எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தால், எனது குரல் இன்னும் வலிமையாக மாறும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முற்போக்கு எழுத்தாளர் கவுரி லங்கேஷ் மூடபழக்கங்களுக்கும், இந்துத்துவா வலதுசாரிகளுக்கும் எதிராக எழுதி வந்தார். இதனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்மநபர்களால் அவரின் வீட்டு முன் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்கு பின், நடிகர் பிரகாஷ் ராஜ் இந்துத்துவா அமைப்புகளுக்கும் எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சிறுபான்மையினர் தாக்கப்படும்போதும், உரிமைகள் பறிக்கப்படும் போதும் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளைக் கேட்டார். கர்நாடகத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இந்நிலையில், சமீபத்தில் கவுரி லங்கேஷ் கொலையில் சந்தேகிக்கப்படும் 6 பேரை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அடுத்தடுத்து யாரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்கிற விவரம் தெரியவந்தது. அதில் நடிகர் கிரிஷ் கர்நாட், நடிகர் பிரகாஷ் ராஜ், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.
இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பெங்களூருவில் முற்போக்கு சிந்தனையாளர்,பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை திட்டமிட்டு கொலை செய்தவர்கள், நடிகர் பிரகாஷ் ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்களாம் சிறப்பு புலனாய்வு பிரிவு கூறுகிறது. என்னுடைய குரலை ஒடுக்கும் வகையிலான மிரட்டல். ஆனால், இப்படி மிரட்டல்கள் வரும்போது, என் குரல் மேலும் வலிமைபெறும். கோழைகளே, நீங்கள் இந்த வெறுப்பு அரசியலில் இருந்து எப்போது வெளியேறப்போகிறோம் என நினைத்துப்பார்க்கிறீர்களா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tamil hindu daily
27-06-2018
No comments:
Post a Comment