடல் நிலை மோசமாவதை அறிந்து மூன்று மாத விடுப்பில் தமிழகம் வந்து 10 நாட்கள் ஆகிறது. பக்கத்தில் இருக்கும் டவுன் ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் வைத்து வைத்தியம் பார்த்து தேறாததால் இறந்த உடலை மட்டுமே அவர்களால் வீட்டுக்கு கொண்டு வர முடிந்தது. குத்தூஸின் தாயார் மர்யம் தனது சொந்தங்களோடு அமர்ந்து அழுது கொண்டிருந்தார். 


வீட்டின் திண்ணையில் அமர்வதற்கு பாய்கள் போடப்பட்டன. தெருவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட நாற்காலிகள் போடப்பட்டன. பக்கத்து வீட்டிலிருந்து குத்தூஸூக்கும் மர்யமுக்கும் மற்றும் உறவினர்களுக்குமாக உணவுகள் கொண்டு வரப்பட்டன. சோகமான சூழல் ஆதலால் சிறிது சாப்பிட்டு விட்டு மற்றவற்றை ஏழைகளுக்கு கொடுத்து விட்டனர்.


இரவு 11 மணி ஆகி விட்டதால் நாளை காலையில் வருவதாக சொல்லி விட்டு பக்கத்து வீட்டுக் காரர்கள் கலைய ஆரம்பித்தனர். இரவு முழுவதும் சோகமாக கழிந்தது குத்தூஸூக்கு.


காலை ஒன்பது மணி. கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. பள்ளிவாசல் நிர்வாகியை சந்தித்து மையவாடியில் குழி வெட்ட அனுமதி கேட்டனர். குத்தூஸ் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவன் என்பதால் நிர்வாகி ஹஸன் சற்று குழப்பத்தோடு 'ஏம்பா..அந்த பையன் தவ்ஹீத் ஜமாத் ஆச்சே...ஏதும் பிரச்னைகள் வராதே' என்று கேட்டார்.


'
பிரச்னை இதுல என்ன இருக்கு பாய்...'


அரை மனத்தோடு அனுமதி கொடுத்தார் ஹஸன். மைய வாடியில் குழி வெட்டும் வேலையும் நடக்க ஆரம்பித்தது. வீட்டில் இறந்த உடலை குளிப்பாட்ட ஆரம்பித்தனர். உடலை வெள்ளைத் துணியால் போர்த்தி கடைசி பார்வைக்காக வைக்கப்பட்டது. மர்யமும் நெருங்கிய உறவினர்களும் உடலின் அருகில் நின்று அழ ஆரம்பித்தனர். சவ பெட்டி கொண்டு வரப்பட்டு அதனுள் இறந்த உடல் வைக்கப்பட்டது. உடல் பள்ளிவாசலை நோக்கி புறப்பட்டது. இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் முகமாக தொழுகை ஒன்று நடத்தப்படும். அதனை இறந்தவரின் சொந்தங்களே நடத்த பிரியப்பட்டால் அதில் மற்றவர் குறிக்கிடக் கூடாது என்று நபி மொழி இருப்பதால் குத்தூஸ் தலைவராக நின்று தொழ ஆயத்தமானான். சிறிய சலசலப்பு. 


'
இது என்னப்பா புது பழக்கமா இருக்கு. தொழுகையை பள்ளி இமாம் (மார்க்க அறிஞர்) தானே வைக்கணும்?'


'
சொந்தங்கள் தொழ வைக்க அனுமதி இருக்குது பாய்'


ஆளாளுக்கு பேச ஆரம்பித்தனர். அதற்குள் 'அல்லாஹ் அக்பர்' (இறைவன் பெரியவன்) என்று கூறி தொழுகையை ஆரம்பித்து விட்டான் குத்தூஸ். உடன் பலரும் தொழுகையில் கலந்து கொண்டு அந்த கடமையை முடித்தனர். 


இதை சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகி ஹஸன் குழப்பத்தோடு 'என்ன செய்யலாம் ஹஜ்ரத்?' என்று கேட்டார்.


'
என்னை கேட்டா? தொழுகை வைத்த அந்த பையனை கேளுங்கள்' என்றார் கோபமாக! இதனை கண்டு கொள்ளாமல் விட்டால் நமது வேலை போய் விடும் என்ற பயம் அந்த இமாமுக்கு.


இமாமுக்கு ஆதரவாக பலரும் குத்தூஸூக்கு ஆதரவாக இளைஞர்களும் பிரிந்து தங்கள் பக்க நியாயத்தை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். பிரச்னை பெரிதாவதை உணர்ந்த நிர்வாகி குத்தூஸிடம் 'நீ எப்படி தொழுக வைக்கலாம்?' என்று கேட்டார்.


'
மார்க்கம் அனுமதிக்குது பாய்'


'
அதெல்லாம் எனக்கு தெரியாது. உடலை அடக்கம் பண்ண நாங்கள் அனுமதிக்க முடியாது. வேறு எங்காவது அடக்கம் செய்து கொள்ளுங்கள்'


இந்த வார்த்தையை கேட்டவுடன் ஒரே கூச்சல் குழப்பம் பள்ளியினுள். 


'
பூட்டை உடைத்து உடலை உள்ளே கொண்டு செல்வோம்' என்று இளைஞர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். நிர்வாகி காவல் துறைக்கு உடன் போன் பண்ணினார். காவல் துறை அதிகாரியும் இரண்டு கான்ஸ்டபிள்களும் அடுத்த அரை மணி நேரத்தில் இடத்திற்கு வந்தனர். காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் பல ஆண்டுகளாக இந்த ஏரியாவில் பணியில் இருப்பதால் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களையும் நன்கு அறிந்தே வைத்திருந்தார். அங்குள்ள தற்போதய பிரச்னையையும் இரு தரப்பையும் அழைத்து பொறுமையாக கேட்டார்.


'
ஹஸன் பாய்! அந்த பையன் தொழுக வைப்பது உங்கள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா' –கண்ணன்


'
எனக்கு தெரியாது சார். இமாமிடம் கேட்போம்! சொல்லுங்க ஹஜ்ரத்' –ஹஸன்


'
இதுவரை இறந்தவர்களுக்கு பள்ளி இமாம்தான் தொழ வைத்துள்ளார். அனைத்து ஊர்களிலும் இது தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது' -பள்ளி இமாம்


'
நான் ஊர் வழக்கத்தை கேட்கவில்லை ஐயா! உங்கள் மார்க்கம் அனுமதிக்குதா என்று தான் கேட்டேன்'


'
அது நபி மொழிகளை எல்லாம் பார்த்துதான் சொல்லணும்' –ஹஜ்ரத்


உடனே அங்கிருந்த ஒரு இளைஞர் முஸ்லிம் நபி மொழி தொகுப்பின் தமிழாக்கத்தை அதிகாரி கண்ணனிடம் கொடுத்தார். 


'
எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 1079, 1078 


இதை படித்துப் பார்த்த அதிகாரி ஆச்சரியத்துடன் 'இவ்வளவு தெளிவா குடும்ப விவகாரத்தில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்று இருக்கும் போது அந்த பையனின் விருப்பத்துக்கு நீங்கள் ஏன் குறுக்கே நிற்கிறீர்கள்?' என்றார்.


'
அப்போ இத்தனை நாள் நாங்கள் செய்தது தவறு என்கிறீர்களா?' -பள்ளி இமாம்


'
தவறு சரி என்று வேறு மதத்துக்காரன் நான் எப்படி சொல்ல முடியும். மார்க்க அறிஞர் நீங்கதான் முடிவை சொல்லணும். நேற்று இறந்த உடல். அதிலும் வயதானவர் கூட. எனக்கு மனது கஷ்டமாக இருக்கிறது. அந்த குடும்பம் எந்த அளவு வேதனைப்படும். இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? அல்லது அவர் கொடுத்த புத்தகம் தவறா?' அதிகாரி கண்ணன். 



இதே ஊரில் தர்ஹாவை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் வேறு சிலர் இமாமுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர்.


'
இவனுங்க எப்பவுமே பிரச்னைதான் சார். தர்ஹாவுக்கு போகக் கூடாதுண்டு சொல்வானுங்க. மார்க்க அறிஞர்களை மரியாதை குறைவா பேசுவானுங்க. பாத்திஹா, ஹத்தம், ஹந்தூரி, மீலாது விழா இதெல்லாம் கூடாதுண்டு சொல்வானுங்க. இதெல்லாம் நாங்க பரம்பரையா செய்துகிட்டு வர்றோம். அதை எப்படி சார் நிறுத்த முடியும்'


'
மற்ற பிரச்னைகள் எல்லாம் என்னவென்று எனக்கு தெரியாது. இப்போ இறந்த உடலை அடக்கம் செய்ய மாட்டேன் என்று யாரும் சொன்னால் இந்திய சட்டப்படி கிரிமினல் குற்றம். 'வன் கொடுமை' சட்டத்துல உள்ளெ புடுச்சு போடுறதுக்கும் சட்டத்துல இடம் இருக்கு. நீங்க எல்லாம் கண்ணியமானவங்க. ஒரு குற்றமும் பதியப்படாத ஊர். நானும் உங்களை மதிக்கிறேன். அந்த மரியாதையை காப்பாற்றிக் கொள்வது ஊர் பெரிய மனிதர்கள் கையில் தான் இருக்கிறது' - என்றார் கண்ணன் சற்று சூடாக.


பள்ளி இமாமுக்கும் நிர்வாகி ஹஸனுக்கும் முகம் சற்று இறுகியது. பிரியாணியும், நெய் சோறும் தினம் சாப்பிட்டு பழக்கப்பட்ட பள்ளி நிர்வாகியின் வாய் களி திங்க விரும்புமா? எனவே சுருதி சற்று குறைந்தது. நிர்வாகியும் பள்ளி இமாமும் ஊர் பெரியவர்களும் கூடி பேசி உடலை அடக்க அனுமதிப்பது என்ற முடிவுக்கு வந்தனர். 


'
சரி சார். நாங்க அனுமதிக்கிறோம்' என்றனர் நிர்வாகிகள் அனைவரும்.


பெரிய சிக்கல் தீர்ந்த மகிழ்ச்சியில் கண்ணன் 'பாருங்க பாய்! முஸ்லிம்களான உங்களை சுற்றி இப்போ பெரும் சதி வலை பிண்ணப்படுகிறது. நான் பெரியார் வழியில் வந்த நாத்திகன். அதனால்தான் உங்களுக்குள் பிரச்னையை பெரிதாக்க விரும்பவில்லை. வேறு அதிகாரிகள் யாராவது இதனையே பெரிய இஸ்யூ ஆக்கி இந்த இளைஞர்களை எல்லாம் உள்ளே தள்ளலாம். அந்த இளைஞர்களின் படிப்பும் எதிர்காலமும் வீணாகும். அனுமதி மறுத்த உங்களையும் உள்ளே தள்ளலாம். சட்டத்தில் அதற்கு இடமும் உண்டு. அல்லது அந்த சட்டத்தை எப்படி வளைப்பது என்பதும் எங்களுக்குத் தெரியும். எனவே இனிமேல் ஏதும் பிரச்னை என்றால் உங்களுக்குள் பேசி சமாதானம் ஆகிக் கொள்ளுங்கள். நாடு கெட்டுக் கெடக்குது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.' என்றார்.


பள்ளி இமாமின் பேச்சைக் கேட்டு தவறிழைத்து விட்டோமோ என்ற யோசனை நிர்வாகி ஹஸனுக்கு வந்தது. 'இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதை ஏன் ஹஜ்ரத் எனக்கு முன்னாடியே சொல்லவில்லை.' என்று இமாமிடம் கேட்டார்.


'
இப்படி ஒரு ஹதீஸ் இருக்குதா? என்று என்னிடம் நீங்கள் ஏன் முன்னாடியே கேட்கவில்லை' என்றார் இமாம். 'கழுவுற மீன்ல நழுவுற மீனாக' இமாம் மாறுவதைப் பார்த்த ஹஸன் வெறுத்துப் போய் தனது தவறை உணர்ந்து கொண்டு வீட்டுக்கு சோகத்தோடு நடையைக் கட்டினார். 


ஒரு நபி மொழியை உயிர்ப்பித்த சந்தோஷத்தில் இளைஞர்கள் இறந்த உடலை அடக்க ஆயத்தமாயினர். ஊர் பொது மக்களும் பிரச்னை சுமூகமாக முடிந்ததை எண்ணி நிம்மதி பெரு மூச்சு விட்டனர். உடல் அடக்கப்படும் வரை அதிகாரி கண்ணன் கூடவே நின்று அங்கு நடப்பதை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். உடலை குழியில் இறக்குவதையும் இறந்த உடலின் மேல் சொந்தங்களே ஆர்வமோடு மண் வெட்டியால் மண்ணை தள்ளுவதையும் பார்த்துக் கொண்டு நின்றார். மற்ற ஊர்களில் உள்ள இளைஞர்கள் ரஜினி ரசிகர் மன்றமும் கமல், அஜீத் ரசிகர் மன்றமும் வைத்துக் கொண்டு குடித்து விட்டு கும்மாளம் அடிப்பதையே பார்த்து பழக்கப் பட்டவருக்கு புரோகிதர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் இந்த இளைஞர்கள் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே தனது சக கான்ஸ்டபிள்களிடம் 'பாருங்கய்யா இந்த பையன்களை! ஊரையே பகைச்சுகிட்டு புரோகிதத்தை ஒழிக்க இவர்கள் காட்டும் ஆர்வத்தில் 10 சதமாவது நாம காட்ரோமாயா! இந்த பையன்களை பார்த்தாவது நாமெல்லாம் திருந்துணும்யா' என்று சொல்லிக் கொண்டே தனது வாகனத்தில் வந்து அமர்ந்தார் கண்ணன்.


(பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய சிறுகதை. மாற்று மத நண்பர்களாலும் பாராட்டப்பட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே!)


No comments: