Followers

Tuesday, May 16, 2017

பக்கீர் முகமது அல்தாஃபி அவர்களின் நேர்காணல்..!!

பக்கீர் முகமது அல்தாஃபி அவர்களின் நேர்காணல்..!! (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் )




கேள்வி : உங்களைப் பற்றிய அறிமுகம்.?


பதில்: என்னுடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில்தான் பள்ளிப் படிப்பை படித்தேன். அங்கு ஐந்தாம் வகுப்புவரை படித்துவிட்டு, அதன்பிறகு இசுலாமிய மார்க்கம் குறித்த கல்விக்காக எனது பெற்றோர்கள் அனுப்பி வைத்துவிட்டார்கள். 


நெல்லை மாவட்டம் தென்காசியில் பத்தாண்டு காலம் மார்க்கக் கல்வியை முடித்தேன், 2002ன் இறுதியில் அது முடிந்தது. 2003ன் துவக்கத்தில் நான் இந்தக் கொள்கை, அமைப்பின்பால் ஈர்க்கப்பட்டு இதில் ஒரு பிரச்சாரகனாக உள்ளே நுழைந்து இன்றுவரையிலும் பணி செய்து கொண்டிருக்கிறேன். 


பள்ளிக்கூடத்தில் படித்தது ஐந்தாம் வகுப்பு வரையிலும்தான். அதன் பிறகு மார்க்கக் கல்வி என்று போய்விட்டேன். அதன் பிறகு சொந்த விருப்பத்தின்பேரில் எட்டாம் வகுப்பை தனியாக படித்து தேர்வு எழுதினேன், பத்தாம் வகுப்பும் எழுதினேன். திறந்த வெளி பல்கலைக்கழகம் முறையில் M.A வரலாறு படித்து அதற்குரிய சான்றிதழைப் பெற்றிருக்கிறேன்.


கேள்வி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் எப்போது துவங்கப்பட்டது,எதற்காக துவங்கப்பட்டது?


பதில்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற இந்த அமைப்பைப் பொறுத்த வரையிலும், இது 1980களின் துவக்கத்தில் கொள்கை ரீதியாக துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு அது பல்வேறு பரிணாமங்கள் அடைந்து பலதரப்பட்ட பெயர்களில் இயங்கியிருக்கிறது. அப்படியே கடந்து கடந்து கடந்து கடைசியாக 2003ல்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயரில் நாங்கள் பணி செய்ய ஆரம்பித்திருக்கிறோம். 


அதற்கு முன்பு பல பெயர்களில் இயங்கியிருக்கிறோம். இது 1980 களின் துவக்கத்தில் இதே கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக துவக்கப்பட்டது. இதனுடைய நிறுவனர் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சார்ந்த பி.ஜெயினுலாபுதீன். அவருடைய பதவிக்காலம் முடிந்ததற்குப் பிறகு நாங்கள் இந்த நிர்வாகத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறோம்.


இதனுடைய துவக்க நோக்கம் என்னவென்று கேட்டால், ஆரம்பத்தில் தூய இசுலாத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது. இசுலாம் என்றால் என்ன?. அது முழுக்க இன்று மாற்று வடிவம் பெற்றிருக்கிறது. மக்கள் மத்தியில் முஸ்லீம்களே முஸ்லீம்களாக இல்லை. குர்ஆன் என்ன என்பதை முஸ்லீம்களே படிக்கவில்லை. நபிகள் நாயகத்தினுடைய போதனைகளை முஸ்லீம்களே விளங்கிக்கொள்ளவில்லை. எதையெல்லாம் இசுலாம் செய்யக்கூடாது என்று சொன்னதோ, அதை எல்லாவற்றையும் இசுலாத்தின் பெயராலேயே செய்துகொண்டிருக்கிறார்கள். 


குறிப்பாக இசுலாத்தில் இறைவன் ஒருவன், அவனுக்கு இணை துணை எதுவும் இல்லை என்பது இசுலாத்தினுடைய முக்கியமான ஒரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டில் யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் முஸ்லீம்களே கிடையாது என்று குர்ஆன் திட்டவட்டமாக அறிவிக்கிறது.


ஆனால் முஸ்லீம் என்று சொல்லிக்கொள்பவர்களே அந்தக் கோட்பாட்டில் தப்பு செய்கிறார்கள். இசுலாத்தின் தீர்ப்பின்படி சொல்வதாக இருந்தால் அவர்கள் முஸ்லீம்களே இல்லை என்றுதான் சொல்லப்படவேண்டும். அந்த அளவுக்குரிய வேலைகளை செய்துவிட்டு முஸ்லீம்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான இசுலாத்தைப் புரிய வைக்க வேண்டும்.


முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் இசுலாம் தப்பாகத்தான் போய் சேர்ந்திருக்கிறது. இசுலாம் என்பது ஒரு தப்பான மார்க்கம், அது ஒரு சகிப்புத்தன்மையற்ற மார்க்கம் என்பது மாதிரியான கருத்துதான் பரவலாக சென்று சேர்ந்திருப்பதனால், தூய்மையான உண்மையான இசுலாத்தினுடைய வடிவத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது, அதை நடைமுறைப்படுத்துவது போன்றவைதான் இயக்கத்தினுடைய பிரதானமான கொள்கை.


தூய்மையான இசுலாம் என்பது வெறுமனே பள்ளிவாசலைக் கட்டுவதும், அங்கு சென்று இறைவனுக்கு வழிபாடு செய்வதும் மட்டுமே இல்லை. அது அல்லாமல் உலகத்தில் மனிதர்களுக்கு என்னென்னவெல்லாம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று எல்லாவற்றையும் இசுலாம் கற்றுத் தருகிறது. இசுலாத்தில் பொருளாதாரம் குறித்த அறிவுரைகள் இருக்கிறது, வழிகாட்டுதல் இருக்கிறது, ஒரு கணவன் மனைவியினுடைய வாழ்க்கை, இல்லறம், விவாகரத்து போன்ற அனைத்து செய்திகளும் சொல்லப்பட்டிருக்கிறது. 


ஒரு குழந்தை வளர்ப்புப் பற்றி பேசப்பட்டிருக்கிறது, சொத்துக்களை பங்கிடக்கூடிய முறை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல் நிர்வாகத்தை எடுத்துச் செல்லவேண்டிய விதம் கற்றுத்தரப்பட்டிருக்கிறது,நண்பர்களோடு எவ்வாறு பழக வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல் அதிலே கற்றுத்தரப்பட்டிருக்கிறது. 


பெற்றோர்கள் முதிய வயதினராக இருந்தால் அவர்களிடத்தில் எப்படியெல்லாம் பணிவோடும், பண்போடும், கனிவோடும் நடக்க வேண்டும் என்று அதுகுறித்த வழிகாட்டுதல் சொல்லப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் சொல்வதாக இருந்தால் ஒரு மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. 


அப்படியானால் ஒருவகையில் எங்களது இயக்கத்தினுடைய நோக்கம், இலட்சியம் என்று சொல்வதற்கு விரிவான பொருள் சொல்வதாக இருந்தால் மனிதனை மனிதனாக வாழவைப்பது, மனிதனுக்குத் தேவையான எல்லா காரியங்களையும் செய்து கொடுப்பது அதுதான் எங்களது இயக்கத்தினுடைய பணியாக இருக்கிறது. அந்த வகையில் நிறைய பணிகளை நாங்கள் செய்கிறோம்.


உதாரணமாக குர்ஆனில் ஒரு செய்தி இருக்கிறது, இந்த மார்க்கத்தை பொய்ப்படுத்தியவன் யார் தெரியமா? என்று இறைவனே கேட்பதாக குர்ஆனில் ஒரு கேள்வி வருகிறது. கேள்வியை கேட்டுவிட்டு அதற்கு இறைவனே பதிலும் சொல்கிறான். என்ன பதில் சொல்கிறான் என்றால், அனாதைகளை யார் விரட்டுகிறாரோ, ஏழை எளியவர்களுக்கு யார் உணவு அளிக்க வில்லையோ அவர் இந்த மார்க்கத்தை பொய்ப்படுத்தியவர்.
விமர்சனத்திற்காக சொல்லவில்லை, புரிந்துகொள்வதற்காக சொல்கிறேன், ஒரு மதத்தை பொய்யாக்கியவர் என்றால் மதத்தினுடைய அடிப்படை கோட்பாடுகளாக இருக்கிற கடவுளைப் பொய்ப்படுத்துதல், அதனுடைய அடிப்படை வழிபாடுகளைப் பொய்ப்படுத்துதலைத்தான் அந்த மதத்தை மறுத்தவன் என்று சொல்வார்கள்.


ஆனால் இசுலாம் என்ன சொல்கிறது என்றால் அனாதைகள் பராமரிக்க வேண்டிய இடத்தில் அனாதைக் குழந்தைகள் இருக்கிறார்கள், நீ அவர்களை வீட்டிற்குள் வரக்கூடாது, உனக்கு ஆதரவு தரக்கூடாது என்று விரட்டியடித்தால் நீ இந்த மார்க்கத்தைப் பொய்ப்படுத்திவிட்டாய். பசியோடு ஒரு ஏழை இருக்கிறார், அவருக்கு உணவு கொடுப்பதற்கு உங்களுக்கு வசதி இருந்தால் உணவு கொடுக்க வேண்டும். உணவு கொடுப்பதற்கு வசதி இல்லையென்றாலும்கூட யாரிடத்தில் அந்த வசதி இருக்கிறதோ அவரை கொடுக்கச் சொல்ல வேண்டும். அந்த வேலையைக்கூட செய்யாவிட்டால் அப்பொழுதும் நீ மறுத்துவிட்டால் இந்த மார்க்கத்தைப் பொய்ப்படுத்திவிட்டாய் என்கிறது இசுலாம்.


இதையெல்லாம் மையமாக வைத்து அனாதை இல்லங்கள் நடத்துகிறோம், முதியோர் இல்லங்கள் நடத்துகிறோம். பேரிடர் நிகழ்வுகள் ஏற்படும்பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்கு களமிறங்கி வேலை செய்கிறோம். முதலுதவி வண்டி(Ambulance) வசதிகளை எற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்துகொண்டிருக்கிறோம். 


இரத்ததான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இன்றைக்கு தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் கடந்த பத்தாண்டுகளாக ஏராளமான அமைப்புகள் இரத்த தானங்கள் செய்கின்றன. ஐம்பது ஆண்டுகள் வரலாறு கொண்ட கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் இருக்கின்றன, அவர்களும் செய்கிறார்கள். ஆனாலும் இதில் சிறுபான்மையினர் முஸ்லீம்கள், அந்த சிறுபான்மையினரில் ஒரு சிறிய அமைப்பாகத்தான் நாங்கள் இருக்கிறோம்.


அப்படிப்பட்ட எங்களுடைய அமைப்பு கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்திலே இரத்த தானத்தில், முதலிடத்தில் நாங்கள் இருக்கிறோம். பத்தாண்டுகளாக தமிழக அரசின் விருதை வாங்கிக் கொண்டிருக்கிறோம், நாங்கள்தான் முதலிடத்தில் இருக்கிறோம். இந்த அளவிற்கு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். இது முஸ்லீம்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து சமூக மக்களுக்கும் இந்த மாதிரியான பணிகளை நாங்கள் விரிவாக செய்து கொண்டிருக்கிறோம்.


கேள்வி: பரவலாக சமூகத்தில் வேறு என்ன சமூக சேவைகள் செய்துகொண்டிருக்கிறீர்கள்?


பதில்: எங்களுக்கு ஏறத்தாழ ஆயிரம் கிளைகள் தமிழகம் முழுவதும் இருக்கிறது. தமிழகத்தைத் தாண்டி பல்வேறு நாடுகளிலும் எங்களுக்கு கிளைகள் இருக்கிறது, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளான சௌதி அரேபியா, குவைத், பக்ரேன், கத்தார், அமொரிக்காவிலும் எங்கள் அமைப்பின் கிளை இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் எங்களது கிளை இருக்கிறது, கடந்த வாரம்தான் லண்டனில் எங்களது கிளை துவக்கப்பட்டிருக்கிறது. 


இதேமாதிரி பல இடங்களிலும், பல நாடுகளிலும் எங்களுக்கான கிளைகள் இருக்கிறது. இங்கே தலைமையிலிருந்து என்னவெல்லாம் வேலைகள் செய்கிறோமோ அனைத்தும் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுகிறது. இங்கிருந்து நடப்பது மாதிரியான வேலைகளை கோவையில் இருக்கிற ஒரு கிளையில் செய்வார்கள் மற்றும் எல்லாப் பகுதிகளிலும் செய்துகொண்டே இருக்கிறார்கள்.


சமூகப் பணிகளை விரிவாக சொல்வதாக இருந்தால் நான் சொன்ன பணிகள்தான். இரத்ததானம் என்று எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அது முக்கியமான உயிர் காக்கிற சமூகப்பணி. அதில் தீவிரமாக செய்துகொண்டிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளோடு சேர்ந்து இரத்ததான முகாம்கள் நடத்துகிறோம். எங்களுடைய அமைப்பில் அவசர இரத்ததான வேலைகளுக்கென்று தனியாக ஒரு பொறுப்பாளர், ஒரு செயலாளரை நியமித்து அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் இந்த மாதரியான வேலைகளை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். 


கல்விப்பணி செய்வது,ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவிகளைக் கொடுப்பது,வழிகாட்டுவது, எந்த கல்வி படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்பது மாதிரியான வேலைகளை செய்வது இவையனைத்தையும் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.


கேள்வி: சமூக சேவை என்பது குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு மட்டுமா அல்லது அனைவருக்கும் செய்கிறீர்களா?


பதில்: சமூகப் பணிகள் என்பது குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு மட்டுமானது இல்லை. பொருளாதார ரீதியாக எங்களது மார்க்கத்தில் ஜக்காத் என்ற கடமை சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன ஜக்காத் என்று கேட்டால், செல்வந்தர் அவருடைய செல்வத்தில் இரண்டரை சதவிகிதத்தை மார்க்கத்துக்காக கொடுத்துவிட வேண்டும். அதை ஏழை, எளிய மக்கள், கடன் பட்டவர்கள், திக்கற்று நிற்பவர்கள் போன்ற மக்களுக்கு பணத்தை செலவு செய்யவேண்டும். 


செல்வந்தரராக இருப்பவர் தன்னுடைய செல்வத்தில் இரண்டரை சதவிகிதத்தை கணக்கு பார்த்து கொடுத்துவிட வேண்டும் என்று இருக்கிறது. அந்தப் பணத்தை எங்களுடைய மக்கள் எங்களிடம் தருவார்கள். நாங்கள் தகுதியுடைய மக்களைப் பார்த்து கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வோம். பொருளாதார ரீதியான உதவி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு, மருத்துவ உதவி, அறுவை சிகிச்சை என்று அனைத்துக்கும் வருவார்கள் அனைவருக்கும் செய்கிறோம். அனைத்து சமூக மக்களும் வருகிறார்கள், எல்லோருக்கும் எங்களுடைய பொருளாதார உதவி சென்றுகொண்டிருக்கிறது.


தற்பொழுது வெள்ள நிவாரணத்திற்காக நாங்கள் செயல்பட்டோம். அந்த வெள்ள நிவாரணத்திற்காக பயன்படுத்திய தொகை ஏறத்தாழ 33 கோடி ரூபாய். எங்களது அதிகாரப்பூர்வமான உணர்வு இதழில் அது சம்பந்தமான செய்திகள், கணக்கு வழக்குகள் எல்லாம் வந்திருக்கிறது. 33 கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். அதில் பணமாகவே சுமார் 9 கோடி ரூபாய் கொண்டுபோய் கொடுத்திருக்கிறோம். சகட்டு மேனிக்கு நீ வைத்துக்கொள், நீ வைத்துக்கொள் என்று கொடுக்காமல் முறைப்படி பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை மாவட்டம் கிளை வழியாக 100 சதவிகிதம் துல்லியமாக பார்த்து பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து உதவிகளை செய்தோம். எந்த அளவிற்கு என்று கேட்டால், சென்னையில் நீங்கள் எடுத்துக்கொண்டால் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த உதவித்தொகை ஐந்தாயிரம் ரூபாய். நாங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை, திருவள்ளுர், காஞ்சி பகுதிகளில் கொடுத்த தொகையின் அளவு பத்தாயிரம் ரூபாய்.


அரசாங்கம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தது, நாங்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தோம். அரசாங்கம் சொல்வார்கள் நாங்கள் நிறைய நபர்களுக்கு கொடுத்தோமே என்று, அவர்கள் பாதிக்கப்படாதவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்தார்கள். தேர்தல் எல்லாம் வருகிறது, பல நோக்கங்கள் எல்லாம் இருக்கும். சில நேரங்களில் கணக்கெடுப்பதற்குக்கூட அவர்களுக்கு சிரமம் இருக்கும். தனியாக பிரித்து எடுக்க முடியவில்லை. ஒரு தெருவில் பத்து பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள், 5 பேர் பாதிக்கப்படாமல் இருப்பார்கள் என்பதை துல்லியமாக எடுப்பது கடினம். ஆனால் எங்களுக்கு தெருவுக்கு தெரு மக்கள் இருக்கிற காரணத்தினால் துல்லியமாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் கொடுப்போம் என்று பத்தாயிரம் ரூபாய் உதவி செய்தோம். இதிலும் எந்த மதவேறுபாடும் இல்லை. வெள்ளம் என்ன முஸ்லீம்களை மட்டுமா அடித்தது, அனைத்து சமுகத்திற்கும் செய்திருக்கிறோம்.


கேள்வி: பண உதவி தவிர்த்து வேறு என்னென்ன உதவிகளை மக்களுக்கு செய்தீர்கள், அங்கு நடந்த நிகழ்வுகளில் மறக்கமுடியாத அனுபவம்?


பதில்: நிவாரணப்பணி ஆரம்பித்த துவக்க நாள் முதற்கொண்டு கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு நடந்த நிகழ்வுகள், பணிகள் அனைத்துமே என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவம்தான். அனைத்து நிகழ்வுகளுமே பசுமையாக எங்களது கண்களில் நிற்கிறது. ஆரம்ப நாளில் காவல்துறை அதிகாரிகள் களத்திற்கு வரவில்லை, பணியாற்றவில்லை, இராணுவம்கூட வந்து சேரவில்லை. முதல்நாள் இரவு மழை பெய்திருக்கிறது, மறுநாள் காலையில் எங்களுடைய தொண்டர்களோடு களத்தில் நிற்கிறோம். அன்றைக்கு களத்தில் சென்று வேலை செய்யும் நேரத்தில் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக அடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. உள்ளே போனவர்கள் மீண்டு வருவார்களா என்ற கேள்விக்குறி உடைய நேரத்தில் நாங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முனையில் நிற்கிறோம். உள்ளே இருந்து சத்தம் கேட்கிறது, காப்பாற்றுங்கள் என்பது மாதிரி. ஏதாவது உதவி செய்யவேண்டுமே என்பதற்காகவேண்டி நாங்கள் பெரிய பெரிய கயிறுகளை எடுத்துக்கொண்டு எங்களால் முடிந்த அளவிற்கு தொண்டர்களை நிற்கவைத்து தூரத்தில் கட்டி ஒவ்வொருவரையாக இழுத்துக் கொண்டு வந்தோம். முதல் நாள் கயிறைக் கட்டி இழுக்கிறோம்.


காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் போகாதீர்கள், உங்களுக்கே அது இடைஞ்சலாகப்போய்விடும், மறுபடியும் உங்களைக் காப்பாற்ற நாங்கள் வரும்படி இருக்கும் என்று எங்களை அனுமதிக்கவில்லை. அவர்களுடைய கண்ணை மறைத்துவிட்டு, பின் வழியாகச் சென்று காப்பாற்றுகிற வேலைகளில் ஈடுபட்டோம். அன்றைக்கு ஒரு நாள் முடிந்துவிட்டது, அப்பொழுதுதான் எங்களுக்குத் தெரிந்தது, படகுகள் இல்லாமல் இங்கு வேலைசெய்ய முடியாது என்று. உடனே படகுக்காக அரசாங்கத்தை அணுகினோம், அதிகாரிகள், மந்திரிகளை சந்திக்கிறோம். எங்களுக்கு எந்த பதிலும் இல்லை, எங்கிருந்தும் படகு கிடைக்கவில்லை. நேரடியாக நாங்களே வண்டி எடுத்துக்கொண்டு மீனவர்களிடம் சென்று வாடகை பேசி வண்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் உள்ள இடங்களில் படகுகளை இறக்கிவிட்டோம். படகு போதுமான அளவிற்கு இல்லை. ஒட்டுமொத்தமாகவே எங்களுக்கு ஐந்து படகுகள்தான் கிடைத்தது.


படகு போதவில்லை என்றவுடனே அடுத்து இன்னும் தேவையிருக்கிறதே, இன்னும் செய்தாகவேண்டும் என்பதற்காக பேருந்தினுடைய இரப்பர்குழாய், லாரியின் குழாய் என்று இரப்பர் குழாய்களையெல்லாம் விலைக்கு வாங்கினோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரப்பர் குழாயை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு நபரை வைத்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பிவைத்தோம். குழாய்களும் போதவில்லை. குழந்தைகள் குளிப்பதற்காகப் பயன்படுத்துவார்களே அந்த மாதிரி காற்றடைத்த டப்களை வாங்கி இறக்கிவிட்டு அதில்போய் முடிந்தஅளவிற்கு கொண்டு வாருங்கள் என்று செய்தோம். அதுவும் எங்களுக்கு போதவில்லை. பெரிய பெரிய தண்ணீர் தொட்டியை(sintex) இறக்கி இரண்டாக அறுத்து, இரண்டாகப்பிரித்து, இரண்டு படகாக பயன்படுத்தி, இரண்டு பேரை அனுப்பி அழைத்துவாருங்கள் என்று செய்தோம். மண்ணெண்ணெய் டின் இரண்டை ஒன்றாக வைத்து கட்டி அதற்கு மேல் மட்டையை வைத்து அதில் ஒரு துடுப்பைப் போட்டு செல்லுங்கள் என்றோம். இது மாதிரி என்னென்ன வழிகளிலெல்லாம் மீட்பு பணி செய்ய முடியுமோ அது எல்லாவற்றையும் நாங்கள் செயல்படுத்தினோம். இது ஒரு வகையான பணி.


இரண்டு நாட்களுக்குப் பிறகு பசி என்றார்கள். உணவு தயாரிக்கிற வேலைகளில் ஈடுபட்டோம். சென்னையில் இருக்கிற அனைத்து இடங்களிலும், 150 க்கும் மேற்பட்ட அனைத்து கிளைகளிலும் உணவு தயாரிக்கப்பட்டது. 20 நாட்கள் வரையிலும் முழுமையாக அந்தந்த பகுதிகளில் 2000 பேர்களுக்கு, 3000 பேர்களுக்கு, 5000 பேர்களுக்கு என்று உணவுளை தயாரித்துக் கொடுத்துக்கொண்டே இருந்தோம். உணவு கொடுக்கப்போகிற நேரத்தில் பால் இல்லை என்றார்கள். பாலுக்கு தட்டுப்பாடு வந்தது, பால் விலையையும் வியாபாரிகள் அதிகரித்துவிட்டார்கள். அரை லிட்டர் 100 ரூபாய், 150 ரூபாய்க்கெல்லாம் விற்றார்கள். நாங்கள் வெளியூர்களிலிருந்து பால் பவுடரை வரவழைத்து மக்களுக்கு விநியோகம் செய்தோம். கொசுவர்த்தி கேட்டார்கள், கொசுவர்த்தியை இறக்குமதி பண்ணினோம். மெழுகுவர்த்தி கேட்டார்கள் மெழுகுவர்த்தியை விநியோகம் செய்தோம். அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்று நாங்கள் உணர்ந்தோமோ அல்லது அவர்கள் கேட்டார்களோ அவை எல்லா வேலைகளையும் நாங்கள் செய்துகொடுத்தோம். அதில் மறக்கமுடியாத நிறைய நிகழ்வுகள், அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தது.


செட்டித் தோட்டம் என்கிற பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டிருந்தோம், குப்பை அள்ளுகிற பணிகளை நாங்கள் செய்தோம். அப்பணியை செய்யும் பொழுது ஒரு பெரிய டிபன் பாக்ஸ் ஒன்று இருந்தது. அந்த பாக்ஸில் பத்து பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் இருந்தது. யாரோ அந்த வெள்ளத்தில் தவறவிட்டது. கடைசியில் விசாரித்ததில் ஒரு வயதான பாட்டியின் மகளுக்கு சொந்தமான பணம் இது. மகள் திருமணமாகிப் போய்விட்டார். திருமணமான அவருடைய கணவர் வீட்டில் நகையை வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று தன் தாய் வீட்டில் கொண்டு வந்து வைத்திருக்கிறார். வெள்ளத்தில் போய்விட்டது. 



எங்கே சென்றது என்று தெரியவில்லை, வீடே சோகத்தில் இருந்தது, ஊரே சோகத்தில் இருந்தது அந்தப் பெண்ணிற்கு என்னாகப்போகிறதோ தெரியவில்லை, கணவன் என்ன சொல்வானோ தெரியவில்லையே என்று. அது எங்கள் கையில் கிடைத்தது, அதைக் கொண்டு சென்று நேராகக் கொண்டுபோய் கொடுத்தோம். அது அவர்களுக்கு பெரிய நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

1 comment:

Mohamed Ali said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

பயனுள்ள நேர்காணல். அல்லாஹ்வின் அருள்மழை தொடர வாழ்த்துகள், பாராட்டுகள்.