Followers

Saturday, May 09, 2015

வழுத்தூரில் 'மஸ்ஜித் தவ்ஹீத்' புதிய பள்ளி வாசல் திறப்பு!









சென்ற வெள்ளிக்கிழமை எனது இளைய மகனின் நண்பன் 'வழுத்தூரில் தவ்ஹீத் பள்ளி' திறப்பு விழா! அவசியம் வந்து விடு' என்று சொல்ல 'நீங்களும் வருகிறீர்களா?' என்று என் மகன் கேட்க.... நானும் சரி என்று சொன்னேன். 12 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் இருவரும் புறப்படுவதாக எற்பாடு.

இடையில் எனது மகனின் வெறோரு நண்பன் போன் செய்து 'டேய்... வழுத்தூரில் எல்லாம் புது பள்ளி திறப்பு கிடையாது. கண்டியூரில்தான் புது பள்ளி திறக்கிறார்கள்' என்று குட்டையை குழப்பிவிட என் மகனோ சரியாக விசாரிக்காமல் என்னையும் அழைத்துக் கொண்டு கண்டியூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் ஒரு புது பள்ளி திறப்பு விழா நடந்து கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால் 'முஹைதீன் ஆண்டவர்கள் புதிய பள்ளி வாசல் திறப்பு விழா' என்ற அலங்கார பந்தல் எங்களை வரவேற்றது. ஆஹா.... இடம் மாறி வந்து விட்டோம் என்று அப்போதே நினைத்தேன்.

"இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றை பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயிகளில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையில் இவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு." (2:114)

என்ற இறை வசனத்தை விளங்காமல் கண்டியூர் ஜமாத் 'முஹைதீன் ஆண்டவர்' என்று அந்த பள்ளிக்கு பெயரிட்டுள்ளனர். ஆக்ரோஷமாக உரையாற்றிக் கொண்டிருந்த ஏ.கே.அப்துல் ரஹ்மானும் இதனைக் கண்டிக்கவில்லை. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் மரணித்து மண்ணோடு மண்ணாகி விட்ட ஒரு இறையடியாரின் பெயரை இறைவனுக்கு மட்டுமே உபயோகப்படுத்தும் 'ஆண்டவர்' என்ற அடை மொழியையும் சேர்த்து எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வைத்தார்கள் என்று விளங்கவில்லை. இறைவன் இந்த ஜமாத்துக்கு நேர் வழி காட்டுவானாக!

என் மகன் என்னிடம் மெதுவாக 'அப்பா.... தவறான இடத்துக்கு வந்து விட்டோம் என்று நினைக்கிறேன்' என்றார் மெதுவாக....

'உன் நண்பனிடம் இன்னொரு முறை சரியாக கேள்' என்று நான் சொல்ல உடன் செல் போனில் தனது நண்பனோடு தொடர்பு கொண்டார்.

'டேய் என்னடா... இது சுன்னத் ஜமாத் பள்ளி திறப்பு விழா..... கண்டியூர்ல நிக்கிறேன்டா... என் அப்பாவையும் அழைத்து வந்திருக்கேன்டா...'

'உன்னை எங்கடா போகச் சொன்னேன்? ... கண்டியூர் ஏண்டா போனே... தவ்ஹீத் பள்ளி திறப்பு விழா வழுத்தூர்லடா...' என்று என் மகனின் நண்பன் கலாய்க்க என் மகனுக்கோ ஏக டென்ஷன். 'வெளியூர் கிளம்புவதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக விசாரிக்கக் கூடாதா?' என்று கடிந்து கொண்டேன்.

வந்தது வந்து விட்டோம். இங்கேயே தொழுது விடலாம் என்று நினைத்தால் 'முஹைதீன் அண்டவர் பள்ளிவாசல்' போர்டு ஞாபகம் வரவே அங்கு தொழ மனமில்லாமல் 'சரி... புறப்படு வழுத்தூருக்கு செல்வோம்' என்றேன். கண்டியூரில் இருந்து கிளம்பும் போது மணி 12:45. வழுத்தூரில் இடத்தை விசாரித்துக் கொண்டு சரியாக சென்று விட்டோம். மேல வழுத்தூரிலிருந்து மாங்குடி செல்லும் வழியில் பல வீடுகளுக்கு மத்தியில் அழகிய தோற்றத்தில் 'மஸ்ஜித் அத் தவ்ஹீத்' கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. ஜூம்ஆ பேருரை மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. நாங்கள் சென்று 15 நிமிடத்தில் தொழுகையும் ஆரம்பமானது. புதிய பள்ளியில் தொழுது விட்டு அங்கிருந்து வீடு கிளம்பினோம்.

-----------------------------------------------------------------


வழுத்தூரைப் பொருத்த வரையில் அங்கு ஆரம்பம் முதலே தவ்ஹீத் கொள்கைகளுக்கு மிக அதிக எதிர்ப்பு இருந்தது. மார்க்கத்துக்கு முரணான 'கொடி சீலை' என்ற ஒரு நிகழ்வை வருடா வருடம் மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். அங்குள்ள பள்ளி வாசலுக்கு 'முஹைதீன் ஆண்டவர் பள்ளி வாசல்' என்று பெயர் வைத்திருப்பார்கள். அஷ் ஷைகு ஷா என்ற பெயரில் பெரிய தர்ஹா ஒன்று ரோட்டோரத்திலேயே இருக்கும். அது மட்டும் அல்லாமல் சிறு சிறு தர்ஹாக்களும் உண்டு. :-) இவ்வாறு குர்ஆன் காட்டித் தராத செயல்களை செய்வதில் அதிக அக்கறை காட்டுவர். எனவே ஆரம்ப காலங்களில் தவ்ஹீத் பிரசாரத்துக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தது. எங்கெல்லாம் ஏகத்துவ கொள்கையை அதிகம் எதிர்க்கிறார்களோ அங்கெல்லாம் இறைவன் தவ்ஹீதை வெகு சீக்கிரத்தில் வளர்க்கிறான். இதற்கு நாகூர் ஒரு சிறந்த உதாரணம். இன்று வழுத்தூரில் கம்பீரமாக தவ்ஹீத் கொள்கைகளை பறை சாற்ற ஒரு பள்ளி எழுப்பப்பட்டு விட்டது. இதற்காக உடலாலும் பொருளாலும் தங்கள் பங்களிப்பை அளித்த அனைத்து மக்களுக்கும் இறைவன் மேலும் அபிவிருத்தியை நல்குவானாக!


தனியாக இவ்வாறு தனிப் பள்ளி கட்டிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நமது ஊர் பள்ளியிலேயே அந்த மக்களை திருத்த முயல வேண்டும். அந்த நாள் கை கூடி வரும் போது இவ்வாறு தனிப் பள்ளி கட்டிக் கொண்டு செல்லும் வழக்கமும் ஒழியும். அத்தகைய நாட்களை இறைவன் நம் தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் ஏற்படுத்துவானாக!




1 comment:

Anonymous said...

aandavar endral aan magan endrudhan porul endru en vaathiyar solla kelvi pattu irukkaen thiruthi kollavum