Followers

Wednesday, March 04, 2015

பலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்!



பலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்!

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார்.

அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து “உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?” என்று கேட்டார் விவேகானந்தர்.

“நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்” என்று பதில் சொன்னார்.

“மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது?” என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

“பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!”

“பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக்கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே” என்று மடக்கினார் விவேகானந்தர்.

“ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே” என்றார் பிரச்சாரகர்.

அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் “ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்?” என்று கேலியாகச் சொன்னார்.

"விடுதலை” தலையங்கம் 21-1-2012



No comments: