Followers

Tuesday, July 11, 2017

அந்நஜாத்' ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் மரணமடைந்தார்!

'அந்நஜாத்' ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் மரணமடைந்தார்!

திருச்சி சகோ அபூஅப்துல்லாஹ் அவர்கள் மதுரை மேலூர் அருகே சற்றுமுன் விபத்தில் மரணமடைந்துள்ளார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்... "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"

ஆரம்ப காலத்தில் ஏகத்துவ பிரசாரத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது சகோ அபூ அப்துல்லாஹ் அவர்கள் வெளியிட்ட 'அந்நஜாத்' பத்திரிக்கை என்றால் மிகையாகாது. பிஜேயும் அவரோடு ஒன்றாக பயணித்த காலம். 'அந்நஜாத்' பத்திரிக்கை மற்றும் பிஜேயின் ஆடியோக்கள் மூலமாகத்தான் எனக்கு ஏகத்துவம் அறிமுகமானது.

சுமார் 28 வருடங்களுக்கு முன்பு ஊரில் 'ஹால் மீட்டிங்' ஒன்று ஏற்பாடு செய்திருந்தோம். அபூ அப்துல்லாஹ்தான் சிறப்பு பேச்சாளர். ஊரில் மிகக் கடுமையாக ஏகத்துவ பிரசாரத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருந்த சமயம். இரவு சாப்பாடு எங்கள் வீட்டில் ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது. எனது தகப்பனாரோ 'ஊரை பகைத்துக் கொண்டு அவரை வீட்டுக்கு அழைத்துள்ளாயே!' என்று என்னிடம் கோபப்பட்டார். 'எந்த எதிர்ப்பு வந்தாலும் அதனை நான் சமாளித்துக் கொள்கிறேன்' என்று எனது தகப்பனாரை சமாதானப்படுத்தி விட்டு அவரை வீட்டுக்கு அழைத்து வந்தேன். அரை மணி நேரத்துக்கு மேலாக அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். பிறகு சகோ சேமியான் அப்துல் ரஷீதும் அவரது வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். நான், அபூ அப்துல்லாஹ், அப்துல் ரஷீது மூவரும் வீட்டில் இரவு உணவு அருந்தி விட்டு கூட்டத்துக்கு அழைத்துச் சென்றோம். கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல கேள்விகளும் கேட்கப்பட்டன. பொறுமையாக பதிலும் கொடுத்துக் கொண்டிருந்தார். எங்கள் கிராமத்தில் ஏகத்துவம் வேறூன்றியது இது போன்ற ஹால் மீட்டிங்குகளால். அதன் பிறகு பிஜே, எம்.ஐ.சுலைமான் என்று பலரும் வந்து மேலும் தழைத்தோங்கச் செய்தனர்.

பின்னாளில் பிஜேயோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் அபூ அப்துல்லாஹ் தனியாக பிரிந்து செயல்பட ஆரம்பித்தார். அதன் பிறகு ஜாக், தமுமுக, தவ்ஹீத் ஜமாத் என்று பல பரிணாமங்கள் எடுத்தாலும் அனைவருக்கும் பெயர் 'நஜாத்காரன்' தான். 'நஜாத்' என்ற அரபிச் சொல்லுக்கு 'கஷ்டத்திலிருந்து மீண்டு வருதல்' என்ற பொருளைக் கொடுக்கும். மத்ஹப், தர்ஹா, ஹத்தம் கந்தூரி, பஞ்சா எடுத்தல், வரதட்சணை வாங்குதல், இணை வைத்தல் போன்ற கஷ்டங்களிலிருந்து மீண்டு வந்த எங்களை 'நஜாத்காரன்' என்று கூறுவது மிகப் பொருத்தமாகவே உள்ளது.

ஆரம்ப காலங்களில் ஏகத்துவம் அறிமுகமாக உழைத்த சகோ அபூ அப்துல்லாஹ் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து அவரை பொருந்திக் கொள்வானாக!




No comments: