Followers

Monday, March 09, 2015

இஸ்லாமியரை தடுக்கலாம்! இந்துக்களை தடுக்க முடியுமா?





இஸ்லாமியரை தடுக்கலாம்! இந்துக்களை தடுக்க முடியுமா?

திரு பிஎஸ்!

//இசுலாமியருக்குச் சொல்லிச்சொல்லி அவர்களைப்போக விடாமல் செய்வேன் என்று சுவனப்பிரியன் எழுதுகிறார். அபபடியே இசுலாமியர் நிறுத்திக்கொண்டாலும் இந்துக்களால் தர்கா வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.//

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல இன்று நாகூர் தர்ஹா போன்ற தமிழக தர்ஹாக்களை பெரும் பாலான இஸ்லாமியர்கள் விட்டு விட்டனர். எனது குடும்பத்திலேயே பலர் வருடா வருடம் நாகூர் தர்ஹாவுக்கு சென்று வருவர். குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி இன்று பெண்களும் தொழுகைக்கு பள்ளிக்குச் செல்கிறார்கள்.

மற்றபடி இந்துக்கள் தர்ஹாவுக்கு இன்றல்ல. தொன்று தொட்டு வந்து கொண்டேயிருக்கிறார்கள். பள்ளி வாசலுக்கும் தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து ஓதி விடச் சொல்வார்கள். திருத்தணி பள்ளி வாசலில் சில நேரம் நானும் ஓதி ஊதி விட்டுள்ளேன். :-) அது அவர்களின் நம்பிக்கை. அதில் நான் தலையிட முடியாது. ஆனால் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றினால் ஒரு இஸ்லாமியன் என்ற முறையில் அதற்கான ஆதாரத்தை கேட்கும் உரிமை எனக்கிருக்கிறது.

//தர்காக்கள் இறந்த இசுலாமியர் மேல் எழுப்பப்பட்ட சமாதிகள் மட்டுமல்ல, இறந்த இசுலாமியரல்லாதோர் மேலும் எழுப்பப்பட்ட சமாதிகளும் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை. பிராமணர்களுக்கும் தர்காக்கள் உண்டு. திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வரும் காட்டுப்பள்ளிவாசல் என்ற நிறுத்ததில் வரும் புகழ்பெற்ற தர்கா இரு இசுலாமியச்சஹோதரகளும் 7 பிராமணப்பெண்டிரும் தொடர்பான கதை. தஞ்சைக்குப் பக்கத்தில் இருப்பது பாப்பாத்தி அம்மன் தர்கா (ஒரு பிராமணப்பெண் இசுலாமியராக மாறி இறந்து அது தர்ஹாவாக மாறியுள்ளது) //

இது எனக்கு புதிய தகவல். தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! அந்த தர்ஹாக்களை கல்விச் சாலைகளாகவோ அல்லது இறைவனை வழிபடும் பள்ளி வாசலாகவோ மாற்றினால் அங்கு அடங்கியுள்ள அந்த சகோதரர்களின் நன்மைகளாக பதிவு செய்யப்படும். அந்த தர்ஹாக்களை நிர்வகிப்பவர்கள் இதற்கான முயற்சிகளை அந்த மக்களின் துணையோடு எடுப்பார்களாக!

//லேட் மலர்மன்னன், க்ருஷ்ணகுமார் போன்ற இந்துக்கள் இத்தர்காக்களுக்குச் சென்று வழிபடுதலும் உருகுதலும்//

திரு மலர்மன்னனும், திரு க்ருஷ்ணகுமாரும் தர்காக்களுக்காக உருகுவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. பவுத்தம், சமணம், நாட்டார் வழிபாடு, தமிழரின் வழிபாடு, கிறித்தவம் என்று அனைத்து வழிபாடுகளிலும் பார்பணியத்தை புகுத்தி அவற்றை எல்லாம் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே மாற்றி விட்டனர். ஆரம்ப காலம் தொட்டு இஸ்லாம் மட்டுமே தனித் தன்மையோடு விளங்குகிறது. இந்து மதத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! பல இந்துக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனை தடுக்க அருமையான வழிதான் இஸ்லாத்தில் இந்து மத சடங்குகளை புகுத்துவது. அதற்கு மிக உறுதுணையாக இருப்பது தமிழக தர்ஹாக்கள். தேர் இழுத்தலை சந்தனக் கூடு என்றும், தீ மிதித்தலை பூக்குழி இறங்குதல் என்றும் பெயர்களை மாற்றி இந்து மத சடங்குகளை கணக்கின்றி புகுத்தினர். காலில் விழுவது, மயிலிறகால் ஆசீர்வதிப்பது, இசைக் கச்சேரிகளை அரங்கேற்றுவது, மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி, தேங்காய், பூ, சந்தனம் என்று அனைத்து கலாசாரத்தையும் தர்ஹாக்களில் அரங்கேற்றுவதை காணலாம்.

ஆனால் இவற்றில் எந்த ஒன்றுமே பள்ளி வாசலில் அரங்கேற்ற முடியாது. பாதுகாக்கப்பட்ட குர்ஆனின் மொழி பெயர்ப்பு இருப்பதால் அதனை வைத்தே புதிய வழிபாடுகள் அனைத்தையும் இஸ்லாமியர் ஓரங்கட்டி விடுவர்.

எனவே தான் க்ருஷ்ணகுமாரும், அரிசோனனும், மலர் மன்னனும் தர்ஹாவுக்கு கொடி பிடிக்கின்றனர். இது தர்ஹாவின் மேல் எழுந்த பாசம் அல்ல. இஸ்லாத்தின் தனித் தன்மையை உடைக்க தர்ஹா பயன்படுகிறதே என்ற சந்தோஷத்தில் எழும் வார்த்தைகளே அவை. இதனை க்ருஷ'ணகுமாரும் நன்றாகவே உணர்வார் :-)

No comments: