
ராணியா எல்லோட் ஒரு கனடிய முஸ்லிம் பெண்மணி. இவரது வாகனத்தை சில பிரச்னைகளால் பறிமுதல் செய்து விட்டனர். அதனை மீட்க சென்ற பிப்ரவரி 24 அன்று நீதி மன்றத்துக்கு வந்துள்ளார் ராணியா. வரும்போது இஸ்லாமிய பெண்கள் அணியும் ஸ்கார்ப் அணிந்து வந்துள்ளார். இதனை பார்த்த பெண் நீதிபதியான எலியானா மெரோ 'தலையின் முக்காட்டை நீக்கி விட்டு வழக்கு சம்பந்தமாக கூறவும்' என்றார்.
இதனை சற்றும் எதிர்பாராத ராணியா இதற்கு சம்மதிக்கவில்லை. 'எனக்கு என்ன அபராதமோ அதனை கட்டி எனது வாகனத்தை மீட்க வந்துள்ளேன். இதற்கும் எனது தலையில் உள்ள ஸ்கார்ஃப்க்கும் என்ன சம்மந்தம்?' என்று கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த நீதிபதி 'வழக்கை ஒத்தி வைக்கிறேன்' என்று கூறியுள்ளார். 'வழக்கை ஒத்தி வைத்தாலும் பரவாயில்லை. நான் பிறகு வந்து மீட்டுக் கொள்கிறேன்' என்று கூறி விட்டு கோர்ட்டை விட்டு வெளியேறி உள்ளார் ராணியா.
இது கனடா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கிறித்தவர்களும் சமூக ஆர்வலர்களும் ராணியாவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர். புதிய கார் ஒன்றை ராணியாவுக்கு வாங்கிக் கொடுக்க நிதி திரட்டப்பட்டது. இதுவரை 44000 டாலர் சேர்ந்துள்ளது. மேலும் பணம் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இனி ராணியா புதிய காரிலேயே பயணிக்கலாம். :-)
உடை என்பது அவரவரின் வசதியைப் பொருத்தது. முகத்தை மூடிக் கொண்டு கோர்ட்டுக்கு வந்திருந்தால் நீதிபதி குற்றம் கண்டு பிடிக்கலாம். இஸ்லாம் முகத்தை மூடச் சொல்லவும் கட்டளையிடவில்லை. தனக்கு பாதுகாப்பும் கண்ணியமும் தலையில் போட்டுக் கொள்ளும் ஸ்கார்பால் கிடைக்கிறது என்று ஒரு பெண் நினைத்தால் அதில் தலையிட இவர்கள் யார்? கருத்து சுதந்திரம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் தற்போது எங்கே சென்று விட்டனர்?
சவுதி அரேபியாவில் ஒரு பெண் ஹிஜாபோடு சென்றால் அது அந்த நாட்டு சட்டத்துக்காக பயந்து கொண்டு செய்வதாக பலர் சொல்கின்றனர். ஆனால் இஸ்லாமிய பெண்கள் தாங்கள் விரும்பியே ஹிஜாபை அணிகின்றனர் என்று சொன்னால் பலரும் நம்புவதில்லை. அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் ஹிஜாபோடு சென்றால் கேலிக்கும் கிண்டலுக்கும் பலரால் உள்ளாக்கப்படுகின்றனர். ஆனால் அதனையும் மீறி ராணியா போன்ற பெண்கள் ஹிஜாபோடு வலம் வருவது அதன் அவசியத்தை உணர்ந்ததாலும், அதனால் கண்ணியம் கிடைக்கிறது என்பதை அறிந்ததாலுமே என்பதை இனியாவது 'பெண் விடுதலையாளர்கள்' ஒத்துக் கொள்வார்களா?
No comments:
Post a Comment