BJP ஆட்சியைத் திணறடிக்கும் பெண்கள்
================
================
ஷகீன் பாக் என்ற இடம் தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஓர் பகுதி. யமுனை நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, 14 டிசம்பர் 2020 அன்று மாலை பத்து/ பதினைந்து பெண்கள் இப்போராட்டத்தைத் துவக்கினர். 11 டிசம்பர் அன்றுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
10 / 15 பெண்கள் பங்கேற்க சிறிய அளவில் துவங்கிய போராட்டம், அதன் பின் சூடுபிடித்தது. மேலும், மேலும் கூடுதல் பெண்கள் போராட்டத்தில் அமர ஆரம்பித்தனர். இரவு பகல் என்று முழு நாளும் போராட்டம் நீடித்தது. இன்றுவரை நீடித்துக்கொண்டிருக்கிறது. அனேகமாக சுதந்திர இந்தியாவில் வெகு நீண்ட காலம் நீடிக்கின்ற ஒரே போராட்டம் இதுதான்.
புர்காவும், தலையை மறைக்கும் துணியையும் அணிந்த முஸ்லீம் பெண்கள் நிறைந்திருக்கின்றனர். அவர்கள் ஏறக்குறைய அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லாத "இல்லத்தரசிகள்".
ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டத்தின் எண்ணிக்கை பத்து ஆயிரத்தைத் தாண்டிவிடுகிறது. குதூகலத்துடன் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
பாரோ நிஷா என்ற பெண் தொழிலாளி தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு முழுநேர போராட்டக்காரர் ஆகியிருக்கிறார் என்று CNN செய்தி தெரிவிக்கிறது. "அவர்கள் எங்கள் குழந்தைகளின் குரல்வளையை நசுக்குகிறார்கள். எனவே, தாய்களாகிய நாங்கள் எதிர்த்து நிற்கத் துணிந்தோம் " என்று நிஷா சொல்கிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த ஜாமியா மில்லா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. 15, டிசம்பர் 2019 அன்று தெற்கு டெல்லியை ஒட்டிய ஒரு முக்கியமான நெடுஞ்சாலையைப் பெண்கள் மறித்தனர். அவர்கள் வன்முறையில் இறங்கவில்லை. ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும் இருந்தனர். 18 ஜனவரி 2020 என்ற இன்றுவரை அவர்கள் மறியலை விட்டுத் தரவில்லை.
இந்த மறியலின் காரணமாக, 20/25 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தைச் சுற்றுப் பாதையில் கடப்பதற்கு 2 அல்லது 3 மணி நேரம் ஆகிறது. ஏறக்குறைய ஒரு லட்சம் வாகனங்களின் இயக்கம் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மட்டுமல்ல, மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், மாணவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களையும் இந்தப் பெண்கள் எதிர்க்கின்றனர்.
கடந்த சில நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் வந்து கலந்துகொண்டிருக்கின்றனர். போராட்டப் பந்தல் கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் போராட்டத்திற்குத் தலைவர்கள் கிடையாது. தலைவர்கள் இல்லாத போராட்டத்தை ஒடுக்குவது போலீசுக்கு சிரமமானதாக இருக்கிறது. சாலையை மறிக்கும் பெண்களை வன்முறையைப் பயன்படுத்தி விரட்டுவதற்குக் காவல்துறை தயங்குகிறது.
ஜனவரி 17, 2020 அன்று டெல்லியின் துணை ஆளுநர் அனில் பைஜல் காவல்துறைக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுத்து உத்தரவிட்டிருக்கிறார். 19 ஜனவரி 2020 துவங்கி அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த ஒருவரையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய டெல்லி போலீசுக்கு அவர் அதிகாரம் அளித்துள்ளார்.
ஆனால், பெண்கள் அசைவதாக இல்லை. லட்சக்கணக்கான மக்களின் நடமாட்டம் பாதிக்கப்படுகிறது என்று காரணம் சொல்லி கலைப்பதற்கு போலீஸ் அதிகாரிகள் முயல, போக்குவரத்தைச் சீரமைக்க நாங்கள் உதவுகிறோம், ஆனால், போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று பெண்கள் மறுத்துவிட்டனர்.
பெரிய பத்திரிகைகள், ஊடகங்கள் கண்டுகொள்ளாத, இப்போராட்ட பந்தல் ஒரு நூலகமாகவும், பள்ளியாகவும் இயங்குகிறது. சிறார்கள் இங்கே படிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ பற்றி விவாதிக்கிறார்கள். இந்தியக் கொடியை வரைகிறார்கள். யோசித்துத்தான் இந்தப் போராட்டத்திற்கு வந்திருக்கிறேன் என்று பேசுகிறார்கள். ஒரு புதிய போராட்ட கலாச்சாரத்தை ஷகீன் பாக் முன்னிறுத்துகிறது.
திணறிக் கொண்டிருக்கும் மோடி- ஷா அரசு என்ன செய்யும்? போராட்டத்தை ஒடுக்க வன்முறையில் இறங்குமா? அப்படியானால், அது ஜாலியன்வாலாபாக் போன்ற ஒன்றாக மாற வாய்ப்பிருக்கிறது.
சர்வாதிகாரிகளின் ராட்சத பலத்தைப் பெண்கள் தங்கள் உறுதியினால் தடுமாற வைக்கிறார்கள்.
எப்படி ஆனாலும், எது நடந்தாலும், புதுவிதமான சத்தியாகிரக மக்கள் போராட்டத்தின் முன் மாதிரியாக, புதிய பாதையாக ஷகீன் பாக் நீடிக்கும்.
Mathi Vanan
No comments:
Post a Comment