Followers

Tuesday, March 03, 2015

புயலால் பாதிப்படைந்த அமெரிக்காவில் சவுதி மாணவர்கள்!சூறாவளிக் காற்றானது வருடா வருடம் அமெரிக்காவை பயமுறுத்திக் கொண்டிருக்கும். 10 வருடங்களுக்கு முன் கத்ரீனா புயலால் லூசியானா மாநிலத்தில் ஏற்பட்ட இழப்பு மட்டும் 108 மில்லியன் டாலராகும். 2013 சாண்டி புயல் 24 பேரை பலி கொண்டது. அதே வருடத்தில் மூர் மற்றும் ஒகாலஹாமா மாநிலங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. டோரோண்டோவில் உள்ள பள்ளியில் புயல் தாக்கி 10 குழந்தைகள் இறந்தனர். குடியிருப்பு பகுதிகளும் பலத்த சேதமடைந்தது. இதனை சரி செய்ய 2 பில்லியன் டாலர் தேவைப்பட்டது. இதனை பொது மக்களிடமிருந்து வசூலிக்க முடிவெடுத்தனர்.

ஒகலாஹாமாவில் படித்து வந்த எட்டு சவுதி மாணவர்கள் Habitat (ஹபிடாட்) தன்னார்வ தொண்டு நிறுவனத்தோடு இணைந்து பொது நலப் பணிகள் செய்ய ஆசைப்பட்டனர். இது பற்றி மெக்கானிகல் இன்ஜினீயரிங்க் படித்து வரும் சவுதி மாணவர் மெஹ்மூத் சொல்கிறார் 'இரண்டு வருடங்களுக்கு முன்பு மூர் மாநில மக்கள் நலனுக்காக ஒரு சர்ச் மூலம் நன்கொடை வசூலிக்க முடிவெடுத்தோம். எட்டு பேர் கொண்ட எங்கள் குழு வேலைகளை பகுதி பகுதிகளாக பிரித்துக் கொண்டு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று தேவையான உதவிகளை செய்து கொடுத்தது. வீட்டுக்கு வண்ணம் பூசுவது, உடைந்த வீடுகளை சரி பண்ணுவது, ஜன்னல்களை சரி செய்து அதற்கு கதவுகளை போடுவது, என்று அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தோம். இந்த வருடமும் இந்த பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

பழுதடைந்த ஒரு வீட்டின் உரிமையாளரான ஜெனட் ஹோட்ஸன் தனது வீட்டை சரி செய்வது சவுதி கல்லூரி மாணவர்கள் என்ற செய்தி கேட்டு ஆச்சரியத்தோடு எங்களை பார்த்தார். எங்களோடு சந்தோஷமாக பேசியும் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இவ்வாறு பொது நல சேவையின் மூலம் பாதிப்படைந்த மக்களுக்கு ஒரு உத்வேகத்தை நம்மால் கொடுக்க முடிகிறது. நமக்கும் மன நிறைவு கிடைக்கிறது' என்கிறார்.

கல்லூரி மாணவர்கள் என்றால் தண்ணி அடிப்பது, தம் அடிப்பது, டிஸ்கொதேக்கு போவது, கண்ட பெண்களோடு சுற்றுவது என்பது பெரும்பாலும் எழுதப்படாத விதியாகி விட்டது. அதனை மாற்றி அதுவும் அமெரிக்கா போன்ற நவ நாகரிக நாட்டில் பொது நல சேவையை தங்கள் பொழுது போக்காக கையிலெடுத்திருக்கும் சவுதி கல்லூரி மாணவர்களை பாராட்டுவோம்.

தகவல் உதவி:
சவுதி கெஜட்
28-02-2015

தொழுவது, நோன்பு வைப்பது, ஹஜ் செய்வது மாத்திரமே இறைப் பணி என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். ஏழைகளுக்கு உதவுவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் கூட இறைப் பணியிலேயே சேரும் என்பதை பலரும் உணர்வதில்லை. கிருத்தவ நண்பர்கள் ஈடுபடும் பொது நலப் பணிகள் போல் இஸ்லாமியர்களும் பொது நல சேவையில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். இதனை இறைவன் மிகவும் விரும்புகிறான். நம்மால் ஒருவர் நலம் பெற்று நம்மை பார்த்து வாழ்த்துவது இருக்கிறதே அதற்கு இறைவனிடம் மிகப் பெரிய கூலி உண்டு.


"புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது இறைவனின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், வானவர்களின் மீதும், வேதத்தின் மீதும், இறைத் தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்வதாகும்: தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தலாகும்: இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் இவையே புண்ணியமாகும்."

குர்ஆன் : 2:177

No comments: