ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா!
24-01-2020 வெள்ளிக் கிழமை அன்று ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழாவுக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன். நண்பர்கள் இல்யாஸ், சாட் கார்கோ சையது பாய், அமீர் பாய், சிராஜ் சகிதம் அரங்குக்கு சென்றோம். சென்ற நேரம் மஹ்ரிப் தொழுகை. அருகில் இருந்த ஒரு இஸ்த்ராஹாவில் தொழுகையை முடித்து விட்டு அரங்கில் சென்று அமர்ந்தோம்.
எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம். அரங்கு நிரம்பி வழிந்தது. பிறகு வெளியிலிருந்து நாற்காலிகளை கொண்டு வந்து நின்று கொண்டிருந்தவர்களை சமாளித்தனர் ஏற்பாட்டாளர்கள். வழியில் நின்று கொண்டு நிகழ்ச்சிக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்தவர்களை இம்தியாஸ் பாய் சரி செய்து ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். பட்டி மன்ற பேச்சாளர் மோகன சுந்தரமும் அரங்குக்கு வந்தார்.
குர்ஆன் ஓதுதலோடு நிகழ்ச்சி ஆரம்பமானது.
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் தெரிந்தவன். - குர்ஆன் 49:13.
பல மதங்களும் சங்கமித்த அந்த நிகழ்வில் பொருத்தமான வசனத்தை தேர்வு செய்திருந்தனர். அதற்கடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கியது. அதன் பிறகு அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு பரிசுகளும் பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன.
அடுத்து தழிழ்க் குழந்தைகள் இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்வித்தனர். அதன் பிறகு பட்டி மன்றம் தொடங்கியது. சரவண பவன் தங்கள் ஸ்டாலை அரங்கில் அமைத்திருந்தனர். விலை சற்றே கூடுதலானாலும் தரமாக இருந்தது. கால நிலை கடும் குளிர். எனவே நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே கிளம்பி விட்டோம். பத்ஹா வந்து ஆர்டியில் இரவு உணவு முடித்து விட்டு இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.
No comments:
Post a Comment