Followers

Saturday, June 09, 2018

லைலத்துல் கத்ர் இரவு - ஏற்பட்டுள்ள மாற்றங்கள்


லைலத்துல் கத்ர் இரவு - ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

நான் சிறுவனாக இருக்கும் போது நோன்பு 27 ஆம் கிழமை அன்று எங்கள் ஊர் பள்ளிவாசல் மினாராக்கள் சீரியல் லைட்டுகளால் அலங்கரிக்கப்படும். தெரு முழுக்க மூங்கில் ஊன்றி ட்யூப் லைட்டுகளை கட்டுவார்கள். கொத்து புரோட்டா சத்தம் 'கட... கட...கட்.... கட...கட...கட்' என்று தாள லயத்தோடு கேட்டுக் கொண்டிருக்கும்.

கொட்டாங்கச்சியில் (காய்ந்து போன தேங்காய் மூடி) துளையிட்டு ஒரு குச்சியை பிடியாக்கி மெழுகு திரியை அதனுள் ஏற்றி ஊர் முழுக்க நண்பர்களோடு வலம் வருவோம். சிலர் வீடுகளிலும் மாடங்களில் மெழுகு திரிகளை ஏற்றி வைப்பார்கள்.  இந்துக்கள் கார்த்திசை தீபம் ஏற்றுவார்களே அது போல் இருக்கும்.

அடுத்து மூங்கில் குச்சிகளை வளைத்து பெரிய கப்பல்கள் விமானங்கள் செய்து சைக்கிளில் அதனை கட்டி ஊர்வலமாக தெருக்களில் வருவார்கள். சிறுவர்கள் நாங்கள் எல்லாம் அவர்கள் பின்னால் அணி வகுத்து செல்வோம். இந்துக்கள் தேர் இழுப்பதை போல...

அடுத்து இந்து மதத்தில் பஜனை என்று ஐயர் பாட அதனை பின்பற்றி ஓதுவார்கள் கோரஸாக பாடுவார்கள். அது போல் பள்ளியின் இமாம் சில வார்த்தைகளை சொல்வார் அதனை நாங்களும் அடி பிறழாமல் சொல்வோம்.

'ஹக் து ஹக்'

'இல்லல்லாஹ்'

'ஹூ... ஹூ'

என்று பல மாடல்களில் இமாம் கூற பொருள் தெரியாது நாங்களும் பய பக்தியோடு கூறி வருவோம். இடையிடையே தூக்கம் வேறு வரும். அந்த தூக்கத்தை போக்க கொட்றாக்களில் (சிறிய மண் சட்டி) யில் சுக்கு காபி வரும். அதனை உறிஞ்சிக் கொண்டே இமாமுக்கு பின் பாட்டு பாடிக் கொண்டிருப்போம். இறைவனின் பெயர்களை இவ்வாறு சிதைக்கலாமா? என்று கேட்கத் தோன்றும். தெய்வக் குற்றமாகி விடுமோ என்று பயந்து ஏதும் கேள்வி கேட்க மாட்டோம்.

இந்து மதத்தில் பஜனை முடிந்து பிரசாதம் தருவார்கள். அதனை பயபக்தியோடு இந்துக்கள் ஐயரிடமிருந்து வாங்கிச் செல்வார்கள். அதுபோல் எல்லா அமல்களும் முடிந்தவுடன் ஃபாத்திஹா ஓதப்படும். ஓதி முடித்தவுடன் நெய் சோறு, பிரியாணி, சேமியா பிரியாணி என்று அந்த அந்த பள்ளி வாசல்களின் வசதிக்கேற்ப தரப்படும். அதனை பயபக்தியோடு வாங்கி வீட்டுக்கு செல்வோம். வீட்டில் உள்ள பெண்களும் பயபக்தியோடு சிறிது சிறிதாக எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். இதில் பரக்கத் உள்ளது என்று சொல்லிக் கொள்வார்கள்.

அடுத்து 27ம் கிழமைக்கு புது சட்டையும் கைலியும், பெண்களுக்கு புதிய துணிகளும் எடுப்போம். பெருநாளுக்கு ஒரு செட்: 27 ஆம் கிழமைக்கு ஒரு செட் என்று அனைவருக்கும் இரண்டு செட் எடுக்கப்படும். இதெல்லாம் தற்போது மாறி வருகிறது.

லைலத்துல் கத்ர் இரவு என்பது 27ஆம் கிழமை மட்டும் அல்ல 20 லிருந்து கடைசி நோன்பு வரை ஏதோ ஓர் இரவு என்று தவ்ஹீத் ஜமாத் பையன் சொல்ல இதை நான் ஊர் ஆலிமிடம் கேட்டேன். அவரோ அந்தபையன் சொல்வது சரிதான். இதை நான் மக்களிடம் சொன்னால் எனது வேலை போய் விடும் பாய் என்று பரிதாபமாக சொல்கிறார். தற்போது மெல்ல மெல்ல இரவு தொழுமை கியாமுல் லைல் இரவு இரண்டு மணிக்கு தொழுகிறார்கள். முன்பெல்லாம் கிடையாது. சைக்கிளில் பலூனை கட்டிக் கொண்டு ஓடிய இளைஞர்கள் எல்லாம் இன்று இரவுத் தொழுகை தொழுது கொண்டு இறைவனிடம் கையேந்தும் கண்கொள்ளாக் காட்சியை எங்கும் பார்க்க முடிகிறது. நஜாத் காரன் வந்து பல மாற்றங்களை ஊரில் கொண்டு வந்து விட்டான். ஏதோ நல்லது நடந்தால் சரி.

https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/954518551395753



No comments: