Followers

Sunday, May 17, 2015

தொப்பி போட்டு தொழுதால் கண்ணியமாக இருக்குமே!










சில நாட்களுக்கு முன் ஃபஜ்ர் (காலை நேர தொழுகை) தொழுகைக்கு சுன்னத் ஜமாத் பள்ளிக்கு தொழச் சென்றேன். அந்த பள்ளியில் சுன்னத் தொழுது கொண்டிருந்தேன். தற்காலிகமாக தொழ வைக்க வந்துள்ள இமாம் எனது அருகில் வந்து அவரும் சுன்னத் தொழுகை தொழுதார். தொழுது முடித்தவுடன் என்னிடம்....

'அஸ்ஸலாமு அலைக்கும்' என்றார்....

'வஅலைக்கும் சலாம்' என்று பதிலளித்தேன். உடன் அவர் என்னிடம்

'தொப்பி போட்டு ஏன் நீங்கள் தொழுவதில்லை?' என்று கேட்டார்.

'தொப்பி போட்டுத்தான் தொழ வேண்டும் என்று மார்க்க சட்டம் ஏதும் இருக்கிறதா?' என்றேன்.

'அப்படி ஏதும் இல்லை'

'குர்ஆன் ஹதீஸில் இதற்கு ஆதாரம் தர உங்களால் முடியுமா?'

'ஆதாரம் இல்லைதான். ஆனால் பார்க்க கண்ணியமாக இருக்குமே... உலமாக்கள் தொப்பி போடுதல் அவசியம் என்று சொல்கிறார்களே'

'எது கண்ணியம் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் சொல்ல வேண்டும். உலமாக்கள் சொல்வதெல்லாம் மார்க்கம் ஆகி விடாது. இதே உலமாக்கள்தான் தர்ஹா வணக்கம், கத்தம், கந்தூரி, மௌலூது, சலாதுன் நாரியா என்று மார்க்கம் சொல்லாததை எல்லாம் மார்க்கமாக ஆக்கி வைத்திருந்தனர்.'

'அதெல்லாம் தவறுதான். அதனை சரி என்று நான் சொல்லவில்லையே'

'நீங்கள் குறிப்பிடும் அந்த பெரிய ஆலிம்களிடம் என்றாவது இதெல்லாம் தவறு என்று என்னிடம் கேட்டது போல் கேட்டிருக்கிறீர்களா?'

எனது வரிசையான கேள்விகளால் நிலை குலைந்த அந்த ஆலிம் பதில் என்ன சொல்வது என்று திகைத்தார். அதற்குள் கடமையான தொழுகைக்கான நேரம் வரவே தொழ வைக்க அவர் எழுந்து சென்று விட்டார். நானும் அவரை பின் பற்றி தொழ தயாரானேன்.

இஸ்லாம் சொல்லாத இந்த தொப்பி அணியும் முறையை யார் மார்க்கத்தில் புகுத்தியதோ தெரியவில்லை. யூதர்களுக்கு தொப்பி அணிவது கடமை. பள்ளிக்கு அவர்கள் வரும் போது அவசியம் தொப்பியுடன்தான் இருப்பார்கள். கிருத்தவர்களின் போப் ஆண்டவரும் அவசியம் தொப்பி அணிந்திருப்பர். யூத கிருத்தவ கலாசாரமான இந்த தொப்பி அணியும் முறையை இஸ்லாத்திலும் புகுத்தி 'தொப்பி அவசியம் அணிந்து தொழுங்கள்' என்று சில பள்ளிகளில் போர்டு வைக்கும் நிலைக்கு சென்றுள்ளார்கள். அனைத்து சுன்னத் ஜமாத் பள்ளிகளிலும் ஒரு அட்டைப் பெட்டியில் பிளாஸ்டிக்கால் ஆன தொப்பிகள் வைத்திருப்பர். அதனை வேண்டா வெறுப்பாக சிலர் போட்டுக் கொள்வர். தொழுகையில் நெற்றியை தலையில் வைக்கும் போது அந்த தொப்பியானது பலரது தலையில் இருக்காமல் நழுவி விழுந்து விடுகிறது. அதனை எடுத்து திரும்பவும் போட்டுக் கொள்வார்கள். இது பல முறை நடைபெறும். எதற்கு இந்த வேண்டாத கட்டாய தொப்பி அணியும் முறை? ஹதீஸிலோ குர்ஆனிலோ 'தொப்பி' என்ற வார்த்தையை எங்குமே காண முடியாது. நபிகள் நாயகம் வலியுறுத்தாத ஒரு பழக்கத்தை நாம் எவ்வாறு கட்டாயப்படுத்த முடியும்?

'யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் நமக்கு அறிவுறுத்தியிருக்க யூதர்களின் பழக்கமான தொப்பி அணியும் முறையை இனியும் கட்டாயப்படுத்துவது சரியாகுமா? என்று யோசிக்க வேண்டும்.

அரபு நாடுகளில் கடும் பனி, கடும் வெயில், பாலைவனப் புயல் போன்ற வற்றிலிருந்து தங்கள் தலையைக் காத்துக் கொள்ள தொப்பி அணிந்து அதற்கு மேல் துண்டையும் சுற்றி கட்டிக் கொள்வர். அது அரபு நாடுகளுக்கு சரி. அது அரபு கலாசாரம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அதனையே தமிழகத்திலும் கடை பிடிக்கச் சொல்வது அதனை கட்டாயப்படுத்துவது என்பது மார்க்க அறிவின்மையே ஆகும்.

தற்போது இந்த தொப்பியானது விஜயகாந்த், மு க ஸ்டாலின் போன்றோர் அணிந்து கொண்டு நோன்பு கஞ்சி குடிப்பதற்கும் ஓட்டு அறுவடை செய்வதற்கும் சினிமாவில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதற்கு ஒரு அடையாளமாகவும் தான் பயன்படுகிறது :-)

3 comments:

Unknown said...

//அரபு நாடுகளில் கடும் பனி, கடும் வெயில், பாலைவனப் புயல் போன்ற வற்றிலிருந்து தங்கள் தலையைக் காத்துக் கொள்ள தொப்பி அணிந்து அதற்கு மேல் துண்டையும் சுற்றி கட்டிக் கொள்வர். அது அரபு நாடுகளுக்கு சரி.//

இது என்ன வாதம்? வகையில்லாத வாதம்!

அது சரி,... அதே அரபு நாட்டில் தொழில் புரியும் நீங்கள், அவர்களைப் போலவே செய்கிறீர்களா?

பிசாசுகுட்டி said...

அராபிய காலாச்சாரம் கொண்ட தொப்பி மட்டும் வேண்டாம்.. ஆனா அவர்களுடைய மதம், பழக்கவழக்கம், கட்டிடங்கள், பாத்திரங்கள், பெயர்கள் மட்டும் வேண்டும்.. அதை எல்லா நாட்டிலேயும் விதைக்கவேண்டும்

புரியாத வேதம் போலவே இருக்கிறது உங்கள் விளக்கங்களும்

Dr.Anburaj said...

எனது கடிதத்தை வெளியிடும் தைாியம் உங்களுக்கு இல்லை.