உங்களிடம் ஆறு வருடம்
தனி போதனா பயிற்சி (ட்யூஷன்) எடுத்த மாணவன் நஜீர் அஹமது எழுதிக் கொள்வது. பல மாணவர்களுக்கு
பாடம் எடுத்ததால் நீங்கள் என்னை மறந்திருக்கலாம். ஆனால் உங்களை இன்று வரை நான் மறக்கவில்லை.
நானும் எனது குடும்பத்தவரும்
நலம். உங்களது நண்பரும் எனது தாத்தாவுமான இப்றாஹிம்
பாய் அவர்கள் பல வருடங்கள் முன்பே இறப்பெய்து விட்டார்கள்.
இதுபோல் தங்கள் குடும்பத்தில்
தாங்களும் தங்கள் மனைவி சரஸ்வதி அம்மாளும் உங்களின் மூன்று குழந்தைகளான ஷாலினி அக்கா,
கோமதி அக்கா மற்றும் லட்சுமி அனைவரும் நலமா?
45 வருடங்களுக்கு பிறகு கடிதம்
எழுதுவதால் உங்கள் குழந்தைகள் அனைவரும் பேரன் பேத்தி எடுத்திருப்பார்கள். அனைவரையும்
விசாரித்ததாக சொல்லுங்கள்.
நான் ஐந்து வயதாக
இருக்கும் போது மிகவும் வால் பையனாக இருந்தேன். உங்கள் நண்பரும் எனது தாத்தாவுமான இப்றாஹிம்
பாய் நான் நன்றாக படிக்க வேண்டும் என்ற நோக்கில் உங்களிடம் தனி போதனா பயிற்சிக்காக
(ட்யூஷன்) சேர்த்து விட்டார். முதலில் எனக்கு இது சிரமமாக இருந்தது. அதுவும் கல்வி
பயிற்சியானது உங்கள் வீட்டிலேயே நடக்கும். இஸ்லாமிய சூழலில் வளர்ந்த நான் ஒரு பிராமணிய
குடும்பத்தில் மூன்று மணி நேரம் கழிப்பதென்பது ஆரம்பத்தில் சற்று சிரமமாகவே இருந்தது.
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை தினமும் பள்ளி முடித்து ஐந்து மணிக்கு
உங்கள் வீட்டுக்கு வரும் நான் எட்டு மணி வரை உங்கள் வீட்டிலேயே இருப்பேன். பிறகு தாத்தா
வந்து என்னை எங்களின் சொந்த ஊருக்கு அழைத்து செல்வார். இந்த நடைமுறையானது ஆறு வருடங்கள்
தொடர்ச்சியாக இருந்தது.
எனது வயதையொத்த உங்கள்
கடைசி மகள் லட்சுமி எனக்கு நண்பியானாள். அவளுக்கும் எனக்கும் சேர்த்தே பாடங்கள் எடுப்பீர்கள்.
சிலேட்டு பலகையில் குண்டு குண்டாக அழகிய எழுத்தில் தமிழையும் ஆங்கிலத்தையும் கணக்கையும்
பாடங்களாக எடுப்பீர்கள். வயதின் முதிர்ச்சியால் நீங்கள் சற்று ஓய்வெடுக்கப் போகும்
போது நானும் லட்சுமியும் விளையாட சென்று விடுவோம். எந்த தடையும் நீங்களும் சொல்வதில்லை.
வருடா வருடம் நவராத்திரியும்
வரும். வீட்டில் கொலு வைப்பதற்காக ஓரமாக கிடந்த மரப் பலகைள் கூடத்துக்கு வரும். அதனை
தூசி தட்டி பொம்மைகளை வரிசையாக அடுக்கி வைப்பதை நானும் லட்சுமியும் சேர்ந்தே செய்வோம்.
கொலுவுக்காக வைக்கப்படும் பொம்மைகளை துணி கொண்டு துடைத்து அழகுபடுத்தி வைப்போம். கொலுவிற்கு
வரும் விருந்தினர்கள் 'பையன் துறு துறு..
ன்னு இருக்கானே.... உன் பேர் என்னடா அம்பி' என்று சில மடிசார்
மாமிகள் கேட்டு வைப்பார்கள். 'என்னோட பேர் நஜீர்
அஹமது மாமி' என்று சொன்னவுடன் சில மாமிகளின்
முகம் அஷ்ட கோணலாக மாறும். :-) பிறகு சகஜ நிலைக்கு
வந்து விடுவர். அவ்வாறு சகஜ நிலைக்கு வராதவர்களை நீங்கள் சகஜ நிலைக்கு கொண்டு வருவதை
பார்த்துள்ளேன். கொலு நேரங்களில் பரிமாறப்படும்
சுண்டல் மற்றும் பலகாரங்கள் எனக்கும் ஒரு தட்டில் வரும். பிரியாணி, கோழி குருமா, புலவ், தேங்காய்பால் சோறு
என்றே சாப்பிட்டு பழக்கப்பட்ட எனக்கு முறுக்கு, அதிரசம், சுண்டல் என்பது ஒரு புது வகை சுவையை தந்தது. எந்த பலகாரம் பண்ணினாலும்
'நஜீருக்கும் கொடுத்தியா?' என்று உங்கள் மனைவியிடம் கேட்டு வாங்கிக் கொடுப்பீர்கள்.
எனது தாத்தா உங்களுக்கு ஆசிரிய பணிக்காக கொடுத்த சம்பளத்தில் பாதிக்கு மேல் உங்கள்
வீட்டில் பலகாரங்களாக சாப்பிட்டே சரி கட்டி விட்டேன். :-)
ஒரு முறை கொலுவில்
இருந்த சாமி பொம்மை அழகாக இருக்கவே உங்களின் அனுமதியோடு எனது வீட்டுக்கு எடுத்துச்
சென்றேன். புத்தகப் பையில் சாமி பொம்மையை பார்த்த எனது தாயார் 'இதை எல்லாம் நாம வைத்துக் கொள்ளக் கூடாது. திரும்ப அவர்களிடமே கொடுத்து விடு' என்று சொன்னார். நடந்த சம்பவங்களை நான் உங்களிடம் சொன்னவுடன் சிரித்துக் கொண்டே
அந்த பொம்மையை வாங்கி திரும்பவும் கொலுவிலேயே வைத்து விட்டீர்கள்.
ஆறு வருடங்கள் என்னை
உங்கள் வீட்டில் உங்களின் மகனாகவே பாவித்து வளர்த்தீர்கள். நானும் எனது வீடாகவே பாவித்து
வளர்ந்தேன். லட்சுமியோடு சகோதர வாஞ்சையோடு பழகிய அந்த ஆறு வருடங்களை இன்றும் நான் மறக்கவில்லை.
அந்த ஞாபகங்களுடனேயே
பாபாநாசம் மஹாலட்சுமி தியேட்டருக்கு எதிரேயுள்ள வீட்டுக்கு சில வருடங்கள் முன்பு உங்களை
சந்திக்க வந்தேன். குருதட்சணையாக சில ஆயிரங்களையும் கூடவே எடுத்து வந்தேன். ஆனால் உங்கள்
பூர்வீக வீடு பூட்டிக் கிடந்தது. இரண்டு முறை சென்றும் உங்களை காணவில்லை. பக்கத்தில்
இருந்த கடைக்காரர்களிடம் கேட்டேன். அவர்களும் சரியான பதில் அளிக்கவில்லை. இனி வரும்
காலங்களிலாவது உங்களையோ உங்களின் சந்ததிகளையோ சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
என்றும் உங்கள் அன்பு
மாணவன்
ஜே.நஜீர் அஹமது.