Followers

Monday, May 18, 2015

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 7 + 8



நான் அந்த டீ கடை பக்கம் விரைந்து சென்றேன். அங்கு சென்று பார்த்த போது எனது மனம் திடுக்கிட்டுப்போனது. எனது தங்கையா இது? அந்த டீ கடையின் பின்வாசலில் ஆட்கள் சாப்பிட்டுவிட்டு போடுகின்ற எச்சில் இலைகளுக்கிடையில் எனது தங்கையின் வாடிய முகம் தெரிந்தது.

அங்கு அவள் சகிக்க முடியாதத் தோற்றத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். இதைப் பார்த்தபோது எங்கேனும் அமர்ந்து அழ வேண்டும் போல் இருந்தது.

உடனே நான் அவளை அங்கிருந்து அழைத்துவந்தேன். கை முழுவதும் சொறி பிடித்து, தலை முழுவதும் புண்ணாகவும் அந்தப் புண்களுக்கும் மேலாக பேன் ஊறிக்கொண்டும் இருந்தது.

எனது 12 வயதான தங்கையைப் பார்ப்பதற்கு எனக்கு சகிக்கவில்லை. கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் என் இளம் தங்கையை படாதபாடு படுத்தியிருக்கிறார் எனது அம்மாவின் வீட்டார்கள். அவளை ஒரு குளத்தில் குளிக்கச் செய்து அங்கிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

அம்மாவோ வேறு திருமணம் முடித்துவிட்டாள்; அப்பாவிற்கோ புது மனைவி; எனது தங்கையின் நிலைமையோ அந்தோ பரிதாபம். இவற்றையெல்லாம் பார்த்து நொந்த மனதோடு வீட்டைச் சென்றடைந்தேன்.

இரண்டாவது அம்மாவிடம் எனது தங்கையை விடுவற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. எனது அத்தை அவளுக்கு இழைத்த கொடுமையை அவள் திரும்பவும் அனுபவிக்க வேண்டுமா?

அப்படியிருக்க என்னிடம் மிகவும் அன்பு செலுத்துகின்ற அப்பாவின் தங்கை ஒருத்தி இருந்தாள். அவளின் பெயர் குஞ்ஞாளி. எனது தங்கையை குஞ்ஞாளியின் வீட்டில் விட்டேன்.

நான் சம்பாதிப்பதை எனது தங்கைக்காக சேகரித்து வைக்காலானேன். அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பதுதான் இலட்சியமாக இருந்தது. இப்படிச் சிறிது காலம் சென்றது.

என் தங்கை பருவமடைந்தாள். குஞ்ஞாளி வீட்டில் அவளை விட்டு ஒரு வருடம் கடந்து விட்டது. இனி அவளை அங்கு விடுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது. அப்பாவின் சம்மதத்தோடு நான் தங்கையை வீட்டிற்கு அழைத்து வந்து எனது சித்தியிடம் விட்டேன். அப்போது சித்தி நாலாவது பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.

ஒரு விதமாக எனது தங்கை 17 வயதை அடைந்தபோது, நான் சம்பாதித்ததின் மூலம் மூன்று பவன் நகையும் ஆயிரம் ரூபாய் வரதட்சணையும் கொடுத்து எனது தங்கையின் திருமணத்தை நடத்தி முடித்தேன்.

அம்மாவிடம் சென்று திருமணத்திற்காக அழைத்தேன். அம்மாவோ அவள் பெற்ற பிள்ளையின் திருமணத்திற்கு வரவே இல்லை. புது கணவனும் பிள்ளையுமாக அவள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள எனக்கு இருந்த ஒரே சொத்து எனது தங்கை. தங்கையை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சென்று பார்த்து வருவேன். என்னால் முடிந்தளவு பொருட்களை வாங்கிச் செல்வேன். என் தங்கையைப் பார்த்துவிட்டு வரும்போது தான் எனது மனதுக்கு ஒரு நிம்மதி. மூன்று பிள்ளைகளைப் பெற்று அவள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். நான் தனியாக இருந்தேன்

இதன் பிறகுதான் எனது முழுக் கவனமும் ஆர் எஸ் எஸ் மீது சென்றது. ஆர்.எஸ்.எஸ். ன் பணியில் நான் தனியொரு சுகத்தைக் கண்டேன். கல் வெட்டும் தொழில் முடிந்தால் முழு கவனமும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காகத்தான்.

சிறு பருவத்தில் நான் ஊரில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வெளியே வரும் போது சில இளைஞர்கள் வெளியில் நின்று “இந்துக்களெல்லாம் ஒன்று; இந்து நடைமுறை ஒன்றாகும்; “ என்று பாடுவர். இவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்களா? என்று எனது சிறு வயதில் நான் பார்த்தவற்றை வைத்துக் கணித்துக் கொள்வேன்.

ஒரு கும்பலாக கோவிலுக்கு வெளியே இருந்து ஒரு நபர் சொல்லிக்கொடுக்க மற்றவர்களெல்லாம் இணைந்து பாடுவதும், கோவிலில் வேறு சில வணக்கங்களில் ஈடுபடுவதும்தான் என்னை அந்த அமைப்பில் ஈர்த்த்து. சொந்த பந்தம் எதுவுமில்லாத எனக்கு ஆர்.எஸ்.எஸ்.ஒரு சொந்தமாக மாறியது.

அதற்காக கடுமையாக உழைக்க நான் உறுதி பூண்டேன்.

எனது நாடு முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய ஒரு நாடாகும்; முஸ்லிம்கள் இந்த நாட்டின் கொள்ளைக்காரர்கள்; குழப்பக்காரர்கள்; கோவில்களை இடிக்ககூடியவர்கள்; என்றெல்லாம் அவர்கள் பாடம் சொல்லித்தந்தார்கள்.

இதையெல்லாம் கேட்ட எனக்கு அவர்களோடு ஒரு விதமான நெருக்கம் ஏற்பட்டது. அவர்களது சாகாவிலும் நான் கலந்து கொண்டேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் சாகாவில் கலந்து கொள்வேன்.

அந்த ஒரு மணி நேரத்தில் இரண்டு விதமான பயிற்சிகள் தருவார்கள். மனதைக் கட்டுப்படுத்துவதற்கான பயற்சியும், உடல் பயற்சியும் தருவார்கள். சவர்ணர் என்ற இனத்தைச் சார்ந்தவர், தாழ்த்தப்பட்ட என்னைப் போன்றவர்களுக்குத்தான் பயற்சிகள் தருவார். இவர்களின் இயக்கத்திற்கு தாழ்த்தப்பட்ட நாங்கள் நன்றாகப் பயன்பட்டோம்.

இந்தப் பயற்சிகளைப் பெறும் பொழுது ஆர்.எஸ்.எஸ். மீது எங்களுக்கு ஆழமான அழுத்தமான பிடிப்பு ஏற்படும்.

இந்தப் பயற்சியைப் பெறுபவர்கள் தங்களை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். ல் இணைத்துக் கொள்வார்கள்.

இந்த அமைப்பில் சேர்ந்த உடனேயே கிறிஸ்தவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு உண்டாயிற்று. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவிற்கெதிரானதென்று எங்களை நம்பவைத்தார்கள். அது முதல் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் எதிரிகளாகவே பார்த்தேன்.

ஆர்.எஸ்.எஸ். காரர்கள் முதலில் முஸ்லிம்களுக்கெதிராக எடுத்து வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால்,

* நாமெல்லாம் கிழக்குப் பக்கம் நின்று கடவுளை வணங்கும் போது, முஸ்லிம்கள் மேற்குப் பக்கம் நோக்கித் தொழுகிறார்கள்.

* நாம் கோமாதாவை[பசுவை] சாப்பிடக்கூடாது என்றால் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

* நாம் வலது பக்கம் வேட்டி கட்டினால் அவர்கள் இடது பக்கமாக வேட்டியைக் கட்டுகிறார்கள்.

மொத்தத்தில் முஸ்லிம்கள் இந்து ஆச்சாரங்களுக்கு எதிராவே தங்களது வழ்க்கையை ஓட்டுகிறார்கள். இந்துக்களாகிய நாம் தான் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்.

ஆனால் இந்து என்ற மதத்தில் தாழ்த்தப்பட்ட நான் ஒரு பகுதியல்ல என்ற விவரம் எனக்குத் தெரியாது.

இந்து என்ற மதத்தில் தாழ்த்தப்பட்ட எனக்கு எந்த மதிப்பும் எந்த உரிமையும் இல்லை. ஒரிரு சாதியினரும், பிராமணர்களும் தான் இந்து மதத்திற்குச் சொந்தக்காரர்கள் என்ற விவரம் அப்போது எனக்குத் தெரியாது.

இந்து மதத்திற்காக உயிரை அர்பணிக்க இவர்கள் மூளைச் சலவைச் செய்து தாழ்த்தப்பட்ட எங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். இதையெல்லாம் தெரியாமல் அப்போது நான் முழுநேர ஊழியனாக ஆர்.எஸ்.எஸ்ஸில் பணியாற்றி வந்தேன்.

இவர்கள் திப்பு சுல்தானைப் பற்றி ஒரு அபாண்டமான பொய் வரலாற்றைக் கூறுவார்கள்.

திப்பு போர் செய்யும் போது நமது மதத்தின் ஆண்களையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு நம் சகோதரிகளான இந்துப் பெண்களைச் சிறை வைத்து ஆசை தீர கற்பழிப்பான்.

ஆலுவாமணிப்புரத்தைச் சேர்ந்த சிவனின் அனுக்கிரகத்தால் நமக்கு அப்போது அதிக நஷ்டம் ஏற்படவில்லை. என்றெல்லாம் வெறுப்பூட்டும் பொய்களை எங்களுக்குச் சொல்லித் தருவார்கள்.

இதையெல்லாம் இதயத்தில் சுமந்த என்னைப் போன்றவர்கள் முஸ்லிம்களை கடுமையாக வெறுத்தோம்; எதிர்த்தோம்; அழிக்க ஆசை கொண்டோம்.

முஸ்லிம்களின் தாடியைக் கண்டால் வெறுப்பு; அவர்களின் தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை முழு உருவத்தில் காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம். அதிலிருந்து முஸ்லிம்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.

அப்போது ஒப்பந்த ஊழியர்களின் சங்கம்[contract workers sangh] என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் உருவானது.

இந்த ஒப்பந்த ஊழியர்களின் சங்கத்தின் செயலராக நான் வேலை பார்த்து வந்தேன். மேடைப் பேச்சுக்கு தகுதியானவன் என்றதால்தான் எனக்கு அந்தப் பதவி கிடைத்தது. அந்த சமயத்தில் எங்களது எதிரியாக CITU இருந்தது. அதற்கெதிராகப் போராடிட நாங்கள் தீர்மானித்தோம். குடிலில் பாஸ்கர மேனோன் என்பவர் CITU என்ற தொழிற் சங்கத்தின் தலைவர்.

இந்த இரண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள். சவர்ணர் என்ற மேல் ஜாதிக்காரர் [அதாவது ஆர்.எஸ்.எஸ். காரர்கள்] இந்தச் சண்டைகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். எங்களைத் தூண்டிவிட்டு விட்டு இவர்கள் அமர்ந்திருப்பார்கள்.

சொகுசாக வாழவேண்டும் என்ற சுயநலவாதிகளாக இருந்தார்கள் அந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களான சவர்ணர் என்ற மேல் ஜாதிக்காரர்கள்.

இவற்றையெல்லாம் அறியாமல் ஏதோ இந்து விடுதலைப் போராட்டம் என்ற நினைப்பில் மூடத்தனமாக நான் இயக்கத்துக்காக என்னை முழுமையாகத் தந்து கொண்டிருந்தேன்.

இறைவன் நாடினால் இன்னும் வரும்......

No comments: