Followers

Wednesday, November 28, 2018

கடவுள் அனுமன் ஒரு தலித், காட்டில் வாழும் மனிதர் - ஆதித்யநாத் :-)

கடவுள் அனுமன் ஒரு தலித், காட்டில் வாழும் மனிதர் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ் பெற்றுக்கொண்ட 3 நாட்களுக்குள் அவர் அனுமன் குறித்து பேசிய அவதூறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று ராஜஸ்தானில் உள்ள வலதுசாரி அமைப்பு அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்டம், மாலகேடவாடா நகரில் செவ்வாய்கிழமை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,” அனுமன் காட்டுவாசியாக இருந்தவர், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். பஜ்ரங் பாலி அமைப்பு நாட்டில் உள்ள அனைத்துச் சமூகத்தையும் ஒன்றாக இணைக்கப் பணியாற்றுகிறது.
வடக்கில் இருந்து தெற்காகவும், கிழக்கு முதல் மேற்காகவும் மக்கள் ஒன்று சேரவேண்டும். இதுதான் ராமரின் விருப்பம். இதைத்தான் விரும்பினார். இந்த விருப்பம் நிறைவேறும் வரை ஓய்வு இல்லை. மக்கள் ராம பக்தர்களுக்கு வாக்களிக்க வேண்டும், ராவண பக்தர்களுக்கு அல்ல" என்று பேசினார்.
இதையடுத்து, அனுமரைத் தலித் என்று குறிப்பிட்டதற்காக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, ராஜஸ்தான் சர்வ பிராமண மகாசபை தலைவர் சுரேஷ் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது, “ அரசியல் லாபத்துக்காகக் கடவுளை சாதிப்பாகுபாட்டுள் பாஜக இழுத்துள்ளது. கடவுள் அனுமன் குறித்த முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சு வேதனைக்குள்ளாக்குகிறது. ஏராளமான பக்தர்களின் மனதை ஆதித்யநாத்தின் பேச்சு பாதித்துவிட்டது. அரசியல் ஆதாயத்துக்காகவும், தங்களின் பலத்தை காட்டவும் இவ்வாறு பேசுகிறார். இன்னும் 3 நாட்களுக்குள் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் இரட்டை வேடம் தெரிந்துவிட்டது என்றும் அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், "முதல்வர் ஆதித்யநாத், பாஜக ஆகியோரின் பேச்சு சமூகத்தையும், தனிநபரையும் பிரிப்பதுபோல் இருந்து வந்தது. தற்போது, கடவுளைச் சாதிவாரியாக பிரிக்கிறது " என்று கண்டித்துள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-11-2018



1 comment:

Dr.Anburaj said...

உ.பி முதல்வா் அவர்களின் வேடிக்கை பேச்சை வினையாக்கும் ஈன செயல். குகனை நானும் சில நேரம் S.T.என்று சொன்ன துண்டு. எனக்கு முதல்வரின் பேச்சில் குற்றம் இருப்பதாகத் தோன்றவில்லை.