'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, May 18, 2015
RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 5 + 6
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம்.
ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியனான வேலாயுதன் பிலால் ஆனது........
ஒர் ஆர்.எஸ்.எஸ். காரனாக இருந்த வேலாயுதன் என்ற நான் பிலாலானதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குன்னத்துக்காடு பஞ்சாயத்தில் பிணர்முண்டா என்ற கிராமத்தில் பிறந்தேன்.
எனது தகப்பனார் பெயர் ஐயப்பன். தாய் காளி. 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் நாள் என்னுடைய பிறந்ததினம். எனது தகப்பாரின் மூன்று திருமணத்தில் 7 குழந்தைகள். அண்ணன் குமாரன், தம்பி சுரேஷ், சகோதரிகள் அம்மிணி, கிரிஜா, பிந்து மஞ்ஜுளா பின்னர் நான்.
நானும் தங்கை அம்மிணியும் ஒரே தாயின் பிள்ளைகள். தந்தை ஒரு செங்கல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அம்மா விவசாயம் செய்யக் கூடியவளாகவும் இருந்தாள்.
எனக்குப் பதினோரு வயது இருக்கும்போது.......,
எனது தந்தை வேலைக்குச் சென்றால் திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.
கோலஞ்சேரிக்குப் பக்கத்தில் கடையிருப்பு என்ற இடத்தில் கொன்னனின் வீட்டில்தான் எனது தந்தை தங்குவார். எனது தந்தை அந்த [கொன்னனின்]வீட்டில் தங்குவதில் எனது அம்மாவிற்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்கள் சில நாட்களுக்குப் பிறகு நிஜங்களாயின.
எனது அப்பாவிற்கும் கொன்னனின் மனைவிக்கும் சில தொடர்புகள் ஏற்பட்டு அது திருமணம் வரை சென்று முடிந்தது. அப்பா தினசரி இரவு குடித்து விட்டு வந்து அம்மாவை சித்ரவதை செய்வது தொடர்ந்து கொண்டே இருந்தது.
அப்பாவின் சித்ரவதை தாங்க முடியாமல் கடைசியில் அது விவாகரத்து வரை சென்றது. எனது கண்முன்னே வைத்து அம்மா தன் கழுத்தில் தொங்கிய தாலியை அறுத்து அப்பாவின் முகத்தில் விட்டெறிந்தாள். இது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து விட்டது.
எனது தங்கை அம்மிணியையும் அழைத்துக் கொண்டு, அம்மா வீட்டை விட்டு வெளியேறினாள். அம்மாவுடன் செல்வதற்கு எனது மனம் அனுமதிக்கவில்லை. நான் எனது அப்பாவின் அம்மாவுடன் எனது சிறு வயது வாழ்க்கையைக் கழித்தேன்.
அம்மா வீட்டை விட்டுப்போன இரண்டாவது வாரத்தில் அப்பா புதிய மனைவியை அழைத்து வந்து வீட்டில் குடும்பம் நடத்தத் தொடங்கிவிட்டார். அப்போது நான் நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்.
உணவுக்காக மேல் ஜாதி இனத்தைச் சார்ந்த தேவர்களின் வீட்டு மனையை மிதிப்பதற்குக்கூட எங்களுக்கு அனுமதியில்லை. ஏனென்றால் நான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவன்.
பசி பொறுக்க முடியாமல் நானும் எனது பாட்டியுமாக [அப்பாவின் அம்மா] முஸ்லிம்கள் வீட்டில் ஏதாவது திருமணம் மற்றும் சடங்குகள் நடந்தால் அங்கு செல்வோம். அவர்கள் சாப்பிட்டுவிட்டு வெளியே வீசுகின்ற அந்த எச்சில் மாமிசத்திற்காக நாங்கள் காத்து நிற்போம்.
இந்த எச்சிலை சாப்பிடுவதற்காக காகமும் நாயும் எங்களது நண்பர்களாக அங்கே நின்று கொண்டிருக்கும். எச்சில் இலையை அப்படியே எடுத்து அவர்கள் கடித்துத் துப்பின எலும்பில் ஏதாவது மாமிச துண்டுகள் இருக்கிறதா என்று ஆவலோடு எடுத்து, இருப்பதை சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு மீதியை அப்படியே எடுத்து எனது பாட்டியின் மடியில் கட்டி சந்தோஷமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வோம்.
அன்று மிகவும் சந்தோமான நாளாக இருக்கும். இரவு சப்பாடு கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷம் தான். எச்சில் இல்லாத நல்ல சாப்பாடு கிடைக்காதா? என்று நாங்கள் ஆவலுடன் இருந்த நாட்கள் பலப்பல.
விடிந்தவுடன் நானும்,எனது பாட்டியும் சாப்பாட்டிற்காக பல இல்லங்கள் ஏறி இறங்குவோம்.
அதிகமாக முஸ்லிம் வீடுகளில் இருந்துதான் எங்களுக்கு திருப்தியான சாப்பாடு கிடைக்கும். நோன்பு நாட்களில்தான் எங்களுக்கு திருப்தியான சாப்பாடு கிடைத்தது.
சாப்பாட்டிற்காக வீடு வீடாக செல்லும்போது எனது பள்ளி நண்பர்களின் வீட்டை அடையும் போது அவர்கள் என்னைப் பார்த்து விடாமல் நான் மறைந்து நின்று பாட்டியை மட்டும் அனுப்பிவிடுவேன்.
6-ம் வகுப்பு வரை எனது படிப்பு நீடித்தது. பள்ளிக்கு செல்வதற்கு அப்பா கட்டாயப்படுத்தினதும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற காலத்தில்,சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பா என்னை கல் வெட்டுகின்ற வேலைக்கு அழைத்துச் செல்வார். அப்பாவிற்கு எடுபிடியாக வேலை செய்வேன். காலை 10 மணி ஆகும் போது நல்ல கிழங்கும்,சுண்டல் கடலையும் கிடைக்கும். அதன் சுவை தனி ருசிதான். மதிய நேரம் வீட்டில் இருந்து கொண்டுவந்த சோற்றை சாப்பிடுவேன். மாலைவேளையில் நல்ல ஒரு டீ கிடைக்கும்.
--------------------------------------------------
இப்படியாக வேலைக்குச் சென்றதனால் எனது படிப்பும் அத்தோடு முடிந்து போனது. இப்படி நான்கு வருடம் அப்பாவுடன் வேலை பார்த்து எனது மழலைப் பருவத்தைக் கழித்தேன்.
வேலை செய்து திரும்பும்போது அப்பா என்னையும் அழைத்துக்கொண்டு சாராயக் கடைக்குச் செல்வார். அப்பா இரண்டு லிட்டர் சாராயத்தை அருந்துவார். நான் கிழங்கும் மீனும் சாப்பிடுவேன்.
இப்படி சாராயக் கடைக்குச் சென்றுச் சென்று சில நாட்களில் அப்பா கையாலேயே எனக்கு சாராயம் குடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சந்தோஷமாக நான் பயன்படுத்தினேன். அன்று இரவு சாராய மந்தத்தால் நிம்மதியாக தூங்கினேன்.
இவ்வாறிருக்க அப்பாவுடன் வேலை செய்வதற்கு எனக்கு கண்ணியக்குறைவாக இருந்தது. சொந்தமாக வேலை பார்ப்பதற்காக நான் ஊரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டுவிடுவேன்.
அங்கிருந்து நான் ராமபுரம் என்ற இடத்தைச் சென்றடைந்தேன். அங்கு கொச்சுவர்கிச்சன் என்ற ஒருவரின் வீட்டில் வேலை பார்த்து வந்தேன். இரவு வேளையில் ஒரு சாக்கை விரித்து விட்டு வராண்டாவில் தான் தூங்குவேன். எனது முதலாளி கொச்சுவர்கிச்சன் ஒரு கிறிஸ்தவராக இருந்தார்.
அவர் அடிக்கடி என்னிடம் "வேலாயுதா நீ ஒரு கிறிஸ்தவனாகி விடு; நல்ல ஒரு கிறிஸ்தவப் பொண்ணை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன் என்றெல்லாம் சொல்வார்". அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை.
காரணம் அந்த ஊரில் ஏற்கனவே என் இனத்தைச் சார்ந்த தலித் மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இருந்தார்கள். இந்தத் தலித் மக்களை கிறிஸ்தவர்கள் மிக மோசமாகத்தான் நடத்தி வந்தார்கள். தலித் கிறிஸ்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர்களைப் பார்த்தார்கள்.
கிறிஸ்தவனாக மாறினால் எனக்கும் இந்த நிலைதான் என்ற அச்சத்தால் தான் நான் கிறிஸ்தவனாக மாறவில்லை.
மாட்டுச் சாணம் சுமப்பதுதான் எனக்கு அங்கு முக்கிய வேலையாக இருந்தது. சில நாட்கள் அங்கு தங்கிவிட்டு என் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். இப்போது நான் ஒரு இளைஞனாக மாறியிருந்தேன்.
இந்த வாலிப பருவத்தில் அம்மாவைப் போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. நான் மனிதனாகி விட்டதால் அப்பாவும் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று நினைத்து வீட்டிற்குச் சென்றேன்.
அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது அம்மா வேறு திருமணம் செய்து விட்டாள் என்று. என் ஆசைகளும் கனவுகளும் அத்தோடு உடைந்துபோயின.
அம்மாவின் சொந்த இடத்தில் ஒரு குடிசையில் நானும் அம்மாவும் என் தங்கை அம்மிணியுமாக சந்தோஷமாக இனிவரும் நாட்கள் வாழலாம் என்று நினைத்தேன். எனது ஆசை மண்ணாகிப்போனது. ஒரு போதும் மறக்க முடியாத ஒரு கவலையாக எனது வாழ்வில் அது நின்று நிலைத்தது.
அம்மாவை இழந்த எனக்கு ஒரே அறுதலாக என் தங்கை மட்டும் மனதில் தென்பட்டாள். உடனே நான் என் அன்புத் தங்கையைத் தேட ஆரம்பித்தேன்.
அம்மாவிடம் விசாரித்த போது தங்கையை எனது அம்மாவின் தம்பி வீட்டில் அதாவது எனது மாமா வீட்டில் விட்டு விட்டதாக அம்மா சொன்னாள். மாமா எங்கு தங்கியிருக்கிறார் என்று தெரியாமல் அலைந்து ஒரு விதமாக வீட்டைக் கண்டு பிடித்தேன்.
அது ஒரு வாடகை வீடாக இருந்தது. நான் சென்றடைந்தபோது மாமா இல்லை.அத்தையிடம் விசாரித்தபோது தங்கை வெளியில் சென்றிருப்பதாக சொன்னார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தபோது அம்மிணி வேலைக்குச் சென்றிருப்பதாகப் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு முஸ்லிம் பெண் என்னிடம் சொன்னாள். அங்கே ஒரு டீ கடை இருக்கிறது. அங்கு உன் தங்கையை நல்லா வேலை வாங்குகிறார்கள் என்று அப்பெண்மணி சொன்னாள்.
இறைவன் நாடினால் இனியும் வரும்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment