Followers

Monday, June 25, 2018

சிறுவாணி நீர் பன்னாட்டு கம்பெனிக்கு தாரை வார்ப்பு!

உலகிலேயே சுவையான சிறுவாணி நீரை அள்ளி குடித்து வளர்ந்த மக்களே தற்போது நம்முடைய குடிதண்ணீரை பிரஞ்சு நாட்டு சுயஸ் என்னும் பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதை அறிவீர்களோ! ஆம், கோயம்புத்தூர் மக்களுக்கு குடிநீர் வழங்கி பராமரிக்கும் (O&M) உரிமத்தை கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 3,150 கோடிக்கு (400 மில்லியன் யூரோ) பிரஞ்சு நாட்டின் சுயஸ் நிறுவனத்திற்கு அரசு வழங்கிவிட்டது. இந்தியாவில் மிகப்பெரிய உரிமத்தை பெற்றுவிட்டோம் என அந்நிறுவனம் தனது வலைதளத்தில் மார்தட்டி சொல்லி இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
ஆதாரம் இதோ : SUEZ-wins-a-contract-worth-near-400-million-euros-to-improve-the-water-distribution-service-in-Coimbatore
அரசோ வேறு ஒரு கணக்கை வெளியிட்டுள்ளது, அதில் 21 ஆண்டுகள் இயக்குதல் மற்றும் பராமரிப்புக்கு 2,325 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்ததாக சொல்கிறது. 5 ஆண்டுகள் நடைபெறும் கட்டுமானதிற்கு 646 கோடி ரூபாய் எனவும் தனியாக சூயஸ் பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு பணி ஆணை கொடுத்துள்ளது. மொத்தம், 2961 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இந்தியாவிலேயே டெல்லி மாளவியா நகருக்கு பிறகு இரண்டாவது கோயம்புத்தூரை கண்டுபிடித்து வந்துள்ளது இந்நிறுவனம். இனி இந்த தனியார் நிறுவனம் கொடுக்கும் குடிநீரைத்தான் இனி கோயம்புத்தூர் மக்கள் குடித்தாக வேண்டும். அது மட்டுமல்ல கோவை மக்கள் தண்ணீர் நுகர்வு வரி இனி சூயஸ் நிறுவனத்தின் காப்போலை (ESCREW) கணக்கிற்கு சென்றுவிடும்.
இது கோயம்புத்தூரோடு நின்றுவிடப்போவதில்லை இனி அனைத்து பெரு நகரங்களிலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தண்ணீர் தொழிலை தடையின்றி செய்வார்கள். அதற்கான முன் தயாரிப்பு வேலையை இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (CII) பல ஆண்டுகளாக செய்துவருகிறது. கோவையில் உள்ள சிறுதுளி, ராக் போன்ற முதலாளி வர்க்க அமைப்புகளின் மூலம் குடிநீரை தனியார்தான் வினியோகிக்கவேண்டும் என பரப்புரையை கோவையில் கடந்த 5 ஆண்டுகளாக செய்துவருகிறது.  அதற்காக செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாடு கூட உருவாக்குவார்கள் என்ற அய்யம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

மக்களாட்சியில் பின்வாசல்
சுத்தமான, சுகாதாரமான, குடிநீர் வீணாகாமல் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக வழங்கவேண்டிய பொறுப்பு அரசுடையது என்பதை மனதில் கொள்வோம். சூயஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு குடிநீர் வழங்கும் மற்றும் பராமரிக்கும் உரிமத்தை (O&M Contract) கொடுக்கப்போகிறோம் என்றோ, கொடுத்தாகிவிட்டது என்றோ செய்திகள் இதுவரை மக்கள் விரும்பி பார்க்கும் ஊடகங்களில் எதுவுமே வரவில்லை. இச்செய்தி திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
கோவையில் தனியார் நிறுவனத்திற்கு குடிநீர் வினியோகம் கொடுக்கப்போவதைப் பற்றி நாடாளுமன்றத்திலோ, சட்டசபையிலோ, கோவை மாநகராட்சி கூட்டத்திலோ விவாதம் நடந்ததாக எந்த செய்தியும் இல்லை. குடிநீர் வினியோகம் தனியார் மயமாவது குறித்த மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் எதுவுமே கோவையில் நடைபெறவில்லை. இன்றைய தேதியில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறாத நிலையில் பின்வாசல் வழியே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது எப்படி? இதற்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் திரு. வேலுமணிதான் பதில் சொல்ல வேண்டும்.

மக்களிடம் எழும் சில நியாயமான கேள்விகள்
1. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நம் வரிப்பணத்தில் கட்டிய அணைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீரேற்று நிலையங்கள், குடிநீர் குழாய்கள், மேல்நிலைத் தொட்டிகள், வால்வுகள், வீட்டு இணைப்புகள், நீர் அளவு மானிகள், என அனைத்துமே சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது இந்த அரசு. இதற்கான முடிவை யார் எடுத்தார்கள்?
2. குடிநீருக்கான கட்டணத்தையும் சூயஸ் நிர்ணயம் செய்யுமா அல்லது மாநகராட்சி மாமன்றம் முடிவு செய்யுமா?
3. 1,50,000 குடிநீர் இணைப்புகளுக்கு அடுத்த 26 ஆண்டுகள் தாங்கள் சேவை செய்யப்போவதாக சூயஸ் இணையதளத்தில் உள்ளது. நம் மாநகராட்சியில் 2,70,000 இணைப்புகள் உள்ளன. மீதம் உள்ளவர்களுக்கு யார் தண்ணீர் கொடுப்பார்கள்? மீதமுள்ளவர்களிடம் வசுல் செய்யும் கட்டனத்தை அரசிடம் செலுத்துமா சூயஸ் நிறுவனம்?
4. சூயஸ் நிறுவனத்திற்கு அரசு 21 ஆண்டுகள் பராமரிக்க செலுத்தும் தொகை 2325 கோடி ரூபாய். நம் அரசின் மூலம் சூயஸ் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் வீட்டு இணைப்புகள் செலுத்த வேண்டியிருக்கும் தொகை 615 ரூபாய். (ரூ 2325,00,00,000 / 1,50,000 இனைப்புகள் / 21 ஆண்டுகள் / 12 மாதங்கள் = ரூ 615.08/மாதம்). இதில் சூயஸ் லாபத்தை சேர்க்கவில்லை, தண்ணீரின் அளவையும் சேர்க்கவில்லை. சூயஸின் லாபத்தை சேர்த்தால் மக்களுக்கு குடிநீர் கட்டணம்தான் எவ்வளவு?
5. இந்த திட்டம் செயலுக்கு வரும் முன்பு நமது நீர் அளவு மானிகளை மாற்றிவிடுவார்கள். புதிய நீர் அளவு மானிகளுக்கு யார் பணம் செலுத்தப்போகிறார்கள்?
6. குடிநீர் வாங்க வீட்டு பட்ஜட்டில் ஒரு தொகையை ஒதுக்கிவைக்கவேண்டும். மாதா மாதம் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள மக்களின் பாடு மிகவும் மோசமாக இருக்கும். அதுவும் வரட்சி காலங்களில் அனைகளில் தண்ணீர் இல்லாத போது அனைத்துத்தர மக்களுக்கும் சரி சமமாக குடிநீர் கிடைக்க உறுதி செய்வார்களா?
7. நிலத்தடியில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த கட்டணம் செலுத்தவேண்டுமா?
8. மழை நீரை சேமித்து பயன்படுத்தினால் கட்டணம் செலுத்தவேண்டுமா?
9. கடந்த 90 அண்டுகளாக (1928 முதல்) நமது வரிப்பணத்தில் குறைந்த கட்டணத்தில் ஏழை, பணக்காரர், சிறு தொழில், பெரிய தொழில், என பாராமல் அனைவருக்கும் தண்ணீர் வினியோக கட்டுமானங்களை நமது மாநகராட்சியின் சார்ப்பில் ஏற்படுத்தியுள்ளோம், மேலும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதை அரசே ஏற்றுச்செய்யாமல் நீண்ட கால ஒப்பந்தம் மூலம் தனியார் வசம் ஒப்படைக்கவேண்டிய காரணங்கள் என்ன?
10. தினமும் 30 நிமிடங்கள் குழாய் முழுவதும் சீராக தண்ணிர் வந்தால் சராசரியாக 4பேர் இருக்கும் குடும்பத்திற்கு தேவையான அளவு குடிநீர் கிடத்துவிடுகிறது. எதற்கு 24 மணி நேரமும் (24×7) தண்ணீர் வரவேண்டும்?
மக்களாகிய நம்மிடம் கருத்து எதுவும் கேட்காமல், பொது மக்கள் விரும்பாத பொது மக்களுக்குத் தேவையில்லாத, அதிக கட்டணம் வசூலித்த JNNURM சொகுசுப்பேருந்து போலத்தான் இத்திட்டம் நம்மிடையே திணிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உயிர் வாழ அத்தியாவசிய தேவையான குடிநீரை நம் மக்கள் விலை கொடுத்து வாங்கும் வணிகப்பொருளாக (Commodity) இந்த அரசு மாற்றியுள்ளதை நாம் ஏற்கமுடியாது.
கோவை நொய்யல் ஆத்துப்பாலத்தில்தான் தனியார் நெடுஞ்சாலையில் பாலம் கட்டி சுங்கம் வசுலிக்கும் முறை இந்தியாவில் முதல் முதலாக அமுல்படுத்தப்பட்டது. சாலைகள் போடவும், பாலங்கள் கட்டவும் நெடுஞ்சாலைத்துறை இருந்தும் நம்மிடையே ஒரு சிறு பாலத்தை கட்ட தனியாரிடம் ஏன் ஒப்படைத்தார்கள்? அதேபோல தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சியில் உள்ள பொறியியல் துறை எல்லாமே நாம் மக்களின் வரி பணத்தை கொண்டு உருவாக்கியிருப்பது லாப நோக்கில் இயங்கும் தனியார் நிறுவனத்திற்காகவா என்ற கேள்வியும் எழுகிறது.
பின் வாசல் வழியே திணிக்கப்பட்ட இந்த குடிநீர் வழங்கும் மற்றும் பராமரிக்கும் (O&M Contract) ஒப்பந்தத்தை திரும்பப்பெறவேண்டும் என்று கோவை குளங்களைக் காப்போம் கூட்டமைப்பு மக்களிடயே பரப்புரை செய்யும்.
90 வருடங்களாக குடிநீரை கொடுத்து வந்த #கோவை உள்ளாட்சி, வரி செலுத்தும் மக்களை கேட்காமல் தனியாருக்கு தண்ணீர் வினியோகித்து கட்டணம் வசுல் செய்யும் உரிமத்தை கொடுத்திருப்பது மக்களாட்சியில் மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்.
நன்றி : http://www.coimbatorewetlands.org/waterprivatisation/1039




No comments: