

திரு ராம் நிவாஸ்!
//மெக்காவுக்கு ஏன் போறீங்க....இறைவன் அங்கேதான் இருக்காரா??????//
'உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக இறைவனையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதத்தையும், இறைத் தூதர்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் நாடோடிகளுக்கும் யாசிப்போருக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் மன விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும் தொழுகையை நிலை நாட்டுவோரும் ஏழை வரியை வழங்குவோரும் வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும் வறுமை நோய் மற்றும் போர்க்களத்தில் சகித்தக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே இறைவனை அஞ்சுபவர்கள்.'
-குர்ஆன் 2:177
இந்த ஒரு வசனமே உங்கள் கேள்விக்கு அழகிய பதிலை தந்து விடுகிறது. ஐந்து வேளையும் தொழுது கொண்டு, மெக்காவுக்கும் புனித பயணம் மேற்கொண்டு விட்டு தொடர்ந்து பாவங்களை செய்து வந்தால் அவர்களின் வணக்கங்களை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை இதிலிருந்து விளங்களாம்.
கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார். யாரும் கடவுளைத் தேடி மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளவில்லை. நபி ஆப்ரஹாம் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை ஏன் உலக முஸ்லிம்கள் செய்ய வேண்டும்? இதனால் முஸ்லிம்கள் அடையும் நன்மைகளை என்ன என்று இனி பார்போம்.
1. தைக்கப்படாத வெள்ளை உடையை ஆண்கள் அனைவரும் அணிய வேண்டும். அரசன், கோடீஸ்வரன், ஏழை, கருப்பன், வெள்ளையன் என்று அனைத்து தரப்பு மக்களும் இந்த உடையை உடுத்தியவுடன் நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் மண்ணோடு மண்ணாகும். இதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஹஜ்ஜூக்கு சென்று வந்தவர்கள் தங்களின் பணத் திமிர், குலத் திமிரை அடியோடு விட்டொழித்ததை நான் கண்டிருக்கிறேன்.
2. அடுத்து ஒரு இரவு திறந்த வெளியில் படுத்து உறங்க வேண்டும். என்னோடு ஹஜ்ஜூக்கு வந்த சவுதிகளில் பல கோடீஸ்வரர்களும் உண்டு. அன்றைய இரவு அவர்கள் எங்களோடு குளிரில் திறந்த வெளியில் சில கொசுக் கடிகளோடு உறங்கியதை என்னால் மறக்க முடியாது. அந்த கோடீஸ்வரர்களும் ஏழைகளின் சிரமத்தை உணர வேண்டும் என்பதற்காகவே இத்தகைய ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். எந்த சிரமம் வந்தாலும் வறுமை வந்தாலும் அனைத்தையும் நான் தாங்கிக் கொள்வேன் என்ற மன உறுதியும் இதன் மூலம் அந்த செல்வந்தர்களுக்கு கிடைக்கிறது.
3. முக்கியஸ்தர்களுக்கு தனி பரிவட்டம் எல்லாம் இங்கு கிடையாது. மன்னர்கள், அமைச்சர்கள் ஹஜ்ஜூக்கு வந்தால் பாதுகாப்புக்கு நான்கு போலீஸார் வருவர். எங்களோடு சேர்ந்துதான் அவர்களும் இறை வழிபாட்டில் ஈடுபடுவர். ஆண்டியும் அரசனும் இறைவன் முன்னால் ஒன்றுதான் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும். கஃபாவை ஏழு முறை சுற்றி வரும் போது இதனை நான் நேரிலேயே பார்த்துள்ளேன்.
4. அடுத்து ஹஜ்ஜூக்கு செல்வது என்பது அனைவருக்கும் கடமை அல்ல. கடன் இல்லாமல், செல்வந்தர்கள் வாழ்வில் ஒரு முறை இது போன்று நடக்கும் ஹஜ்ஜூக் கிரியைகளில் கலந்து கொள்ள கட்டளையிடுகிறது இஸ்லாம். உடலால் ஆரோக்கியம் உள்ளவர்களே இந்த கடமையை செய்ய வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிடுகிறது.
5. அடுத்து குர்பானி. ஹஜ்ஜூக்கு வருபவர் ஆட்டையோ மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ அறுத்து பலியிட வேண்டும். இதனால் இறைவனுக்கு ஏதாவது நன்மை வந்து விடப் போகிறதா? எதுவும் இல்லை. மாறாக நவீன முறையில் சவுதி அரசாங்கம் அதனை அறுத்து பதப்படுத்தி ஆப்கானிஸ்தான், சூடான், எத்தியோப்பியா போன்ற வறிய நாடுகளுக்கு அந்த உணவை அனுப்பி வைக்கிறது. இதனால் பலனடைவது ஏழைகளே!
6. இது மட்டுமல்லாமல் ஹஜ்ஜில் கலந்து கொள்ளாத உலக நாடுகளில் உள்ள செல்வந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும் இவ்வாறு குர்பானி கொடுத்து தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள். இதன் மூலம் கோடிக்கணக்கான ஆடுகளும், மாடுகளும், ஒட்டகங்களும் உலகம் முழுவதும் வெட்டப்படுகின்றன. இந்த உணவுகளின் பெரும் பகுதி ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இறைச்சி வாங்க சிரமப்படும் ஏழைகள் இந்த மாமிச உணவுகளை இலவசமாக அன்றைய தினம் பெற்றுக் கொள்கிறார்கள்.
7. அடுத்து கூடாமடித்து தங்குவது. எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் நாடோடிகள் அமைத்து தங்கிக் கொள்ளும் கூடாரங்களை போன்று அமைத்து அதில் இரண்டு நாட்கள் தங்க வேண்டும். பல லட்சக் கணக்கான மக்கள் குழுமும் ஒரு இடத்தில் அந்த பனியிலும் வெயிலிலும் கூடாமடித்து தங்குவது சிரமமான காரணமே. தற்போது சவுதி அரசாங்கமே தனது செலவில் லட்சக் கணக்கான கூடாரங்களை ஹாஜிகளுக்காக அமைத்துக் கொடுத்துள்ளது. அதற்குரிய வாடகையை செலுத்தி பலர் தங்கிக் கொள்வர். வசதியில்லாதவர்கள் மலைகளில் தாங்களாகவே சொந்தமாக துணிகளைக் கொண்டு கூடாரமடித்துக் கொள்வர். வீடின்றி ரோட்டோரம் கஷ்டப்படும் ஏழைகளின் வலியை பணக்காரர்களும் உணர வேண்டும் என்பதற்காகவே இறைவன் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளான்.
8. உலகம் முழுவதும் அழிந்து வரும் விலங்கினங்களை காக்க அரசு பல உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இறைவன் அறுத்து புசிக்க அனுமதித்த ஆடு, மாடு, ஒட்டகம், கோழி போன்றவை உலகில் எங்குமே குறையக் காணோம். நாளுக்கு நாள் இவைகளின் உற்பத்தி அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இவ்வாறு உணவுக்காக இவைகள் வெட்டப்படாமல் இருந்தால் இவற்றின் எண்ணிக்கை தாறுமாறாக பெருகி சுற்றுப்புற சூழலுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.
இவ்வாறு உலக மனிதர்கள் எல்லாம் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணம் வருவதற்கு காரணமாக உள்ள 'சர்வ தேச உலக மாநாடாக' பார்க்கப்படும் இந்த ஹஜ்ஜை செல்வந்தர்கள் வாழ்வில் ஒரு முறை செய்வதால் பல படிப்பினைகளை பெற்றுக் கொள்கிறார்கள். மனித நேயத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வையும் பெறுகிறார்கள்.
2 comments:
சுவனப்பிரியன்,
நீங்கள் சில விடயங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். நெடுங்காலமாக உங்களுக்கு இதைக் கூற வேண்டுமென்ற எண்ணத்திலிருந்தேன்.
1. உ ஓசை வரும் கிரந்த எழுத்துக்கள் ஜு, ஹு, ஸு, ஷு என்பனவாகும்.
2. ஊ ஓசை வரும் கிரந்த எழுத்துக்கள் ஜூ, ஹூ, ஸூ, ஷூ என்பனவாகும்.
எனவே, நீங்கள் ஹஜ்ஜூக்கு, ஹூஸைன் என்றவாறெல்லாம் எழுதுவது பிழை. அத்தகைய இடங்கள் ஹஜ்ஜுக்கு, ஹுஸைன் என்றவாறு எழுதப்பட வேண்டும்.
3. வசனங்களைப் பன்மையில் தொடங்கி ஒருமையில் முடிப்பது தவறு. தமிழிலக்கணத்துக்கு மதிப்பளித்து இத்தகைய தவறுகளைக் களைந்து கொள்ளுங்கள்.
- வள்ளுவன்
ஆலோசனைக்கு நன்றி நண்பரே.... இனி கவனமாக இருக்கிறேன்.
Post a Comment