பாவத்தின் சம்பளம்!-உண்மை நிகழ்வு!
எனது கம்பெனியில் கேரள மலப்புரத்தைச் சேர்ந்த முஹம்மது .... என்ற நபர் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். ஆடம்பர பிரியன். நாலு பேர் தன்னை மெச்ச வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக் கூடியவன். இஸ்லாமிய பற்று அந்த அளவு இல்லாதவன்.
ஒருமுறை எனது ஓனரிடம் புதுப்பிப்பதற்காக பாஸ்போர்ட்டைக் கேட்டான். அவனிடம் அவனது பாஸ்போர்ட்டைக் கொடுத்தார் எனது ஓனர். இந்த சம்பவத்தை பலரும் மறந்து விட்டோம். இதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அந்த மலையாளி 60000 ரியால்(கிட்டத்தட்ட 8 லட்ச ரூபாய்) கம்பெனி பணத்தில் கையாடல் செய்து விட்டு மறுநாளே கேரளாவும் சென்று விட்டான்.
வியாழன் இரவு டிக்கெட் புக் பண்ணியதால் வெள்ளிக்கிழமை விடுமுறை. எனவே யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அவன் கேரளா சென்று அவனது வீட்டில் சேரும் போதுதான் எங்களுக்கே விபரம் தெரிகிறது. சும்மா சொல்லப்படாது. திறமைசாலிதான். :-)
எனது ஓனரால் இதை நம்பவே முடியவில்லை. 'எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்! இப்படி நம்பிக்கை மோசம் செய்து விட்டானே! அவசரம் என்று என்னிடம் கேட்டிருந்தால் நானே கடனாக கொடுத்திருப்பேனே' என்று ஆதங்கப்பட்டார். பிறகு என்னிடம் 'மும்பையில் எனது ஏஜண்டுகள் மூலமாக அவனது காலையோ கையையோ இங்கிருந்து கொண்டே என்னால் எடுக்க முடியும். இறைவன் குர்ஆனில் 'தீமையின் கூலி அது போன்ற தீமையே! சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி இறைவனிடத்தில் உள்ளது'-(குர்ஆன் 42:40) என்று கூறுகிறான். எனவே அவனது மனைவிக்காகவும், அவனது குழந்தைகளுக்காகவும் அவனை அதுபோல் செய்யாமல் விடுகிறேன். மறுமையில் எனக்கு அந்த பணம் கிடைத்து விடும்' என்று கூறியவுடன் நானும் சற்று இந்தியன் என்ற முறையில் வெட்கப் பட்டேன்.
குர்ஆனும், முஹமது நபியின் வாழ்வும் இந்த அரபுகளை எந்த அளவு மாற்றியிருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். அவரிடம் 'நீங்கள் செய்வதுதான் சரி' என்று கூறி அவரை சமாதானப் படுத்தினோம்.
இந்த நேரத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பு ஜனாதிபதி உமர் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு எனக்கு ஞாபகம் வந்தது. அதை பகிர்ந்து கொள்கிறேன்.
முகமது நபிக்குப் பிறகு இரண்டாவது கலீபாவாக பொறுப்பேற்ற உமரைப் பற்றி நாம் அறிவோம். அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அன்றைய அரபியர்களின் மூட பழக்கத்தின் படி தன் குழந்தையை கொன்று விடுவது என்று உமர் முடிவு செய்கிறார். அதன்படி அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆளரவமற்ற இடத்துக்கு வருகிறார். பிறகு அங்கு தன் குழந்தையை உயிரோடு புதைப்பதற்காக குழியைத் தோண்டுகிறார். அப்பொழுது அவரது தாடியில் மண் ஒட்டிக் கொள்கிறது. இதைப் பார்த்த அந்த குழந்தை தன் கையால் அந்த மண்ணைத் தட்டி விடுகிறாள். குழி வெட்டி முடிந்தவுடன் அந்த குழந்தையை குழியில் இறக்குகிறார் உமர். அப்பொழுது அந்த சிறுமி 'நீங்களும் வரவில்லையா?' என்று அப்பாவியாக கேட்டது. மனதைக் கல்லாக்கிக் கொண்ட உமர் மண்ணைத் தள்ளி அந்தக் குழந்தையை உயிரோடு சமாதியாக்குகிறார். எந்த அளவு அன்றைய சமூகம் கல் நெஞ்சம் படைத்ததாக இருந்திருந்தால் இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றியிருக்கும்.
பல வருடங்கள் கழித்து முகமது நபியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு உமர் இஸ்லாத்தை ஏற்கிறார். ஒரு நாள் முகமது நபியிடம் தன் பெண் குழந்தையை தன் கையாலேயே கொன்றதை நினைவு கூர்ந்து தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். அவரைத் தேற்றிய முகமது நபி அறியாமைக் காலத்து பாவங்களை இறைவன் மன்னித்து விடுவதாக வாக்களித்துள்ளான் என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.
பின்னால் முகமது நபி, அபுபக்கருக்குப் பிறகு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட ஆட்சியும் செய்கிறார் உமர். இவரது வரலாறைப் படித்த காந்தியடிகள் 'சுதந்திர இந்தியாவின் ஆட்சி முறை கலீபா உமருடைய ஆட்சியைப் போல் இருக்க வேண்டும்' என்று சொல்லும் அளவுக்கு சிறந்திருந்தது.
சரி. இனி பதிவுக்கு வருவோம். பணத்தை மோசடி செய்த அந்த மலையாளி சென்று கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகின்றது. தவறான வழியில் வந்த பணம் தவறாகவே ஆடம்பரமாக செலவு செய்து அனைத்தையும் இழக்கிறான். சில மாதங்களுக்கு முன்பு அவனது உறவினர் மூலமாக அவன் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அவனுக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், ஆபரேஷன் செய்தால் பிழைப்பது கஷ்டம் என்றும், அந்த அளவு பணம் வசதியும் இல்லை என்றும் கேள்விப்பட்டோம். சில கேரள நண்பர்கள் மூலமாக செய்தியை உறுதி செய்து கொண்டோம். கம்பெனியில் உள்ளவர்களும் ஒரு சில மலையாளிகளும் சேர்ந்து பணம் வசூல் செய்து அவனது விலாசத்துக்கு அனுப்பி வைத்தோம்.
சில நாட்களுக்கு முன்பு அவனின் தற்போதய நிலையை எனது ஓனரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். பொறுமையாக கேட்டவர் 'தவறான வழியில் வந்த பணத்தினால் என்ன சுகத்தை அவன் அடைந்து விட்டான். இந்த உலகம் இந்த உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மண்ணினால் ஆனது. மக்கி மண்ணோடு மண்ணாகக் கூடியவை. இதன் அழகில் அவன் மயங்கியதால் கௌரமான வேலையும் போய் மறுமையிலும் எனக்கு கடன்காரனாகவும் ஆகி விட்டான். பணம் இழந்த நான் பல மடங்கு முன்பைவிட சிறப்பாகவே இருக்கிறேன். அவனது அக்கவுண்ட் நம்பரை வாங்கவும். அவனது மருத்துவ செலவுக்கு நான் பணம் அனுப்புகிறேன்' என்று சொன்னவுடன் இந்த அரபியை நினைத்து நெகிழ்ந்து விட்டேன். எப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரர்களாக இருந்த இவர்களின் மனதை இஸ்லாம் எந்த அளவு பண்படுத்தியிருக்கிறது என்று நினைத்துப் பார்கிறேன்.
மறுமை என்ற ஒரு வாழ்வை அந்த அரபி நம்பாமல் இருந்திருந்தால் அந்த மலையாளி உயிரோடு இருந்திருக்க முடியாது. எனது ஓனரின் பணம் அவனது வைத்திய செலவுக்கு பயன்படுகிறது என்ற செய்தியே அவனை சிறந்த மனிதனாக மாற்றும். செய்த தவறை எண்ணி வருந்தி எனது ஓனரிடம் மன்னிப்பும் கேட்டால் ஒருக்கால் இறைவன் அவனை மன்னிக்கலாம். சென்ற ஆண்டு சிகிச்சை பலனளிக்காமல் அந்த மலையாளி இறந்து விட்டார். சேர்த்த பணமெல்லாம் வைத்தியத்துக்கே சென்று விட்டதால் குழந்தைகளை வளர்க்க அவரது மனைவியிடம் பொருளாதார வசதி இல்லை. தற்போது அந்த குழந்தைகள் இஸ்லாமியர்கள் நடத்தும் அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது நண்பர் சொன்னார்.
இவருடைய வாழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமையட்டும்.
-------------------------------------------------------------------------------
இன்னா செய்தாரே ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.-குறள்
'உங்கள் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் சோதனையே! இறைவனிடமே மகத்தான கூலி இருக்கிறது.'-குர்ஆன் 64:15
'தீமையின் கூலி அது போன்ற தீமையே! சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி இறைவனிடத்தில் உள்ளது'-(குர்ஆன் 42:40)
'விபசாரி விபசாரம் புரியும்போது இறைவிசுவாசியாக இருந்து கொண்டு விபசாரம் புரிவதில்லை. ஒருவன் மது அருந்தும்போது இறை விசுவாசியாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் பிறரது பொருளை திருடும்போது இறை விசுவாசியாக இருந்து கொண்டு திருடுவதில்லை.'-முகமது நபி
அறிவிப்பவர் : அபு ஹூரைரா ஆதாரம் புகாரி 2475
4 comments:
பயனுள்ள, படிப்பினை மிக்க பதிவு.
படிப்பினைக்குரிய, பயனுள்ள பதிவு.
படிப்பினைக்குரிய, பயனுள்ள பதிவு.
இப்பதிவு, நமக்கெல்லாம் ஒரு பாடம்! 'உங்கள் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் சோதனையே! இறைவனிடமே மகத்தான கூலி இருக்கிறது.'-குர்ஆன் 64:15, "தீமையின் கூலி அது போன்ற தீமையே! சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி இறைவனிடத்தில் உள்ளது'-(குர்ஆன் 42:40)
Post a Comment