'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, March 02, 2015
மனதில் பல சோகங்கள் குடி கொண்ட தருணம்!
மனதில் பல சோகங்கள் குடி கொண்ட தருணம்!
எதிர்பாராமல் சில நேரங்களில் சிலரின் சந்திப்பு நம் மனதில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு சென்ற வெள்ளிக் கிழமை எனக்கு எற்பட்டது. அந்த நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
'நீங்க தான் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரரா?'
'ஆமாம் பாய்!'
'எந்த ஊரு?'
'..............'
'ஓ... எப்படி இருக்கீங்க?'
'ரொம்பவும் மன உளைச்சலில் இருக்கிறேன் பாய்'
'ஏங்க இப்படி? சந்தோஷப்படறத விட்டுட்டு கவலைபடறீங்க?'
'நான் மட்டும் நேர் வழில இருந்தா போதுங்களா? என் மனைவியும் குழந்தைகளும் வர வேண்டாமா?'
'ஓ..... அதச் சொல்றீங்களா? அது நாளடைவில் சரியாகி விடும். கவலையை விடுங்க'
'இல்ல பாய்! எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. ரொம்பவும் ஆச்சாரமான குடும்பம்'
'அப்படியா? முன்பு நீங்க எந்த சாதி'
'........ அதிலும் என் மனைவி குடும்பம் ரொம்பவும் ஆச்சாரமான குடும்பம்'
'நீங்க மாறினது அவங்களுக்கு தெரியுமா?'
'போன வருடம் உம்ரா போயிருந்தேன். மக்கா மதினா எல்லாம் போனதுல நம்பிக்கை இன்னும் உறுதியாயிடுச்சு. உம்ரா டிரஸ்ஸோட போட்டோவை ஃபேஸ் புக்குல போட்டேன். அன்றிலிருந்து ஊர்காரர்களிலிருந்து மனைவி வரை ஒரே டார்ச்சர். இதனாலேயே முக நூல் கணக்கையே முடக்கி விட்டு ஃபேஸ் புக் பக்கமே போறதில்ல'
'பிள்ளைங்க எத்தனை?'
'ரெண்டு பேர்'
'என்ன வயசு? அவங்க என்னா சொல்றாங்க?'
'10 வயது. எட்டு வயது. ரெண்டு பெருமே எங்கிட்ட இன்றைக்கு வரைக்கும் சந்தோஷமாத்தான் பேசுறாங்க. 'இஸ்லாத்துல சேர்ந்துட்டியாப்பா! போட்டோல்லாம் பார்த்தேன். நல்லாருக்குப்பா' என்று சொன்னான் பையன். ஆனால் மனைவியோ நான் யாரையோ திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் மாறி விட்டதாக அபாண்டமாக சொல்கிறார்.'
'அப்படியா சொல்றாங்க?'
'ஐயோ அதத்தாங்க என்னால தாங்கிக்க முடியல. என் மனைவி மேல நான் உயிரையே வச்சிருக்கேன் பாய். 40 வயதுக்கு மேல் நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணி என்னத்த சாதிக்கப் போறேன்? இப்படி அபாண்டமா பழி சுமத்தறாங்களே! சிகரெட் குடிக்கிறேனா? தண்ணி அடிக்கிறேனா? விபசாரம் பண்றேனா? எதுவும் இல்லாமல் என் வேலை உண்டு. என் மார்க்கம் உண்டு என்று போய்க்கிட்டு இருக்கிறப்போ இது போன்ற பிரச்னைகள் வந்தால் நான் என்ன செய்வது?'
'நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். பேசாம தொழுது கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள். இறைவன் யாருடைய மனங்களையும் மாற்றக் கூடியவன்.'
'அதத்தான் பாய் நான் டெய்லி செஞ்சுகிட்டு இருக்கிறேன். ஆனால் நாளாக நாளாக அந்த நம்பிக்கை அருகிக் கொண்டே போகிறது. சாப்பிட உக்கார்ந்தா சாப்பிட மனசு வரல... தூங்க போனா தூக்கம் சரியா வர்ரதுல்ல.'
'ஆரம்பத்துல எல்லோருக்கும் நடக்கும் பிரச்னைகள் தான் இதெல்லாம். சிக்கலில்லாமல் இந்த பிரச்னைகளிலிருந்து மீள்வதில்தான் உங்களின் திறமை இருக்கிறது. உங்கள் மனைவிக்கு குழந்தைகளுக்கு செலவுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருங்கள். அது உங்கள் மீது கடமை.'
'ஆம். அதெல்லாம் அனுப்பிக் கொண்டுதான் இருக்கேன். எப்படியாவது என் மனைவி என்னை புரிஞ்சுக்கிட்டா அது போதும். ஒரு நல்ல வழிக்கு கூப்பிட்டா ஏன் இதனை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க என்று ஆச்சரியமா இருக்கு'
'உங்களுக்கு தெரியுது. அவங்களுக்கு அது தெரியணுமே! அவ்வளவு ஈஸியா அதெல்லாம் நடந்துடாது. இத்தனை வருடம் பழகிய கலாசாரத்தை உதறி விட்டு வருவதென்பது எல்லோராலும் முடியாது. அதற்கு சற்று காலம் பிடிக்கும்'
மேலும் நிறைய தனது மனக் குறைகளை பேச முனைந்தார். ஆனால் எனக்கு நேரமாகி விடவே அவரிடம் செல் நம்பரைக் கொடுத்து விட்டு "ஏதும் தேவைகள் இருந்தால் என்னை அழையுங்கள். என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். நானும் உங்களின் மன அமைதிக்காக பிரார்த்திக்கிறேன்" என்று கூறி விட்டு நடையைக் கட்டினேன். இவரது குடும்ப பிரச்னைகள் சுமூகமாக முடிய நீங்களும் பிரார்தியுங்கள் சகோ.....
மறு நாள் வரை அவருடைய பிரச்னைகள் தான் எனது மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தன. பல தலைமுறைகளுக்கு முன்னால் எங்களது பெற்றோர்களும் இதே போன்ற அவச் சொற்களையும், பிரச்னைகளையும், மன உளைச்சல்களையும் சந்தித்திருப்பார்களே என்று என் மனம் பல நூறு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது. இந்த கணிணி யுகத்திலேயே இவ்வளவு பிரச்னைகளுக்கு இவர் முகம் கொடுக்கிறாரே! வாகன வசதி கூட இல்லாத அந்த நாட்களில் ஒரு கலாசாரம் விட்டு இன்னொரு கலாசாரத்துக்கு ஒட்டு மொத்தமாக மாறும் போது என்னவெல்லாம் கொடுமைகளை சந்தித்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே சென்றேன். எனது முன்னோர்களின் தியாகங்களை நினைத்து மெய் சிலிர்த்தது. அவர்கள் அன்று இட்ட விதை முளைத்து பூவாகி காயாகி இன்று கனிந்துள்ளது.
ஆனால் இன்றைய முஸ்லிம்களில் பலர் இதன் அருமை தெரியாது, தங்களின் முன்னோர்களின் தியாகத்தை மதிக்காது சினிமா கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்துக் கொண்டும், மது, மாது, சூது என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஐந்து நேரத் தொழுகையும் கூட இல்லாமல் தான்தோன்றித்தனமாக சுற்றித் திரிவதைப் பார்கிறோம். சவுதியில் கூட ஜூம்ஆ தொழுகைக்குக் கூட போகாமல் ரெம்மி விளையாடிக் கொண்டிருப்பவர்களை நாம் எவ்வாறு அழைப்பது? இது போல் வாழ்க்கையை வீணாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டவர்கள் இந்த சகோதரனின் மன உளைச்சலை சற்றே நினைத்துப் பார்பார்களாக! எப்படிப்பட்ட மார்க்கத்துக்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற உண்மை ஓரளவாவது புரியும். இஸ்லாம் வகுத்தளித்த நன்மை தீமைகளை பகுத்தறிந்து நிரந்தர வாழ்வினை சுகமாக்க நாம் எல்லோரும் முயற்சிப்போமாக!
'நம்பிக்கைக் கொண்டோர் யார் என்றால் இறைவனைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். இறைவனின் வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.'
-குர்ஆன் 8:2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment