Followers

Monday, May 04, 2015

திரு அகரன் அவர்களின் சந்தேகங்களுக்கான பதில்கள்!

திரு அகரன்!

நீங்கள் மாற்று மதத்தவராக இருப்பதால் சற்று விளக்கமாகவே இதற்கு பதிலளிக்கிறேன்.

//இந்தியாவில் உள்ள தர்காக்கள் எல்லாம் ஐந்நூறு முதல் ஆயிரம் ஆண்டு தொன்மையான கட்டிடங்கள், இவைகளில் பெரும்பாலும் முகலாயர்களும் இன்னபிற இந்து மன்னர்களும் ஏற்படுத்தியது.
இத்தனை வருடங்கள் வாழ்ந்து சென்ற இசுலாமியர்கள் எவரும் இதற்கு மறுப்பு தெரிவிக்க வில்லை. அவர்கள் உங்கள் மத கோட்பாடுகளை சரிவர பின்பற்றாதவர்கள் என்பது உங்கள் கண்ணோட்டமா?//

அது அவர்களின் தவறல்ல.... குர்ஆன் முஸ்லிம்களிடம் என்ன பேசுகிறது? நபிகள் நாயகம் என்ன கட்டளையை இஸ்லாமியருக்கு கொடுத்துள்ளார் என்ற புரிதல் அவர்களுக்கு இல்லாமல் இருந்ததே! அதற்கு காரணம் தாய் மொழியில் குர்ஆனையும் நபிகளின் வாழ்க்கையையும் மொழி பெயர்க்காததே! அந்நிய மொழியில் குர்ஆனை மொழி பெயர்த்தல் பாவம் என்ற தவறான புரிதலே அதற்கு காரணம்.

இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று தனியாக எதுவும் கிடையாது. தமிழ், ஆங்கிலம் போன்று அரபியும் ஒரு மொழி. முகமது நபி அரபியராக இருந்ததால் குர்ஆன் அரபியில் இறங்கியது. முகமது நபி தமிழராக பிறந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறக்கப்பட்டிருக்கும். உலக மொழிகள் யாவும் இறைவனால் படைக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. உலக மொழிகள் அனைத்திற்கும் வேதங்கள் வந்ததாகவும் குர்ஆன் கூறுகிறது. இந்த உண்மைகளை தற்போது இஸ்லாமியர் உணர்ந்து கொண்டனர்.

தமிழில் முதலில் குர்ஆனை மொழி பெயர்த்த அப்துல் ஹமீதை (அப்துல் சமதின் தந்தை) இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டதாக சகட்டு மேனிக்கு அன்று ஃபத்வா கொடுத்தனர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள். :-) இஸ்லாம் தமிழகத்துக்கு வந்து 1000 ஆண்டுகளுக்கு மேலாகியும் குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது 120 ஆண்டுகளுக்கு முன்புதான். மொழி பெயர்ப்புகளின் மூலம் உண்மையை இன்று தமிழக முஸ்லிம்கள் சரியாக விளங்கியதாலேயே பல மாற்றங்களை தற்போது காண்கிறீர்கள்.

//அல்லது ஆயிரமாண்டு கால இந்திய முசுலிம்கள் வரலாற்றில் இப்பொழுது சுமார் முப்பதாண்டுகளாக இருக்கின்ற தவ்கீத் ஜமாத் ஏற்படுத்திய தர்கா ஒழிப்புதான் சரியா?//

தர்ஹாவை வழிபடுபவர்கள் சொல்வது சரியா? அல்லது தவ்ஹீத் ஜமாத் சொல்வது சரியா என்பதை குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை படித்துப் பாருங்கள். யார் சொல்வது உண்மை என்ற விபரம் தானாகவே உங்களுக்கு விளங்க ஆரம்பிக்கும்.

//தவ்கீத் ஜமாத் ஏற்படுத்திய கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்ற கொள்கை சரியானால் இதற்கு முன்னர் வாழ்ந்த முசுலிம்கள் யாவரும் நரகத்திற்கு தான் செல்வார்களா?//

யார் சொர்க்கத்துக்கு செல்வார்கள்: யார் நரகத்துக்கு செல்வார்கள் என்பது இறைவனின் கையில் உள்ளது. வாழும் காலங்களில் இஸ்லாம் எதனை கட்டளையிடுகிறதோ அதன்படி செயல்படுபவர்களே முஸ்லிம்கள். குர்ஆனின் கட்டளைகளும் நபி அவர்களின் அறிவுரைகளும்தான் ஒரு இஸ்லாமியனுக்கு ஆதாரமாக முடியும். தனி மனிதர்களின் அபிலாஷைகள் எல்லாம் இஸ்லாமிய மார்க்கமாக முடியாது.

//இன்று வாழ்பவர்களை விட மிகப்பெரும் அறிவு ஜீவிகள், மத தலைவர்கள் , இந்திய அரசியலை தன் உள்ளங்கைகளில் வைத்திருந்த இசுலாமிய தலைவர்கள் எவரும் வரலாற்றில் இது போன்ற விசயங்களை பதியவில்லை.//

இன்று தவ்ஹீத் ஜமாத் சொல்லும் அனைத்து விஷயங்களையும் 80 ஆண்டுகளுக்கு முன்பே மவுலானா அபுல் கலாம் ஆசாத் மிக விரிவாக எழுதியும் பேசியும் இருக்கிறார். ஆனால் அவரது பேச்சுக்களும் எழுத்துக்களும் தர்காவை வணங்கிய முஸ்லிம்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டன. இணையம் போன்ற நவீன சாதனங்கள் அன்று இல்லாததும் ஒரு காரணம்.

//அவர்களின் வாழ்க்கை முறைகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது, அன்றுதான் இந்திய முசுலிம்களுக்கு அதிகாரம், மரியாதை உலக அரங்கில் இருந்தது,//

மொகலாயர் ஆட்சியிலும் ஆங்கிலேயர் ஆட்சியிலும் முஸ்லிம்கள் படிப்பிலும் அரசு வேலை வாய்ப்பிலும் கணிசமாக இருந்தனர். பார்பனர்களோடு போட்டியிட்டனர். விடுதலை போர் ஆரம்பித்தவுடன் காந்தியின் கட்டளையை ஏற்று ஆங்கில கல்வியையும், அரசு வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் துறந்தனர். ஆனால் கிருத்தவர்களும் பார்பனர்களும் அன்று காந்தியின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து பதவியில் இருந்தனர். அதன் பலனை இன்று வரை அனுபவிக்கின்றனர். தேச பக்தி முற்றி போய் வேலையையும் படிப்பையும் துறந்த முஸ்லிம்கள் இன்று தாழ்த்தப்பட்டவர்களை விட கீழாக இருப்பதாக சச்சார் கமிட்டி கூறுகிறது.

ஆனால் தமிழகத்திலும் கேரளத்திலும் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் முஸ்லிம்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது படிப்பிலும் அரசு வேலை வாய்ப்பிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இன்னும் 10 ஆண்டுகளில் மிகப் பெரும் மாற்றத்தை முஸ்லிம்களிடம் காண்பீர்கள். ஆனால் வட மாநில முஸ்லிம்களிடம் இத்தகைய மறுமலர்ச்சியை காண முடியவில்லை. அதற்கு காரணம் அவர்கள் இன்னும் குர்ஆனை முழுமையாக நெருங்காததே!

No comments: