



The National Water Company’s (NWC) ஜெத்தாவில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. குடி தண்ணீர் சேகரிக்கும் கொள்கலன் உலகிலேயெ மிகப் பெரிதானதாக ஜெத்தா NWC தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை கின்னஸ் புத்தகமும் உலக சாதனையாக வெளியிட்டுள்ளது. 2.064 மில்லியன் க்யூபிக் மீட்டரில் இந்த கொள்கலன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 1.8 மில்லியன் க்யூபிக் மீட்டரே கின்னஸ் சாதனையாக இருந்தது.
ஒரு சிலிண்டரின் கொள்ளளவு 188 க்யூபிக் மீட்டராகும். இதற்கான செலவு 740 மில்லியன் சவுதி ரியால். கடல் நீரை குடி நீராக்கி இன்று வரை தனது நாட்டு மக்களுக்கு குடி நீர் பிரச்னையே இல்லாது பார்த்துக் கொண்டுள்ளது சவுதி அரசாங்கம்.
மன்ஃபுகா என்ற இடத்தில் அஸ்திவாரம் தோண்டும் போது நம் நாட்டைப் போல் பூமியிலிருந்து தண்ணீர் பீரிட்டு வர ஆரம்பித்தது. பல சக்தி வாய்ந்த மோட்டார்களை வைத்து தண்ணீரை ஒரு வருடத்துக்கு மேலாக இறைத்தனர். அதன் பிறகு அந்த இடம் வற்றி தற்போது கட்டிடம் அந்த இடத்தில் மேலெழும்பியிருக்கிறது. பாலைவன தேசத்தில் இவ்வாறு பூமிக்கு அடியில் பெருந் தொகையான நீர் வளம் உள்ளது ஆச்சரியமாக இருந்தது எனக்கு. வீதிகள் தோறும் அழகிய மரங்களை நட்டு அந்த இடங்களை பசுமை பூத்துக் குலுங்கும் இடங்களாக மாற்றி வருகின்றனர். பாலை வனத்தை சோலை வனமாக மாற்றிக் காட்டியுள்ளனர்.
நான் பிறந்த மண்ணான தமிழகத்தையும் ஒரு தரம் திரும்பிப் பார்க்கிறேன். முன்பு இருந்த மரங்களெல்லாம் வெட்டப்பட்டு அந்த இடங்கள் மொட்டையாக காட்சி அளிக்கின்றன. குளங்கள் தூர்த்து விட்டு அங்கும் கட்டிடங்களை கட்டி வருகிறோம். வயல் வெளிகள் எல்லாம் இன்று மனைகளாக காட்சி தருகின்றன. மரங்களை வெட்டியதால் இன்று மழையும் பொய்த்து போனது. முன்பு எனது கிராமத்தில் ஐந்து குளங்கள் இருந்தது. தற்போது மூன்றைத்தான் பார்க்கிறேன். அந்த மூன்றும் கூட பள்ளி வாசலின் உள்ளே இருப்பதனால் தப்பித்தது.
நமது முன்னோர்கள் மேலிருந்து வரும் மழை நீரை தேக்கி வைக்கும் கொள்கலன்களாகத்தான் குளங்களையும் கிணறுகளையும் பார்த்தார்கள். இதனால் நிலத்தடி நீர் என்றுமே வற்றாது நீராதாரத்தை நமக்கு வழங்கிக் கொண்டிருந்தது. முன்பு எங்கள் கிராமத்தில் 20 அடியில் நீர் வரும். இப்போதோ 70, 80, 100 அடிகள் என்று போர் போட்டு நீர் இறைக்கிறார்கள். இருந்தும் கோடை காலங்களில் எவ்வளவு கீழே போனாலும் நீர் வருவதில்லை. வடிகால்களான குளங்களை எல்லாம் தூற்றி அங்கும் கட்டிடங்களை எழுப்பியதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரக் கேட்டையும் உண்டாக்குகிறது. பெருவாரியான மழை நீர் யாருக்கும் பயன் படாமல் கடலில் போய் கலக்கிறது.
இவற்றை எல்லாம் நீண்ட கால திட்டம் போட்டு செயல்படுத்த வேண்டிய அரசோ சாராயத்தை சொந்த தொழிலாக நடத்தி மக்களை குடிகாரர்களாக மாற்றி வைத்துள்ளது. 10 வயது 12 வயது சிறுவர்களும் குடித்து விட்டு சீருடையோடு சரிந்து கிடக்கின்றனர். நிலைமை இப்படியே சென்று கொண்டிருந்தால் சோலைவனம் பாலைவனமாக மாற அதிக நாள் பிடிக்காது. இனியாவது அரசுகளும் நம் நாட்டு மக்களும் விழித்துக் கொள்வார்களா?

No comments:
Post a Comment