Followers

Sunday, May 24, 2015

சவுதியில் கூலி வேலை செய்தவர் இன்று மோடி அமைச்சரவையில்!



'நான் பத்தாம் வகுப்பு வரையே படித்துள்ளேன். குடும்ப வறுமை காரணமாக சவுதிக்கு சென்றேன். அங்கு உதவியாளராக, பிளம்பராக பல்வேறு வேலைகளை செய்தேன். எனது உழைப்புக்கும் மீறி அதிகமான ஊதியம் சவுதியில் தம்மாம் நகரில் கிடைத்தது. அதன் மூலம் எனது குடும்ப சூழலும் தன்னிறைவு பெற்றதாக மாறியது. மேலும் நான் சவுதியில் பணியாற்றியபோது பல பாடங்களைப் பெற்றுக் கொண்டேன். நான் பிளம்பராக வந்தவன்: என்னை ஒரு நாள் எனது முதலாளி கழிவறையை சுத்தம் செய்யச் சொன்னார். நான் மறுத்து விட்டேன். உடன் எதுவும் சொல்லாமல் நான் வேலை செய்த பில்டிங்கின் உரிமையாளர் கையில் உறைகளை மாட்டிக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்தார். முழு பில்டிங்கையும் கூட்டி பெருக்குவார். கோடீஸ்வரரான அவருக்கு இந்த வேலைகளெல்லாம் ஒரு இழிவாகவே தெரியவில்லை. இதுவெல்லாம் எனது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எந்த வேலையும் இழிவான வேலை அல்ல என்று அன்று நான் முடிவு செய்தேன். இவ்வாறு பல ஆண்டுகள் சவுதியில் உழைத்து எனது குடும்பத்தின் பொருளாதாரம் ஓரளவு நிமிர்ந்தவுடன் இந்தியா திரும்பி அரசியலில் ஈடுபட்டேன்.' என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் மந்திரி விஜய் சாம்ளா கூறியுள்ளர்.

'நான் ஒரு தொழிலாளி: ஒரு விவசாயி: ஒரு பிளம்பர்: இதுதான் எனது நிலை. ஒரு நாள் திடீரென்று நரேந்திர மோடி அவர்களிடமிருந்து போன் வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. தனது அமைச்சரவையில் சேர முடியுமா என்று கேட்டார். உடன் ஒத்துக் கொண்டேன். டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமராகும் போது ஒரு பிளம்பர் மந்திரியாக மாறியதில் என்ன ஆச்சரியம்' என்று கேட்கிறார். 53 வயதாகும் இவர் பஞ்சாபிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தலித் சமூகத்தை சேர்ந்த இவரை வரும் 2017ல் பஞ்சாபில் நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தலித் ஓட்டுக்களை பெறுவதற்காக மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விமரிசகர்கள் கூறுகின்றனர்.

சவுதியில் பல ஆண்டு காலம் பாடம் பயின்ற இந்த மந்திரி உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது துறையில் சிறந்து விளங்க வாழ்த்துவோம்.

தகவல் உதவி:
சவுதி கெஜட்
29-11-2014
என்டிடிவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
10-11-2014

விஜய் சாம்ளா மட்டுமல்ல.... இவரைப் போன்ற கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கத்து உழைக்கும் மக்களின் வாழ்வை உயர்த்தியது வளைகுடா வாழ்க்கை என்றால் மிகையாகாது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் படித்தவர்களுக்கு மட்டுமே சிறந்த வருவாயைக் கொடுக்கும். ஆனால் வளைகுடாக்களில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவனது கை வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கணிசமான சம்பளத்தையும் கொடுக்கிறது. இதனால் பல தமிழக கிராமங்கள் பல வசதிகளைப் பெற்றுள்ளன. மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படித்தவர்கள் குடும்பத்தோடு தங்குவதால் பொருளாதாரத்தை அங்கேயே செலவழித்து விடுவார்கள். வளைகுடாவில் வேலை செய்யும் உழைக்கும் வர்க்கம் பெரும்பாலும் குடும்பம் இந்தியாவில் இருப்பதால் தனது செலவு போக ஒட்டு மொத்த சம்பளத்தையும் ஊருக்கு அனுப்பி விடும் காட்சியை தினமும் வளைகுடா வங்கிகளில் பார்க்கலாம். இதன் மூலம் நமது நாட்டு பொருளாதாரம் ஓரளவு ஸ்திரமாக இருக்க மறைமுகமாக வளைகுடா வாழ் இந்தியர்கள் காரணமாக இருக்கிறார்கள். முன்பு வளைகுடா யுத்தம் ஈராக்கில் நடந்து பல மாதங்கள் பண பட்டுவாடா இல்லாததால் நமது நாட்டின் பொருளாதாரமே சரிந்ததை இங்கு நினைவு கூறலாம்.

இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் இந்துத்வாவாதிகள் வெறுத்தாலும் மறைமுகமாக அவர்களின் உயர்வுக்கு முஸ்லிம்களும் இஸ்லாமிய நாடுகளும் காரணமாகின்றனர் என்பதை இன்றில்லா விட்டாலும் என்றாவது உணர்வர்.

No comments: