Followers

Saturday, July 28, 2018

இறைவனை அஞ்சுவோருக்கு இது ஒரு முன்னோடி ஜமாஅத்!

இறைவனை அஞ்சுவோருக்கு இது ஒரு முன்னோடி ஜமாஅத்!

மண்டலங்கள் ஆடி விட்டன; மாவட்டங்கள் கலகலத்து விட்டன; கிளைகள் கலைந்து விட்டன; மர்கஸூகள் காலியாகி,மயானமாகி விட்டன; அனைத்துக்கும் தலைமை தாங்குகின்ற தலைமை தலைகீழாகக் கவிழ்ந்து கிடக்கின்றது; அதன் விளைவாக நாளொன்றுக்கு ஆளொன்றாக இந்த ஜமாஅத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஜகாத் வசூல் சரிந்து விட்டது; ஃபித்ரா வசூல் பிசுபிசுத்து விட்டது; தவ்ஹீது பிரச்சாரத்திற்குத் தடை ஏற்பட்டு விட்டது;  நிர்வாகத் திறமையின்மை; நீர்த்துப் போன நம்பகத்தன்மை; தலைமை பொறுப்பில் அனுபவமில்லாத சிறுவயதினர்; ததஜ உறுப்பினர்கள் ஆட்டு மந்தையினர்.

இவை எல்லாம் என்னவென்கிறீர்கள்? கூடப்பயணித்தவர்கள் கொளுத்தி போடுகிற கொத்து கொத்தான விமர்சனங்கள்.தலைமைக்கு எதிராக சமூக வளைத்தளங்களில்,முகநூல் போராளிகளால் முழு நேரத் தொழிலாகப் பரப்பப்படுகின்ற அவதூறுகள்.இதில் ஏதேனும் உண்மை இருக்கின்றதா? என்றால் அதுதான் இல்லை என்பது தான் உண்மை.

இந்த முகநூல் புரளிகளுக்கு ஓர் உதாரணத்தை பார்ப்போம்.

சலீம் என்ற ஒரு குடும்பத் தலைவர்.அவரது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக அவருக்கு வேண்டாதவர்கள் 'சலீமுக்கு வாதம் அடித்து விட்டது; நாக்கு வெளியே தள்ளி விட்டது; நடமாட முடியாமல் முடங்கி விட்டார்; மூச்சு இழுத்துக்  கொண்டிருக்கின்றது; பேச்சு நின்று விட்டது; இன்றோ நாளையோ இறந்து விடுவார்' என்று முகநூலில் பதிவு செய்கின்றார்கள்.

இதைப் பார்த்து விட்டு வெளிநாடுகளில்,வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள் அலறுகின்றார்கள்.ஆனால் ஊரில் உள்ளவர்கள் இந்தச் செய்திகளைப் பார்த்து விட்டு அலட்சியம் செய்கின்றார்கள்.இவை முகநூல் போராளிகள் பின்னுகின்ற பிம்பங்கள், பிதற்றல்கள் என்று புறந்தள்ளுகின்றார்கள்.காரணம் என்ன?

சலீம் சுகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுகின்றார். வீட்டு வேலைகளை நன்கு கவனித்துக் கொண்டு தனது வியாபாரத்தையும் நடத்திக் கொண்டிறுக்கின்றார். நல்ல விதமாக நடமாடிக் கொண்டிறுக்கின்றார். அதனால் தான் ஊரில் உள்ள மக்கள் இந்த முகநூல் செய்திகளைப் பார்த்து அவர்கள் ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்.

இதுபோன்று தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றிய மேற்கண்ட விமர்சனங்கள் அமைந்திருக்கின்றன.

ஜமாஅத்தின் அன்றாட அலுவல்கள் அதன்பாட்டிற்கு நடந்து கொண்டிருக்கின்றன.

அதே சமயம், மண்டலங்களின் சந்தேகங்கள் உடனடியாக சரி செய்யப்படுகின்றது.

மாவட்டங்களிடம் சில கேள்விகள் இருந்தது உண்மை தான்.மாநில செயற்குழு அந்தச் சலனங்களையும் சலசலப்புகளையும் சரி செய்து சீர்படுத்துகின்றது. உண்மை விளக்கத்தை உள்ளது உள்ளபடி தலைமை போட்டு உடைக்கின்றது. உறுத்தலோடு வந்த சில உறுப்பினர்கள் உள திருப்தியோடு சென்றனர்.உண்மையை விளங்கிய அவர்கள்,மாநிலத்திற்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளித்துவிட்டு செல்கின்றனர்.

இது உண்மைக்குக் கிடைத்த பரிசு என்று தலைமை இதை உணர்கின்றது.அத்தனை உறுப்பினர்களும் தலைமையின் உண்மை நிலையை உள்வாங்கிக் கொள்கின்றார்கள்.

இதன் பிறகு மாவட்ட செயற்குழுக்கள் நடத்தப்பட்டு கிளைகளில் ஏற்பட்ட ஐயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.

பீ.ஜே. என்ற பெருந்தலை உருண்டதில்  ஒரு புயல் உருவாவது இயற்கையே.இப்போது புயலுக்குப் பின்னே அமைதி நிலவுகின்றது. ஜமாஅத் அடுத்தக் கட்ட நகர்வை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

ஏழைக்கு போய்ச் சேர வேண்டிய இந்த ஃபித்ரா வந்து விடக் கூடாது; அது ஏழைக்குப் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதில் தான் வெளியே சென்றவர்களுக்கு  எத்தனை மகிழ்ச்சி. இத்தனே ஃபித்னாக்களையும் தாண்டி ஃபித்ரா வசூல் எப்போதையும் போன்ற இலக்கத்தையும் இலக்கையும் எட்டியது.அல்ஹம்துலில்லாஹ்.

*தடைப்பட்டு விட்டதா தவ்ஹீது வளர்ச்சி?*

முகநூல் போராளிகள் முகநூலில் முகங்காட்டியும் முகங்காட்டாமலும் அள்ளி விட்ட சரடுகள்,அவிழ்த்து விட்ட பொய்கள் அத்தனையையும் தாண்டி ஜகாத் வசூல்களும் சாதாரணமாக வந்து சேர்ந்தன.அதிலும் சரிவில்லை.

ரமலான் மாத இரவுத் தொழுகைகளில் எந்தவிதத் தொய்வும் தேய்வும் இல்லை. மர்கஸ்கள் மயானமாகவில்லை. மாறாக மக்கள் நிரம்பி வழிகின்ற தியானக் கூடங்களாகவே விளங்கின.இடப் பற்றாக்குறை தான் பெரும் குறை என்றானது.

பெருநாள் திடல் தொழுகைகளில் மக்கள் வெள்ளம் அதே அளவில் இன்னும் சொல்லப் போனால் வழக்கத்தை விட அதிகமான அளவில் பெருக்கெடுத்து ஓடியது.

எண்ணிக்கை அதிகம் இருந்தால் அல்லாஹ்வின் அருள் என்றும்,எண்ணிக்கை குறைந்து விட்டால் அது அவனது சாபம்; இழிவு என்று ஒரு போதும் இந்த ஜமாஅத் முடிவு செய்யாது.

காரணம் விலகிச் சென்றவர்கள் தவ்ஹீது ஜமாஅத் நிர்வாகத்திற்கு ஒரு சிறிய தலைவலி வந்தாலும் அல்லாஹ்வின் சாபம், இழிவு என்று தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக வாதிடுகின்றனர் என்பதை விளக்குவதற்கு இடையே இந்தக் கருத்தை இங்கு பதிவு செய்கின்றோம்.

கூட்டம் குறைந்துவிட்டது, ஜமாஅத் அழிந்துவிட்டது என்று அவர்கள் எண்ணிக்கையை ஆதாரமாகக் காட்டிப் பொய்யைப் பரப்பும் போது,நாம் உண்மை நிலையை எடுத்துக்காட்டி விளக்குவது நம்மீது கடமை என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

அண்மையில், மேலப்பாளையத்தில் ஜனாஸா அடக்கத் தடை மறு அவதாரம் எடுத்திருக்கின்றது.இதுவரையில் இங்கு பெரிய அளவில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டதில்லை. இப்போது அது ஏற்பட்டதற்குக் காரணம்,"பீஜேவே போய் விட்டான்,நீங்க என்னலே இதை தூக்கிக் கொண்டு அலையுறீங்க" என்று அவர்கள் திருநெல்வேலி தமிழில் எழுப்புகின்ற அந்தக் கேள்வியிலிருந்து பிரச்சினையின் மையக் கருவை விளங்க முடிந்தது.

மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளி முஹல்லாவில் நபிவழியில் தொழுகை நடத்தி அடக்குவதற்கு இதுவரையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. இப்போது இந்த முஹல்லாவிலும் அடக்கத் தல மறுப்புப் பிரச்சினையைக் கிளப்புகினறார்கள்.இதன் மூலம் தவ்ஹீது ஜமாஅத்தின் நாடி பிடித்துப்  பார்க்கின்றார்கள்.

இப்போது அடக்கத்தல மறுப்பு,அடுத்து திருமணம்,தெருக்களில் நடைபெறுகின்ற பெண்கள் பிரச்சாரம், தெருமுனை பிரச்சாரம் என்று தவ்ஹீதுக் கொள்கையை அடக்குவதற்கும் புதைகுழியில் போட்டுப் புதைப்பதற்கும் இதை அஸ்திரமாகவும் அஸ்திவாரமாகவும் ஆக்க நினைக்கின்றார்கள் என்பதை தவ்ஹீது ஜமாஅத் புரிந்துக் கொண்டது.

அதனால் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற அடிப்படையில் எதிர்ப்புகளை எதிர்கொண்டு ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு வந்தது. அந்த அடக்கத்தின் போது சிறிய தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டன.காவல்துறை இருதரப்பிலும் வழக்குகள் பதிவு செய்தது.

இதன் அடிப்படையில், என் மீதும்,மாநிலச் செயலாளர் செய்யது அலி,மாவட்டத் தலைவர் ஜூபைர் அஹ்மத், பொருளாளர் முஹைதீன் உட்பட 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல்துறை கைது செய்யும் நிலையில் இருந்தது.அதனால் அவர்கள் அனைவரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் எடுக்க நேர்ந்தது.

பிரச்சினை அத்துடன் நிற்கவில்லை.அடக்கம் செய்த மறுநாள் நள்ளிரவு மாவட்டத் தலைவர் ஜூபைர் அஹ்மத் அவர்கள் விற்பனைக்காக தனது அலுவலகத்திற்கு முன்னாள் நிறுத்தியிருந்த 3 கார்கள் எதிரிகளால் திட்டமிட்டுக் கொளுத்தப்பட்டது.

இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,தவ்ஹீது பிரச்சாரத்திற்குத் தடை ஏற்பட்டுள்ளது என்று இந்த முகநூல் போராளிகள் முராரி ராகம் பாடுகின்றார்களே,அது அத்தனையும் பொய் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான்.

உடல் நலம் நன்றாக உள்ள ஒரு மனிதரை முகநூல் போராளிகள் நொடிந்து கிடக்கும் நோயாளியாக்கிய அதே பிம்பமும் பிதற்றலும் தான் ஜமாஅத் விஷயத்தில் எட்டி, எகிறிக் குதிக்கின்றதே தவிர ஜமாஅத் தனது நேர்முகப் பிரச்சாரக் களத்தில் அசுர பலத்தில் அச்சமின்றி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தான் யதார்த்தம்.

*அனுபவமில்லாத தலைமையா?*

முகநூல் போராளிகள் மாநிலத் தலைமையை நோக்கி வைக்கின்ற அடுத்தக் குற்றச்சாட்டு பலவீனமான தலைமை! அனுபவமில்லாதவர்களின் தலைமை!! இது பற்றி இப்போது பார்ப்போம் :

ஒரு முப்பது வயதுள்ள ஓர் இளைஞர் தான் இன்றைய மாநில நிர்வாகத்திற்குத் தலைமை தாங்குகின்றார்.ஒப்பிட்டுப் பார்க்கையில் அனுபவமில்லாதவர் தான்.அவரைத் தூக்கி வைத்தவர்கள் தான் இன்று இந்த விமர்சனத்தையும் வைக்கின்றார்கள்.ஏற்றுக் கொள்வோம்.ஆனால் அவரது தலைமையின் கீழ் ஒரு 36 ஆண்டு கால ஆலமரம் வீழ்த்தப்பட்டுள்ளது.பலவீனமான ஒரு ஜமாஅத், பலமான ஒருவர் மீது இப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?

அதற்கான நடவடிக்கை தொடர்பான அறிக்கையின் மை காய்வதற்குள் முன்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம் நீக்கப்படுகின்றார்.அனுபவமில்லாத தலைமைக்கு இது எப்படி சாத்தியமானது?

இங்கு ஆள்பவர் சிறு வயது இளைஞராக இருக்கலாம்.ஆனால் அவரையும் உயர்நிலைக் குழுவினரையும்,அனைத்து உறுப்பினர்களையும் ஆள்வது குர்ஆன் ஹதீசும்,அதையொட்டி அமைந்த இந்த அமைப்பின் நிர்ணயச் சட்டமும் தான்.அதனால் தான் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிகின்றது. இங்கு அனுபவமின்மை என்ற பேச்சுக்கு அறவே இடம் இல்லை. சொல்லப்போனால் இந்த ஜமாஅத்தின் ஆளுமையும் அதன் பலமிக்க இறையாண்மையும் இப்போது வெளிப்பட்டிருக்கின்றதே தவிர அதன் பலவீனம் எதுவும் வெளிப்படவில்லை. இதை தான் முகநூல் போராளிகள் தலைகீழாகப் புரட்டிக் காண்பிக்கின்றார்கள்.

இந்த ஜமாஅத்திலிருந்து அன்றாடம் ஆட்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற வாதமும் ஓர் அபத்தமாகும்.இந்த ஜமாஅத்தை விட்டு யாரும் அப்படி வெளியாகவில்லை என்பது தான் மறுக்க முடியாது மற்றோர் உண்மையாகும்.

இந்த ஜமாஅத்திலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறியவர்கள் எங்கே சென்றார்கள்?பிரிந்து சென்றவர்களிடமா?அப்படியானால் அவர்களிடம் கூட்டம் எகிறியிருக்க வேண்டுமே!எப்படிப் பார்த்தாலும் அந்தப் பக்கம் ஐம்பதைத் தாண்டவில்லையே!ஆனால் நாம் ஏற்கனவே சொன்னது போல நமது இரவுத் தொழுகைகளிலும் பெருநாள் திடல் தொழுகைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததே!

எனவே,இவர்கள் கள யதார்த்தத்தை உணரவில்லை.முகநூல் எனும் மாய உலகில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இவர்களது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் செவி சாய்க்காத போது அவர்களை நோக்கி இவர்கள் ஆட்டுமந்தைகள் என்ற கணைச் சொற்களை அள்ளி வீசுகின்றனர். அதாவது கண் மூடித்தனமாக தக்லீத் செய்கின்றவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

இவர்களின் ஆட்பிடிப்புக்கு ஆட்படாத,அகப்படாத உறுப்பினர்களை இப்படி வசை பாடுகின்றனர்.

உண்மையில்,இந்தக் குற்றச்சாட்டிற்கும் இந்த கணைச் சொற்களுக்கும் இந்த ஜமாஅத் உறுப்பினர்கள் முற்றிலும் அப்பாற்பட்டவர்கள் ஆவர்கள்.

காரணம்,இந்த ஜமாஅத்தில் உள்ளவர்கள் பீஜேவை த்கலீத் செய்பவர்களாக இருந்தால் அவரைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவரது நீக்கத்தை எதிர்த்திருக்க வேண்டும்.அந்த அளவுக்கு இந்த ஜமாஅத் உறுப்பினர்கள் அவர் மீது மரியாதையும் மதிப்பும் கொண்டிருந்தனர். ஆனால் ஓர் உறுப்பினர் கூட அவரது நீக்கத்தை எதிர்க்கவில்லை.மாறாக மனச் சங்கடத்துடன் வரவேற்கவே செய்தனர்.தக்லீத்,தனிநபர் வழிபாடு இல்லை என்பதை நிரூபித்தனர்.

*யார், யாரை தக்லீத் செய்கிறார்கள்?*

ஆனால் இதற்கு நேர்மாறாக முகநூல் போராளிகள் அல்தாஃபி விஷயத்தில் ஆட்டு மந்தைகளாக உள்ளனர்.

அவர் அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தது தப்புத் தான்!ஆனால் அவர் தப்பு செய்யவில்லை என்று சொல்லி விட்டார் என்று சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கின்றனர்.

ஒரு காலத்தில் தனக்கென்று நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஒருவர் போனில் பேசிய விவகாரம் இந்த ஜமாஅத்தில் பூதாகாரமாகப்  பார்க்கப்பட்டது.இன்று ஜமாஅத்தை விட்டு வெளியே சென்ற பிறகு,ஒரு பெண்ணுடன் சில மணி நேரங்கள் தனித்திருந்த பாவம் சர்வ சாதாரணமாகப் பார்க்கப்படுகின்றது.

இங்கு தான் இந்த ஜமாஅத்தின் இறையச்சம்  பளிச்சென்று தெரிகின்றது.இந்த ஜமாஅத்தில் உள்ளே இருப்பதற்கும் வெளியே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகின்றது.

உங்களில் ஒருவர்  (அந்நியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.காரணம் ஷைத்தான் அவர்களுடன் மூன்றாம் நபராக இருக்கின்றான் என்று ரசூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)

நூல் : முஸ்னத் அஹ்மத் எண் : 114

இந்த ஹதீஸின் படி, பஞ்சுப் பொதியும் பற்றி எரியும் தீயும் பக்கத்தில் பக்கத்தில்  இருந்தது. ஆனால் பற்றவில்லை என்பது பச்சைப் பொய். அதில் பத்தினி வாதம் பேசுவது சுத்த பைத்தியக்காரத்தனம்!அப்படி ஒரு சாத்தியத்தை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.

அப்படி தனித்திருந்தது எவ்வித தவறும் நிகழாமல் தன்னை தற்காத்துக் கொண்டேன் என்று யாராவது வாதிடுவாரானால் அவர் தன்னை, கற்புக்கரசர் யூசுஃப் நபியை விட உயர்ந்தவர் என்று கற்பனை செய்கின்றார் என்றே அர்த்தம்.

உண்மையாளர்,கற்புக்கரசர்,பத்தினித்தனத்தின் மறுபதிப்பு என்று போற்றத்தக்க அல்லாஹ்வின் தூதர் சங்கைமிகு யூசுஃப்(அலை) அவர்கள் ஓர் அரசியின் கழுகுப் பிடியிலிருந்து சாக்குப் பையில் போன்ற தன் சட்டையின் பின்பகுதி கிழிய, தலைதெறிக்கத்  தப்பி வந்த பின் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இதோ:

"எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது.என் இறைவன் மன்னிப்பவன் ; நிகரற்ற அன்புடையோன்"

அல்குர்ஆன் 12:53

இவை அவர்கள் சந்தித்த அந்தச் சோதனையின் பிம்பத்தையும் பிரமாண்டத்தையும் அப்படியே நம் மனக்கண் முன் பிரதிபலிக்கச் செய்கின்றன.எம்மாபெரிய கற்புக்கரசரும் எவ்வளவு பெரிய அதிபரம யோக்கியரும் ஒழுக்கத்தின் இமயமும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது ஒரு பெண்ணுடனான  தனிமைச் சந்திப்பின் போது,அல்லாஹ் காப்பாற்றவில்லை என்றால் பற்றியெரியும் காமத் தீயில் கரிந்து பஸ்பமாகி  விடுவார்கள் எனபதற்கு அவர்களது வார்த்தைகள் எடுத்துக்காட்டுகளாகும்.அதனால் அந்நியப்பெண்ணுடன் தனித்திருந்து விட்டு,தப்பி விட்டேன், தஃவா   மட்டுமே செய்தேன் என்பதெல்லாம் கடுகளவும் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகும்.

*இந்த ஜமாஅத்தின் தலைவர் எப்படி இருக்க வேண்டும்?*

'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன.இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன.அவற்றை மக்களில் பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். எனவே,சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திறகும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார்.சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார்.அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும்.

எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவையாகும்.

எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது.அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும்.அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும்.புரிந்து கொள்ளுங்கள்.அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்  (ரலி) அறிவித்தார்.

நூல் : புகாரி 52

ஒரு தலைவர் என்பவர் இந்த மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இருக்க வேண்டும்.

அப்படி ஒரு தலைவர் அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் இந்த ஜமாஅத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.இந்த ஜமாஅத்திற்கு இந்த ஆதாரம் போதுமானது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில்,பெண்ணுடன் தனித்திருந்தது ஒரு சிறிய பாவமாகவும் பரப்பியது ஒரு கொடூர பாவமாகவும் பார்க்கப்படுவது தான்.

அது போல இப்படிப்பட்ட தப்பைச் செய்தவர் முபாஹலாவுக்கு அழைத்தது அதை விடக்கொடிய பாவம்! இத்தகையவர்களுக்கு என்ன இறையச்சமிருக்கின்றது என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

இதிலும் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், முபாஹலாவுக்கு அழைத்தவர் உத்தமராகவும் சத்திய சீலராகவும் அதற்கு பதில் கொடுக்க வந்தவர்கள் படுபயங்கரமான பாவிகளாகவும் இந்த முகநூல் போராளிகளால் பார்க்கப்படுவது தான்!

இதுமாதிரியான கட்டத்தில் அதில் புலனாய்வு,புலன் விசாரணை என்று பூதக்கண்ணாடிப் போட்டுக் கொண்டு உள்ளே புகுந்து, புலனறிவைப் போட்டுக் கசக்க வேண்டிய அவசியம் இந்த ஜமாஅத்திற்கு அறவே தேவையில்லை.

அப்படிப்பட்டவர்களின் பழைய,பாழாய் போன வரலாறைத் தோண்டி பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமோ,தேவையோ இந்த ஜமாஅத்திற்கு இல்லை.

அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபணமானால் போதும்.அடுத்த நிமிடம் அவர் பதவியை விட்டு அப்புறப்படுத்தப்படுவார்.மேலும் அவர்,ஒரு காலத்துக்கும் இந்த ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது என்பதை தனது அமைப்புச் சட்டத்தின் ஒரு விதியாக இந்த ஜமாஅத் ஆக்கி விட்டது.இப்படி ஒரு சட்டத்தை வகுக்க அடித்தளமாக அமைந்தது அல்குர்ஆன் தான்.

"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!" என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 25:74

அதனால் இந்த ஜமாஅத் நெஞ்சு நிமிர்த்தி,இது இறைவனை அஞ்சுவோருக்கு முன்னோடி ஜமாஅத் என்று அடித்துச் சொல்கின்றது.

நன்றி : ஏகத்துவம் மாத இதழ் (மலர் - 16 ; இதழ் - 5)

கட்டுரை ஆசிரியர் : மவ்லவி.M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி M.A.

4 comments:

ASHAK SJ said...

இந்த தலைக்கனம் தான் உங்க ஜமாத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது, மேலப்பாளையம் ஜனாஸா விஷயத்தில் ஜனாஸாவை எப்படி கையாண்டீர் என்று எல்லோருக்கும் தெரியும், தன சொந்த வாகனத்தில் தீயை வைத்துவிட்டு நாடகம் ஆடியதும் தெரியும்,
பீ சேவை முதலிலே தூக்கி வீசியிருந்தால் உங்களை பாராட்டி இருக்கலாம், மாறாக ஆடியோ குரான் என்னோடது அல்ல என்று குறிப்பிட்ட காலம் மறுத்துவந்த தலைமை, இனிமேல் முட்டு குடுக்க முடியாது என்றதும் வேறு வழியில்லாமல் வெளியேற்றினீர்களா, இதற்க்கு பெருமை கொள்ளக்கூடாது, வெட்கப்படணும்,
அல்தாபி விஷயத்தில் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டீர் என்று தமிழறிந்த முஸ்லிம்களுக்கு நன்றாத தெரியும்,
அந்நியப்பெண்ணுடன் தனித்திருக்கவேண்டாம் என்றுதான் ஹதீஸில் உள்ளதே தவிர, இருந்தால் தவறு செய்தவர் தான் என்று சொல்லவில்லை, தவறு செய்தத்தை கண்டிக்க நான்கு சாட்சியை இஸ்லாம் எதற்கு கொண்டுவரச்சொல்கிறது, இஸ்லாத்தின் அடிப்படை கூட தெரியாத தலைவர்களை வைத்துக்கொண்டு....
அல்தாபி முபாஹலா சமயத்தில் தைரியமாக தன மீது சாபம் விழட்டும் என்று சொன்னார் ஆனால் உங்கள் தலைவர்களோ தைரியமாக சொல்லத்துக்கு காரணம் என்ன?

vara vijay said...

Fact fact fact.

Dr.Anburaj said...

அதுததான் சொல்லிவிட்டேனே.இசுலாம் ஒரு ஆன்மவியல் இயக்கம் அல்ல. நாடுபிடிக்கும் ஒரு இயக்கம்.வல்லாதிக்க இயக்கம். ஆன்மவியல்கொண்ட இந்து சமய மடங்களுக்கிடையே அடிதடிக்கு பஞ்சம் இல்லை.செழிப்பாக உள்ளது. பிறரை ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையை கலிபாவாக மாற வேண்டும் என்ற பேராசையை மனிதில் விதைக்கம் இசுலாமிய வரலாற்றை படிப்பவன் பிறரின் அழிவை நாடுகின்றான். எனவே அழிவு நிச்சயம். இந்துக்களை அழிக்க நினைக்கும் மதவெறி கூட்டத்தை அல்லா காயடித்து விட்டான்.

ASHAK SJ said...

எந்த இயக்கமும் இந்துக்களை அழிக்கவேண்டும் என்று நினைப்பதில்லை, மாறாக ஆர் எஸ் எஸ் என்ற இயக்கம் ஹிந்துக்கள் விழாவான விநாயகர் சதுர்த்தியில் கோவாவில் குண்டுவைத்தது அப்பாவி ஹிந்துக்களை கொன்றது, சமயோஷிதா எஸ்பிரஸ்ஸில் குண்டுவைத்து அப்பாவி ஹினுக்களை கொன்றது, கோத்ராவில் ரயிலை எரித்து 58 ஹிந்துக்களை கொன்றது,

சேர சோழ பாண்டிய பல்லவ சாளுக்கிய மராட்டிய இத்யாதி இத்யாதி மன்னர்கள் ஒருவருக்கு ஒருவர் வெட்டிக்கொண்டனர் எதுக்கு நாடு பிடிக்கத்தானே, இரண்டு உலக்கைப்போர் முஸ்லீம் அல்லாதவர்களால் நடத்தப்பட்டது எதுக்கு அமைதியை நிலைநாட்டவா? ஆறு மில்லியன் யூதர்களை ஹிட்லர் கொன்றது அமைதியை நிலைநாட்டவா?