Followers

Wednesday, March 18, 2015

மனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்மனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்

இஸ்லாம் 'ஜகாத்' என்ற ஒரு கடமையை இஸ்லாமியருக்கு கட்டாய கடமையாக்கியிருக்கிறது. செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள நகை, விளை நிலங்கள், வாடகை வீடுகள், வாகனங்கள் போன்ற அனைத்தையும் கணக்கிட்டு அதனை ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து விடுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. தொழுகையை எங்கெல்லாம் குர்ஆன் குறிப்பிடுகிறதோ அங்கெல்லாம் ஜகாத்தையும் கொடுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடுவதன் மூலம் இதன் முக்கியத்துவத்தை அறியலாம்.

நபிகள் நாயகம் காலத்தில் 'பைத்துல் மால்' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அனைத்து ஜகாத்துகளையும் வசூலிக்க ஆட்களையே சம்பளத்துக்கு நியமித்திருந்தனர். அன்றைய அரபு சமூகத்தின் வறுமையை இந்த திட்டமானது முற்றிலும் ஒழித்துக் காட்டியது.

'பைத்துல் மால்' என்ற இந்த அமைப்பை தனி ஒரு மனிதனாக ஆரம்பித்து இன்று பல லட்சக்கணக்கான ஏழை இஸ்லாமிய மாணவ மாணவிகள் பலன் பெற காரணமாக உள்ளார் கியாஸூதீன் பாஸூ கான்! கட்டுமான துறையில் உள்ள இவர் இஸ்லாமியர்களின் ஜகாத் பணத்தை வசூலித்து கல்விப் பணிக்கு செலவிட திட்டமிட்டார். 25 வருடங்களுக்கு முன்னால் தனது சொந்தங்களிடமிருந்து ஜகாத் தொகைகளை வசூலித்தார். இது பற்றி அவர் கூறுவதாவது....

'ஜகாத் பணத்தை தனி மனிதனாக செலவிடுவதை விட அதனை பொதுவானதாக்கி அனைவரையும் பங்கு பெற வைக்க முயற்சித்தேன். ஆரம்பத்தில் பலர் இதனை விரும்பவில்லை. சிறிது காலத்துக்கு பிறகு எனது முயற்சிக்கு பல இடங்களிலிருந்தும் ஆதரவு பெருகியது. எனது சொந்தங்கள் நீங்கலாக மற்ற ஆட்களும் பணத்தை தர முன் வந்தனர். ஒரு சிலர் தங்களின் நன்கொடைகளையும் தர ஆரம்பித்தனர். 1992 ல் ஆரம்பித்த இந்த ட்ரஸ்டுக்கு 11 லட்சங்களே மூலதனமாக இருந்தது. பிறகு சொந்தங்கள் நண்பர்கள் மூலமாக பணம் குவியத் தொடங்கியது. Hyderabat Zakat And Charitable Trust (HZCT) என்ற இந்த ட்ரஸ்ட் ஆனது சில மாதங்களிலேயே வருடத்துக்கு 12 கோடி ரூபாயை கையாளும் அமைப்பாக பரிணமித்தது. நாங்கள் ஆரம்பத்தில் பள்ளிகளை ஆலமரத்தடியிலும், பள்ளி வாசல்களின் உபயோகப்படுத்தப் படாத இடங்களையும் தேர்ந்தெடுத்து அங்கு நடத்த ஆரம்பித்தோம். வசதி குறைந்த நடுத்தர வர்க்கத்து குழந்தைகள் மிகவும் ஏழைகள் இதனால் கல்விச் சாலையை நெருங்க முடிந்தது.

நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற படிப்புகளை படிப்பது கனவாக இருந்த போது எங்கள் ட்ரஸ்ட் அவர்களை தேடி கண்டு பிடித்து அவர்களின் வாழ்வை ஒளிமயமாக்கியது. நன்றாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு வருட உதவித் தொகையாக 25000 ரூபாய் இந்த ட்ரஸ்ட் மூலம் விநியோகித்தோம். இதன் மூலம் 45000 மாணவர்கள் ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநில மாணவ மாணவியர் பெரும் பலனடைந்தனர். 23 வருட காலங்களில் எங்கள் ட்ரஸ்டின் மூலம் 100 கோடி ரூபாய் கல்வி உதவி தொகையாக ஏழை மாணவர்களுக்கு அளித்துள்ளோம்.

இது மட்டுமல்ல நல்ல ரேங்கில் வரக் கூடிய மாணவ மாணவிகளை பொருக்கி எடுத்து 'நாளைய தலைவர்கள்' என்ற திட்டத்தின் கீழ் அவர்களை சிவில் சர்வீஸ் பரீட்சைகள் எழுத இலவச பயிற்சியும் கொடுத்து வருகிறோம். வெற்றிலை பாக்கு கடை வைத்துள்ள தொழிலாளியின் மகன் ஷேக் இம்ரான், வாட்ச் கடை வைத்து பிழைப்பு நடத்தும் தொழிலாளியின் மகன் தவ்ஃபீக், விவசாய குடும்பத்திலிருந்து வந்துள்ள வண்ணூர் வள்ளி போன்ற ஏழைகளையும் பெரும் படிப்புகளின் வாசலை மிதிக்க வைத்துள்ளோம். 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே திறமையானவர்களாக பார்த்து பொருக்கி எடுத்து விடுகிறோம். மேல் படிப்புக்காக அவர்களை முதல் வருடத்திலிருந்தே தயார் படுத்துகிறோம். முன்பெல்லாம் இஸ்லாமியர்கள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் அரசு வேலைகளில் போதிய விருப்பம் இல்லாமல் இருந்தனர். தற்போது நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. கூலி வேலை செய்து பென்ஷன் பெற்று வரும் ஒரு ஏழைத்தாய் தனது குழந்தையை கல்லூரி வரை அனுப்ப பாடுபடுகிறாள். இது வரவேற்கத்தக்க மாற்றம். ஒரு மாணவனுக்கு கல்லூரி படிப்பு இருந்து விட்டால் அவன் சமூகத்தில் எங்கும் சென்று தனது முத்திரையை பதித்து விட முடியும்.

பலரும் என்னிடம் கேட்கின்றனர் 'வருமானத்தை அதிகம் விரும்பாத இந்த துறையை கட்டிக் கொண்டு எத்தனை காலம் ஓட்டுவீர்கள்' என்று. ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்து இதை விட அதிக லாபம் எங்களால் ஈட்ட முடியும். ஆனால் ஏழைகளை தூக்கி விடும் இந்த கல்விப் பணியில் எங்களுக்கு மிகுந்த மன நிறைவு ஏற்படுகிறது. லாபம் இங்கு கிடைக்கா விட்டாலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இதை விட அதிகமான வெகுமதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே உண்டு' என்று முடித்தார்.

இவரை போன்ற செல்வந்தர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து விட்டால் அந்த சமூகம் எப்படிப்பட்ட சமூகமாக மாறியிருக்கும் என்று நினைத்துப் பார்தேன். நம் தமிழக கிராமங்களும் இது போன்ற கல்விப் புரட்சியை நோக்கி பயனிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோமாக!

இஸ்லாமிய கிராமங்களில் ஊருக்கு இரண்டு அரபி மதரஸாக்கள் உலக கல்வியை புறந்தள்ளி அந்த மாணவர்களை 10க்கும் 20க்கும் ஃபாத்திஹா ஓதும் மட முல்லாக்களாக மாற்றும் போக்கை ஒதுக்கி மார்க்க கல்வியோடு இணைந்த உலகக் கல்வியை கொடுக்க முனைவோமாக! சிஎம்என் சலீம், பிஜே போன்றவர்களின் ஆலோசனையில் அமைந்த கல்வித் திட்டத்தை நமது மாணவ மாணவிகளுக்கு கொடுக்க முயல்வோமாக!

'நபியே! எதை இறைவழியில் செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக'
-(குர்ஆன் - 2:219)
No comments: