Followers

Tuesday, July 07, 2015

என் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பிய தருணங்கள்!



எனது பழைய நண்பர். நான் கணிணி கற்றுக் கொள்ள ரியாத்தில் உள்ள எனது ரூமுக்கே வந்து இலவசமாக பாடம் எடுத்தவர். ஒரு நாள் சவுதியின் ரியாத் நகரில் ரமலான் மாதத்தில் ரோட்டை க்ராஸ் செய்த போது வாகனம் மோதி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . விஷயம் கேள்விப் பட்டவுடன் விடுமுறை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரியிலேயே இருந்தேன். உயிர் பிரிந்தது. மறு நாள் எனது நண்பனின் உடலை நஸீம் மைய வாடியில் அடக்கம் செய்து விட்டு வந்தோம்.

எனது நண்பனுக்கு இரண்டு குழந்தைகள். நண்பனின் மனைவிக்கு ஓரிரு வருடத்தில் வேறொரு நல்ல மணமகனைப் பார்த்து மறுமணம் செய்து கொடுத்து விட்டனர். தற்போது நண்பனின் மனைவியும் குழந்தைகளும் நலமாக உள்ளனர். ஆனால் நண்பனின் தாயாரும் அவரது தங்கையும் தனியாக வீட்டில் உள்ளனர். தந்தை இறந்து விட்டார். இதை எல்லாம் கேள்விப்பட்ட நண்பனின் ஓனர் (கபில்) வருடாவருடம் ரமலானில் தாயாருக்கு பணம் அனுப்புவார். வேலை செய்யும் நாட்களில் மிகவும் சிரத்தையாக வேலை செய்து கம்பெனியை முன்னுக்கு கொண்டு வந்ததால் எனது நண்பனின் மீது மிகுந்த பாசம். இறந்தவுடன் பல லட்சங்களை தாயார் பெயருக்கு அனுப்பி வைத்தார். அது அல்லாமல் வருடாவருடம் ரமலானில் பண உதவி செய்வார். என் மூலமாகத்தான் அந்த பணம் தாயாரை சென்றடையும். நான் சவுதியில் இருக்கும் போது எனது தாயாருக்கு அனுப்பி பணத்தை கொடுக்கச் சொல்வேன். அது போல் இந்த முறையும் ரமலானில் பணம் வந்தது. 17000 ஆயிரம் இந்திய ரூபாய் எனது பெயருக்கு வந்தது.

தற்போது ஊரில் இருப்பதால் சவுதி முதலாளி கொடுத்த பணத்தை நானே நேரில் சென்று அந்த தாயிடம் எனது கையால் கொடுத்தேன்.. மகனை நினைத்து அழுதார். எனக்கும் கண் கலங்கியது. 'உங்களை எல்லாம் பார்க்கும் போது இறந்து போன எனது மகனைப் பார்ப்பது போல் உள்ளது. அடிக்கடி வந்து போய்க் கொண்டிருங்கள்' என்று விடை கொடுத்தார். கனத்த மனத்தோடு எனது நண்பனின் வீட்டிலிருந்து வெளியேறினேன்.

எத்தனையோ பணம் படைத்தவர்கள் சம்பளம் தராது ஏமாற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் பல வருடங்களுக்கு முன்பு இறந்த ஒரு தொழிலாளிக்காக இன்றும் மறக்காமல் பண உதவி செய்து வரும் அந்த அரபியை நினைத்துப் பார்தேன். இறைவனிடம் இது போன்று பலருக்கும் தயாள குணத்தை தந்துதவும்படி பிரார்த்தித்தேன்.

"நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம் “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்”

(அல்-குர்ஆன் 63:9,10)

2 comments:

Dr.Anburaj said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.