40 வருடங்களுக்கு முன்பு
ஒரு நாள்......
40 வருடங்களுக்கு முன்பு
ஒரு நாள் நான் எனது தந்தை தாய் தம்பி தங்கை சகிதமாக குற்றாலம் சுற்றுலா போனோம். அருமையான
சுற்றுலா தளம். அனைத்து அருவிகளிலும் குளித்த அந்த நாளை மறக்க முடியாது. பல மூலிகைகளை
அருவி தண்ணீர் சுமந்து வருவதால் பல நோய்களுக்கு நிவாரணி என்றும் சொல்வார்கள்.
ஒருநாள் இரவு எட்டு
மணி வாக்கில் குடும்பத்தோடு கடைத் தெருவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தோம். சிற்றருவிக்கு
அருகில் வழக்கத்திற்கு மாறாக ரோடு முழுக்க போலீஸார் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர்.
அதில் ஒரு காவலர் எனது தந்தையிடம் 'பாய்.... முதல்வர்
கலைஞர் குடும்பத்தோடு குளிக்க இப்போதுதான் சென்றுள்ளார். அருகிலேயே பார்க்கலாம். செல்லுங்கள்'
என்றார்.
எனது தந்தையோ தீவிர
கலைஞரின் ரசிகர். சொல்லவா வேண்டும். உடனே சிற்றருவி நோக்கி மலை மேல் நடக்கத் தொடங்கினோம்.
ஒரு சில காவலர்கள் வந்து எங்களை சோதித்து விட்டு உள்ளே அனுப்பினர். அங்கு கலைஞர்,
அவரது மனைவி, மு.க முத்து, அவரது மனைவி, என்று அவரது குடும்பம்
அப்போதுதான் குளித்து விட்டு கூட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தது. பாதுகாப்பு காவலர்களை
தவிர வேறு யாரும் அங்கு இல்லை. மிக அருகில் சென்று கலைஞருக்கு வணக்கம் சொன்னார் எனது
தந்தை.. 'எந்த ஊர்' என்று கலைஞர் கேட்டார். எனது தந்தை பதில் சொன்னவுடன்
10 வயது சிறுவனான என்னை அழைத்து
முதுகில் தட்டிக் கொடுத்தார். எவ்வளவு பெரிய ஆளுக்கு பக்கத்தில் நிற்கிறோம் என்ற எந்த
உணர்வும் அந்த சிறு வயதில் எனக்கு வரவில்லை. தற்போது கலைஞரின் 95 ஆவது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் இந்த நேரத்தில்
எனக்கு அந்த நிகழ்வு ஞாபகம் வந்தது.
அந்த காலத்திலிருந்து
திமுகவின் பெரும் பலமே இஸ்லாமியரின் ஓட்டுக்கள் என்றால் மிகையாகாது. மீலாது விழாவில்
கலந்து கொண்டும், நோன்பு கஞ்சி குடித்துக்
கொண்டும், இந்து மதத்தை விமரிசித்துக்
கொண்டும் சுளையாக இஸ்லாமியரின் ஓட்டுக்களை அள்ளிக் கொண்டிருந்தார் கலைஞர். ஒரு முறை
லத்தீஃப் சாஹிப் சட்டமன்றத்தில் இஸ்லாமியருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்ட
போது 'தமிழகத்தில் கலவரம் உண்டு
பண்ண பார்க்கிறீர்களா?' என்று கேட்டவர்தான்
கலைஞர்.
எம்ஜிஆரும் முஸ்லிம்களின்
ஓட்டுக்களை பெறுவதற்கு எவ்வளவோ முயன்றும் அதில் தோல்வியையே கண்டார். இதனால் வெறுப்புற்றுத்தான்
'முஸ்லிம்களுக்கு முஸ்லிம்
லீக் இருக்கும் போது இந்துக்களுக்கு இந்து முண்ணனி இருப்பதில் என்ன தவறு' என்று கேட்டு இந்துத்வாவுக்கு வழி அமைத்துக் கொடுத்தார்.
அதன் பிறகுதான் தமுமுக
உருவாகிறது. ஜெயலலிதாவை மெரினாவுக்கு அழைத்து வந்து மிகப் பெரிய கூட்டத்தை கூட்டியது
கலைஞரையே திகைக்க வைத்தது. இட ஒதுக்கீடு கொடுப்பவர்களுக்கே இனி இஸ்லாமியரின் ஓட்டு
என்ற முழக்கம் ஓரளவு வெற்றியை தந்தது. கலைஞர் முஸ்லிம்களின் ஓட்டுக்களை மட்டும் வாங்கிக்
கொண்டு எந்த பிரச்னைகளையும் தீர்த்து வைக்காததை மூலை முடுக்கெல்லாம் ஏகத்துவ வாதிகளோடு
பயணித்த தமுமுக தமிழகமெங்கும் கொண்டு சென்றது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் முஸ்லிம்களின்
ஓட்டு கணிசமாக அதிமுகவுக்கும் சென்றது.
கலைஞரின் சாணக்கிய
மூளை அதன் பிறகுதான் வேலை செய்ய ஆரம்பித்தது. ஹைதர் அலி, ஜவாஹிருல்லா போன்றோரின் உதவியுடன் தமுமுகவை உடைக்க முயற்சித்தார்.
அதற்கு பல திமுக அனுதாபிகள் ஆதரவளிக்க 'தவ்ஹீத்வாதிகளை தூரமாக்குவோம்' என்ற கோஷம் தமுமுகவில்
தலை தூக்கியது. தவ்ஹீத்வாதிகளால் வளர்ந்த தமுமுக சில அரசியல் ஆசை கொண்டவர்களால் இரண்டாக
உடைந்தது. கலைஞரின் சாணக்கியத்தால் உடைக்கப்பட்டது.
அதன் பிறகு தவ்ஹீத்
ஜமாத் உருவாக்கப்பட்டது. கோவை கலவரத்திலிருந்து இன்று வரை கலைஞர் எப்படி எல்லாம் இஸ்லாமியருக்கு
எதிராக நடந்து கொண்டார் என்ற பட்டியல் ஏகத்துவவாதிகளால் இஸ்லாமியருக்கு புரிய வைக்கப்பட்டது.
இனியும் தாமதித்தால் இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்த ஆதரவை இழக்க நேரிடும் என்பதால் இட
ஒதுக்கீட்டுக்கான வேலைகளை கலைஞர் கையில் எடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஜெயலலிதாவும்
இட ஒதுக்கீட்டுக்கான ஆணையை பிறப்பித்தார். இவ்வாறாக பல போராட்டங்களை கடந்து இட ஒதுக்கீடு
இஸ்லாமியருக்கு கிடைத்தது.
தமிழக அரசியலில் கலைஞரின்
பங்கானது குறைத்து மதிப்பிட முடியாது. ஹிந்தி மொழி இங்கு காலூன்றாததற்கும்,
இந்துத்வாவின் வளர்ச்சி மட்டுப் படுத்தப் பட்டதற்கும்,
ஆதி திராவிடர்கள் பல உயரிய பதவிகளை பெறுவதற்கும்
பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் செய்த பணிகளை குறைவாக மதிப்பிட்டு விட முடியாது.
95 வயதை கடந்தும் இன்றும்
ஒரு ஆளுமையாக அமர்ந்திருக்கும் கலைஞரை வாழ்த்துகிறேன்.
1 comment:
How can u wish a atheist, who tells there is no God. He is all ready reserved for hell.
Post a Comment