Followers

Tuesday, March 10, 2015

கல்லு போன்ற உறுதி எது? விளக்குகிறார் பெரியார்!"சகோதரர்களே!

இந்த மாதிரியான முக்கிய சந்தர்ப்பத்தில் கூட்டப்பட்ட இப்பெரியக் கூட்டத்தில் என் போன்றவர்களது அபிப்பிராயத்தையும், தெரிவிக்கச் சந்தர்ப்பமளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன் இங்கு பேசிய இருவர்களில் முதலில் பேசிய மௌலானா மௌல்வி அ. க. அப்துல் அமீது சாயபு (பாகவி) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் இதற்குமுன் பலதடவை நம் ஈரோட்டிற்கு வந்திருந்தாலும் குறிப்பாக திரு. காந்திய வர்களும், மௌலானா அசாத் சோபானி அவர்களும் நம் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது மௌலானா அவர்கள், மௌலானா அசாத் சோபானி அவர்களின் உருது உபந்நியாசத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு தமிழ்நாடு முழுவதும் அவர்கள் கூடவே இருந்தவர் என்பது உங்களனைவருக்கும் ஞாபகமிருக்கலாம். அவர்கள் இதுவரை பேசியதிலிருந்து எதையும் எந்த மதத்தையும் சரித்திரத்திலிருந்து தீர்மானிக்கக் கூடாது என்றும், அதன் பலனைக் கொண்டும், அது மக்களுக்கு என்ன நன்மை அளித்தது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டுமென்றும், மதம் என்பது வெறும் வேஷத்திலில்லையென்றும், அது மக்களின் நன்மைக் காகவே இருக்க வேண்டுமென்றும், அத்தோடு அது எவருக்கும் நம்பிக்கையில் மாத்திரம் இல்லாமல், பகுத்தறிவிற்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத் திற்கும் ஏற்றதாயிருக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். இதை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன். மற்றும் உலகத்திலுள்ள மதக்காரர்களெல்லாம் இதை ஒப்புக் கொள்ளும்பட்சம் நாட்டில் மத சம்மந்தமான எவ்வித சண்டையும், அபிப்பிராயபேதமும், பிரிவும் பல மதங்களும் ஏற்பட இடமே இருக்காது. தவிர மௌலானா அவர்கள் இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கும், தீண்டாதார் என்பவர்களுக்குமுள்ள பல சுதந்திரங்களையும், இந்து மதத்தில் அவை இல்லாததையும் எடுத்துச் சொன்னார்கள். அதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும் அதைப் பற்றியே இரு சமூகத்திற்கும் பயன் படுமாறு சில வார்த்தைகள் பின்னால் பொதுவாகச் சொல்லுகிறேன்.

இந்துக் கடவுள்கள் உருவத்தை எல்லாம் இஸ்லாமியர்கள் உடைத்து சின்னாபின்னமாக்கப்பட்டதாகவும், ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் குரானையும் வைத்து மதப் பிரசாரம் செய்ததாகவும் சொல்லப் படுகின்றது. அது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம், பொய்யாயிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் அது உண்மையாயிருந்தால் அந்த கொள்கை கொண்ட மகமதிய அரசாங்கம் இதுவரை இந்தியாவில் இருந்திருக்குமாயின் இன்றைய இந்தியாவின் நிலை எவ்வளவோ மேன்மையாய் இருந்திருக்கும். தீண்டாதார்களாக ஆறு கோடியும் பயங்காளிகளும், கோழைகளும் ஒற்றுமையற்றவர்களும் சோம்பேறிகளுமாக இருபது கோடியுமுள்ள மக்கள் இன்று கண்டிப்பாய் இந்தியாவில் இருந்திருக்க மாட்டார்கள் என்பது கல்லு போன்ற உறுதி.

குழவிக் கல்லுக்கு கோடி ரூபாய்

ஒரு பக்கம் நமது மக்கள் கஞ்சிக்கில்லாமல் அலையவும் - நாட்டை விட்டு லட்சக்கணக்கான பேர்கள் கஞ்சிக்காக வெளி நாடுகளுக்கு ஓடவும் பார்த்துக் கொண்டே நமது கடவுள்கள் குழவிக் கல்லுகள் அவதாரத்திலிருந்து கொண்டு இவ்வளவு பெரிய கோவிலுடனும், இத்தனைக் கோடி ரூபாய்கள் நகையுடனும், இத்தனை வேளை பூசையுடனும், இத்தனை தாசி, வேசி, வைப்பாட்டி, பெண்டாட்டிகளுடனும் இருந்து கொண்டு பல்லக்கு, ரதம், தேர், ஆனை, குதிரை, ஆடு, மாடு, மயில், குரங்கு, கழுகு வாகனத்தில் சவாரி செய்து கொண்டு ஊர்வலம் வந்துகொண்டே இருக்குமா? இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இவ்வளவு பணம் நமது நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு கொள்ளை போய் கொண்டு இருப்பதற்கு நமது மக்களே அனுகூலமாய் இருப்பார்கள் என்று கருதுகின்றீர்களா?

இந்தியாவானது எத்தனையோ காலத்திற்கு முன் சுயராஜியத்துடன் உலகத்திலுள்ள நாடுகளில் எல்லாம் மேன்மையாக இருந்து கொண்டிருக்கும். ஆகையால் அதைப் பற்றி அதாவது வாள் கொண்டு இஸ்லாம் மதப் பிரசாரம் செய்ததைப் பற்றியும் நமது கோயில்களை இடித்து சாமிகளை ஊனப்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் நான் சிறிதும் வருத்தமடையவில்லை. அன்றியும் அதுவேதான் அம் மாதிரியாகச் செய்வதுதான் மற்ற எல்லா மதத்தினுடையவும் பிரசார தர்மமாகவும் இருந்திருக்கின்றது. இன்றும் இருக்கின்றது.

-ஈரோடு முனிசபல் எலிமெண்டரி பாடசாலையில் நடந்த நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாள் விழாவிலும் சத்தியமங்கலம் விழாவின் தலைவர் முடிவுரையிலும் பெரியார் அவர்கள் பேசியது.-”குடி அரசு” - சொற்பொழிவு - 24.08.1930

No comments: