Followers

Tuesday, January 26, 2016

பாகிஸ்தான் செழிக்காது! அபுல் கலாம் ஆசாத்

எவ்வளவு தீர்க்கதிரிசனமான வார்த்தை! பாகிஸ்தான் பிரிவினையில் அவ்வாறு செல்வது முஸ்லிம்களின் எதிர்காலத்தை குட்டிச்சுவராக ஆக்கி விடும். எனவே தனியாக பிரிந்து செல்லாதீர்கள். இநதுக்களோடு சேர்ந்தே ஒரே இந்தியாவில் இருப்போம் என்று கடைசி வரை போராடி பார்த்தார் அபுல் கலாம் ஆசாத். கேட்டார்களா குறுமதியாளர்கள். பேச விட்டார்களா அபுல் கலாம் ஆசாத்தை! பிரித்துக் கொண்டு சென்று 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அதற்குள் அபுல் கலாம் எதைச் சொன்னாரோ அதனை உண்மையாக்கி விட்டனர் பாகிஸ்தானிகள். எங்கு திரும்பினாலும் பிரச்னை. கொலை, கொள்ளை, ஊழல் என்று இன்று பாகிஸ்தான் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

லாகூரிலிருந்து வெளிவந்த ஒரு உருது பத்திரிக்கையில் சோரிஸ் காஷ்மீரி என்ற நிருபருக்கு 1946 ஆம் ஆண்டு அளித்த பேட்டியின் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.

கேள்வி: இந்து முஸ்லிம் பிரச்னை அதிகமாகி விட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாதது என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பதில்: பாகிஸ்தான் பிரித்து கொடுப்பதால் இந்து முஸ்லிம் பிரச்னை ஓய்ந்து விடும் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள இந்துக்களையும் சீக்கியர்களையும் முஸ்லிம்கள் தாக்கும் அபாயம் உண்டு. அதே போல் இங்குள்ள முஸ்லிம்கள் இந்துக்களால் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இது காலத்துக்கும் தீராத பிரச்னையை உண்டு பண்ணும். அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானில் தளம் அமைத்து இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் அபாயமும் உள்ளது.

பெரும் செல்வந்தர்கள் வணிக நிறுவனங்களை பங்கு கோட்டு கொள்வர். ஏழைகள் மேலும் ஏழைகளாவர். இது பிரச்னைகள மேலும் அதிகமாக்கும்..

கேள்வி: ஆனால் பல உலமாக்கள் மற்றும் முகமது அலி ஜின்னா போன்றவர்கள் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரிக்கிறார்களே! தனி நாடாக பிரிந்தால் ஒரு குடையின் கீழ் வர சாத்தியம் உண்டல்லவா?

பதில்: பாகிஸ்தான் பிரிவினையால் ஏதேனும் நன்மை நடக்கும் என்பது தெளிவானால் அதற்கு முதல் ஆதரவுக் குரல் நானே கொடுப்பேன். இதனால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. உலமாக்கள் என்று சொல்கிறீர்கள். அக்பருடைய அவையில் இருந்து தனி மதம் கண்ட பல முஸ்லிம்களையும் உலமாக்கள் என்றே கூறுகிறோம். உலமாக்கள் சொல்வதெல்லாம் மார்க்கமாகாது. இஸ்லாத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள குர்ஆனையும் நபி மொழிகளையும் பார்க்க வேண்டும்.

1000 ஆண்டு காலம் இந்த பரந்த பாரத நாட்டை ஆண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்துக்காக என்ன செய்து விட்டார்கள்? பெயரளவுக்குத்தான் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். உலமாக்கள் சபைகளை எல்லாம் இந்த அரசர்கள் தடை செய்ததை வரலாறுகளில் பார்க்கிறோம்.

நமது தூதர் நபியவர்கள் 'இந்த உலகம் முழுவதிலும் எனக்கு தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது' என்று கூறியதை நாம் மறந்து விடக் கூடாது. ஒரு முஸ்லிமுக்கு உலகம் முழுவதுமே புண்ணியமான இடங்கள்தான். அனைத்து நாடுகளையும் படைத்தது ஒரு இறைவனே. எனவே இருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதில் நாம் முன்னேறவே யோசிக்க வேண்டும்.

இவ்வாறு பலதரப்பட்ட மக்களும் கலந்து வாழும் ஒரு நாட்டை துண்டாடி தனியாக ஒரு தேசம் உண்டாக்க இஸ்லாம் வழி காட்டவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களை விட சிறுபான்மையாக உள்ள மாநிலங்களில் தங்களின் இஸ்லாமிய நடவடிக்கையை பேணுவதில் அதிக அக்கறை காட்டுவதை பார்க்கிறோம். பிற்காலத்தில் பாகிஸ்தானில் இஸ்லாம் அதன் உண்மை முகத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது. இறைவனே இதனை நன்கு அறிந்தவன்.

கேள்வி: ஆனால் இந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறுபட்ட கலாசாரத்துக்கு சொந்தக்காரர்கள். அனைத்திலும் வேறுபடுகிறார்கள். இந்த இருவருக்குள் ஒற்றுமை எவ்வாறு சாத்தியம் என்று எதிர் பார்க்கிறீர்கள்?

பதில்: இது பற்றி நான் அல்லாமா இக்பாலுடனும், மௌலானா ஹூசைன் அஹமத் மதனியுடனும் நிறைய விவாதித்துள்ளேன். நீங்கள் குர்ஆனை முழுவதும் படித்துப் பாருங்கள். அதில் சில வசனங்கள் மட்டுமே முஸ்லிம்களை நோக்கி சொல்லப்பட்டிருக்கும். அதிகமான அறிவுரைகள் 'மனிதர்களே' என்று உலக மக்களைப் பார்த்துதான் குர்ஆன் பேசும். முஸ்லிம் அல்லாத மக்களோடு நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதலும் குர்ஆனில் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுவே குர்ஆன் கூறும் வழிமுறை.

இந்த அகண்ட பாரதத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் கலந்து ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றனர். அவரவர் நம்பிக்கையை மதித்து சந்தோஷமாக வாழ்தல் என்பது மிக எளிதானதே. முன்பு நாம் இவ்வாறு வாழ்ந்திருக்கிறோம்.

சுதந்திரம் என்பது அந்நிய நாட்டின் ஆதிக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கிறோம்.. அதற்காக மதத்தின் அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கி சுதந்திரம் அடைவது என்பது பிரச்னையை மேலும் அதிகமாக்கவே செய்யும். இதை நான் நன்றாக உணர்ந்ததாலேயே இந்த அளவு உங்களிடம் பேசுகிறேன்.

முஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் குறுகிய வட்டத்திலிருந்து வெளி வர வேண்டும். அவர்கள் உலக மக்களுக்கு நற் செய்தியை கொண்டு செல்லும் முக்கிய பணியை இறைவன் கொடுத்துள்ளான். அதை விடுத்து சாதி, இனம், மொழி என்ற பெயரில் பிரிந்து கொள்வதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. சிலர் முஸ்லிம்களுக்குள் ஒற்றுமையை உண்டு பண்ண இந்துக்களை எதிரிகளாக்க முற்படுகின்றனர். அப்படி ஒரு ஒற்றுமை வந்தால் அது வெளி உலகுக்கான போலி ஒற்றுமையாகத்தான் இருக்கும். இஸ்லாம் கூறும் உளப்பூர்வமான ஒற்றுமையை உங்களால் கொண்டு வர முடியாது. அதற்கு முஸ்லிம்கள் குர்ஆனையும் முகமது நபியின் வாழ்வு முறையையும் தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வாகவும் இருக்க முடியும்.

வஹ்ஹாபி என்றும், சூஃபி என்றும், சுன்னத் ஜமாத் என்றும் ஷியா என்றும் முஸ்லிம்கள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றனர். ஆமீன் என்று சப்தமிடுவதும், கைகளை உயர்த்துவதும் கூட பல இடங்களில் பிரச்னையாக்கப்படுகிறது. சில மொளலவிகள் தங்களுக்கு தோதான ஃபத்வாக்களை கொடுத்து மக்களை அறியாமையில் இன்றும் வைத்துள்ளனர். இதற்கெல்லாம் அழகிய தீர்வை நமது தூதர் நமக்கு காட்டித் தந்திருக்க அதன் பக்கம் ஏனோ நாம் கவனம் செலுத்துவதில்லை.

எனவே முஸ்லிம்கள் சகோதர பாசத்தோடு ஒன்றினைந்து இந்தியா சுதந்திரம் அடைய அனைத்து மக்களோடும் தோளோடு தோள் கொடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்....

THE MAN WHO KNEW THE FUTURE
by Shorish Kashmiri, Matbooat chattan, Lahore.

மிக நீண்ட பேட்டி. நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது மொழி பெயர்ப்பு செய்து படிப்போம். இவர் எதை எல்லாம் எதிர்பார்த்தாரோ அவை எல்லாம் ஒவ்வொன்றாக நடந்து வந்துள்ளதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம்..

1 comment:

C.Sugumar said...


திரு.அபுல்கலாம் ஆசாத் அவர்களின் புத்தகங்கள் படித்துள்ளேன்.பிாிவினையை அவர் ஒரு

போதும் ஏற்கவில்லை என்பது நன்றாகத் தொியும்.

எல்லா முஸ்லீம்களும் பாக்கிஸ்தான் பிாிவினையை ஏற்கவில்லை என்பதற்கு நாடுஅறிந்த

பெரும் தலைவா் ஒருவா் சாட்சி .

இவரது கருத்துக்களை வாழ்க்கை வரலாற்றில் நல்ல சமபவங்களை தொடா்ந்து

எழுதலாம்.நன்மை உண்டு.