Followers

Tuesday, November 06, 2018

ஹாஷிம்புரா படுகொலைகள் 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி.

ஹாஷிம்புரா படுகொலைகள் 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி.
உ பி ஹாஷிம்புராவில் முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த 38 பேரை ஆயுதப்படை போலீஸ் (பிஏசி) படுகொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி வழங்கப் பட்டிருக்கிறது. அந்தப் படுகொலையில் ஈடுபட்ட 16 காவலர்கள் தங்களுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
1987 மே 22ல் மீரட் நகருக்கு அருகில் நடந்த வகுப்புக் கலவரத்தில் ஒரு ராணுவ அதிகாரியின் சகோதரர் கொல்லப்பட்டார். அத்துடன் பிஏசி படையினரின் இரண்டு ரைபிள்களை கலவரக்காரர்கள் பறித்து சென்றனர். அன்றிரவு ஹாஷிம்புரா கிராமம் உட்பட பல பகுதிகளுக்கு லாரிகளில் சென்ற பிஏசி வீரர்கள் ஹாஷிம்புரா கிராமத்திலிருந்து 45 பேரை லாரியில் ஏற்றிச் சென்றனர். அவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அருகிலிருந்த கால்வாய்களில் வீசியெறிந்தனர். பிஏசியின் 41 வது பட்டாலியனின் தளபதி சுரேந்தர்பால் சிங் தலைமையில் இந்த படுகொலைகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அச்சம்பவத்தில் 38 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் 22 பேரின் சடலங்கள் கிடைக்கவில்லை. ஐந்து பேர் குண்டு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். அவர்களுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் பிஏசி படையின் 19 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு நடைபெற்று வந்த போதே சுரேந்தர் சிங் பால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் இறந்தனர். சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட லாரி எது அதில் சென்றவர்கள் யார் என்பதை நிரூபிக்க முடியாததால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக 2015ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒட்டு மொத்தமாக அனைவரும் விடுவிக்கப்பட்டது நீதி வழங்கலுக்கே கரும்புள்ளியாக கருதப்பட்டது.
இந்த நிலையில் மேல் முறையீட்டை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம் பிஏசியின் பதிவேடுகளைப் பெற்று சம்பவம் நடந்த அன்று அதன் படைப்பிரிவுகள் எங்கே சென்றன. எந்தெந்த வாகனங்கள் எந்தப் பணிக்கு பயன்படுத்தப்பட்டன என்ற குறிப்புகளை ஆய்வு செய்தது. அதன் அடிப்படையிலேயே எதிரிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது. குற்றம் செய்தது போலீஸ் படையே ஆனாலும் தவறுக்கு தண்டனை உண்டு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்ததையும் ஆவணங்கள் காணாமல் போனதையும் குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டதையும் நாடு பார்த்தது. பிறகு அதே வழக்கில் டெல்லி உயர்நீதி மன்றம் காட்டிய அக்கறையால் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் ஆதாரப்பூர்வமாக தண்டிக்கப்பட்டதை இன்றைக்கு பார்க்கிறது. முன்பு காவல் துறை நீதித்துறை மீது நம்பிக்கை இழந்தவர்கள் நீதிமன்றத் தீர்ப்பால் நிம்மதி அடைவது திண்ணம். சட்டமும் நியாயமும் நிலைநாட்டப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட படுபாதகச் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
இன்றைய இந்துவின் தலையங்கம்
காலம் கடந்த நீதி என்றாலும் தவறு செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. குஜராத் படுகொலைகளுக்கான நீதியும் இன்னும் பாக்கி இருக்கிறது. அதன் விசாரணையையும் சீக்கிரமே கொண்டு வர பிரார்த்திப்போம். 3000 முஸ்லிம்களின் பிணத்தின் மீது நின்று ஆட்சி அதிகாரத்தை பிடித்தவர்களுக்கு கூடிய விரைவிலேயே தண்டனை கிடைக்க பிரார்த்திப்போம்.

No comments: