Followers

Tuesday, March 20, 2018

தவ்ஹீத் ஜமாஅத்தின் முதல் கட்ட நிவாரண உதவிகள்


கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் முதல் கட்ட நிவாரண உதவிகள்

கண்டி மாவட்டத்தில் இன வாதிகளின் வன்செயலால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவி செய்வதற்காக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் உதவிகளை வேண்டியிருந்தது.

அந்த வகையில் பலரும் உள்நாடு , வெளிநாடு என்ற வித்தியாசமின்றி பாதிப்புக்குள்ளான கண்டி மாவட்ட இஸ்லாமிய உறவுகளுக்காக தம்முடைய பொருளாதார உதவிகளை செய்தவண்ணம் உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

கலவரத்தில் உயிரை இழந்த சகோதரர் அப்துல் பாஸிதின் குடும்பத்தினருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 400,000 ரூபாவும், முழுமையாக சேதமடைந்த கடை உரிமையாளர்களுக்கு தலா 150,000 ரூபாவும், மக்களை பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த விஷேட அதிரடிப்படையினரால் (STF) அநியாயமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபா என்ற அடிப்படையிலும் மேலும் இனவாத தாக்குதலால் பல்வேறு வகையில் சிறிய அளவு காயப்படுத்தப்பட்ட அன்பர்களுக்கு ஒருவருக்கு 15,000 ரூபா என்ற அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பிரச்சினையில் சிக்கி வருமானத்திற்கு வழியின்றி தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தலா 10,000 ரூபா என்ற அடிப்படையிலும் ஆரம்ப கட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கண்டி மாவட்டத்திலுள்ள திகன, பல்லேகல, கெங்கல்ல மற்றும் ஹிஜ்ராபுர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்கு இன்றைய தினம் (19-03-2018) மொத்தமாக 4,400,000 நாற்பத்தி நான்கு இலட்சம் ரூபாக்கள் பணமாக வழங்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்டமாக கலவரத்தினால் பாதிப்புக்குள்ளான வீடுகள் மற்றும் குறைவான அளவில் சேதமாக்கப்பட்ட கடைகள் என்பவற்றுக்கும் குறித்த பகுதியல்லாத இனவாதிகளின் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்ட கண்டி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளான அம்பதன்ன, கடுகஸ்தொட, அக்குரனை மற்றும் குருந்துகொல்ல ஆகிய பகுதி மக்களுக்கும் விரைவில் நிதி உதவி வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருளாதார உதவிகள் முழுமையாக வழங்கப்பட்ட பின்னர் இது தொடர்பான கணக்கு வழக்குகளின் முழு விபரம் இன்ஷா அல்லாஹ் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.




No comments: