Followers

Thursday, March 05, 2015

நாகூர் தர்ஹாவை நீங்களே இடித்து விடுவீர்களா?

நாகூர் தர்ஹாவை நீங்களே இடித்து விடுவீர்களா?

திரு அரிசோனன்!

//ஆக, தனக்குப் பிடிக்காத எதையும் இடித்துத் தரைமட்டமாக்குங்கள் என்றுதான் நபிகள் நாயகம் போதனை செய்தாரா? //

இஸ்லாம் ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று சொல்கிறது. ஆனால் நாகூர் தர்ஹாவிலும் அஜ்மீர் ஷரீஃபிலும் எனது தலையை சாய்ப்பேன் என்று ஒரு முஸ்லிம் சொன்னால் குர்ஆனை விளங்கிய ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்டவரை திருத்த முயல வேண்டும். தனி மதமாக தங்களை அறிவித்துக் கொண்டு நாகூர் தர்ஹாவைப் போல் இன்னும் 10 கட்டிக் கொண்டாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக நடக்க ஒரு முஸ்லிமுக்கு அதிகாரம் இல்லை என்பதனையே நான் சொல்ல வந்தேன்.

குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக இருப்பதால் தான் நபிகள் நாயகம் தனது மருமகனிடம் 'தரை மட்டத்துக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் எந்த சமாதியையும் தரை மட்டமாக்காமல் விடாதே' என்று சொன்னார். அதே நேரம் ஏசு, மோசே, ஆப்ரஹாம் போன்ற இறைத் தூதர்களைவிட உயர்வாக தன்னைப் புகழ வேண்டாம் என்றும் தடுத்துள்ளார்கள்.

//அப்படி என்றால், மக்காவில் இருக்கும் காபாவில் உள்ளே உள்ள பழைய அரபுத் தெய்வங்கள் ஏன் உடைத்து எறியப்படவில்லை? காபாவுக்கு மட்டும் ஏன் அந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டது என்று சான்று காட்ட இயலுமா, சுவனப்பிரியன்?//

கஃபாவின் உள்ளே இன்றும் சிலை இருக்கிறது என்று உங்களுக்கு யார் சொன்னது? இதற்கு ஆதாரத்தைக் காட்ட முடியுமா?

நபிகள் நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை அன்றைய அரபு மக்களிடம் போதிக்கும் போது அந்த மக்கள் தினம் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர். கஃபாவை சுற்றி 365 சிலைகள் இருந்ததாம். அதில் ஆப்ரஹாம், இஸ்மாயீல், ஏசு போன்ற நபிமார்களின் சிலைகளையும் அந்த மக்கள் வணங்கி வந்தனர். மக்கா இஸ்லாமிய ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனை சிலைகளையும் அப்புறப்படுத்த நபிகள் நாயகம் கட்டளையிட்டார். அதன்படி அந்த சிலைகள் அகற்றப்பட்டன. நான்கு சதுரமான கஃபா கட்டிடத்துக்குள் வேறு எந்த சிலைகளும் இன்று வரை இல்லை. தமிழர்கள் பலரும் கஃபாவின் உள்ளே சென்று தூய்மைபடுத்தியுள்ளார்கள். பல உலக முஸ்லிம்களும் உள்ளே சென்றுள்ளனர். அது சதுர வடிவில் கட்டப்பட்ட ஒரு செங்கல் கட்டிடமே.

//தாங்கள் கூறுவதைப் படித்தது என்னுள் ஒரு மயிர்க்கூச்சர்ப்பு ஏற்பட்டது. தங்கள் கையில் அதிகாரம் இருந்த்திருந்தால் நாகூர் தர்கா மட்டுமா, மற்ற தர்காக்களும் தரை மட்டமாக அல்லவா ஆகி இருக்கும்!//

இதனை எந்த ஒரு தனி மனிதனும் செய்து விட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இஸ்லாமிய அரசு செய்ய வேண்டிய வேலை அது. உடைக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது. ஆனால் தர்ஹா வணக்கம் தவறு என்று முஸ்லிம்களிடம் பிரசாரம் பண்ணலாம். அந்த உரிமை எனக்கிருக்கிறது. அதனை நான் தொடர்ந்து செய்து வருவேன். இன்றில்லா விட்டாலும் இன்னும் சில ஆண்டுகள் கழித்தாவது அந்த மக்கள் நேர் வழியைப் பெறுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது.



No comments: