Followers

Tuesday, January 14, 2020

இன வெறி - சிறுகதை

'அம்மா பஸ் வந்துடுச்சு! நான் காலேஜூக்கு போயிட்டு வர்ரேன்'




'நல்லபடியா போய்ட்டு வாப்பா'



காலையிலிருந்து மகனை கல்லூரிக்கு அனுப்புவதற்குள் ஜீனத்துக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. சுடு தண்ணீர் வைப்பது. காலை பசியார செய்வது என்று ஏக பிசியாக காலைப் பொழுது சென்று விடும். தனது கணவன் காதருக்கும் சேர்த்து காலை உணவு தயார் பண்ணுவதால் சோர்ந்து விடுகிறார் ஜீனத்.



"வீட்டோடு ஒரு பொண்ணை வேலைக்கு வச்சுக்கோ என்று எத்தனை தடவை சொல்லியிருக்கேன். கேட்க மாட்டேங்கிறீயே"...



மனைவி காலை நேரங்களில் படும் சிரமங்களைப் பார்த்து ஆறுதலாக இந்த வார்த்தைகளை சொன்னார் காதர்.



'"வீட்டு வேலைக்கா..நல்லா இருக்கே...அடுப்படி வேலைகளெல்லாம் நாம தான் பார்க்கணும். இல்லலேண்னா எனக்கு சுத்தப் படாது"


"அப்போ கஷ்டப்படு. எனக்கென்ன' என்று சிரித்துக் கொண்டே தனது அலுவலகத்துக்கு செல்ல இரு சக்கர வாகனத்தை இயக்கினார் காதர்.



காதருக்கு சவுதியிலும், குவைத்திலும், மலேசியாவிலும் அலுவலகங்கள் உள்ளது. அங்கிருந்து நம்மவர்கள் தரும் பொருட்களை உரிய விலாசங்களில் சேர்ப்பிப்பது இவர் நடத்தும் நிறுவனத்தின் முக்கிய வேலைகளில் ஒன்று. ஓரளவு வசதியான வாழ்க்கை. ஒரே மகன் பஷீர் என்று பிரச்னையில்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.



கல்லூரிக்கு சென்ற பஷீர் மாலையில் வகுப்புகள் முடிவுறவே கல்லூரி வாகனத்தை நோக்கி நண்பன் அம்ஜத் தோடு சென்று கொண்டிருந்தான். சிறு வயதிலிருந்தே பஷீரும் அம்ஜத்தும் இணை பிரியாத நண்பர்கள். பள்ளியில் தொடங்கிய நட்பு இன்று கல்லூரி வரை தொடர்கிறது. ஆனால் இருவருக்குமே பல வகையில் ஒத்தே வராது. பஷீர் மென்மையான சுபாவம் உள்ளவன். அம்ஜத்தோ சற்று முரடன். இவனது முரட்டு சுபாவத்தால் பல இடங்களில் பிரச்னைகளும் வந்ததுண்டு. அங்கெல்லாம் பஷீர் சென்று தனது நண்பனுக்காக வாதாடி பிரச்னைகளை தீர்த்து வைப்பான்.



'ஏண்டா..உன் முரட்டு சுபாவத்தை நீ மாத்திக்கவே மாட்டீயா......'



'எனக்கு மட்டும் ஆசையா என்ன? பிறப்போடு வந்த சுபாவத்தை மாத்த முடியுமாடா..'



"சும்மா பொறப்பு, இறப்பு என்று ஏதாவது ரீல் உடாதே... மனிதன் நினைத்தால் தனது சுபாவங்களை மாற்றிக் கொள்ள முடியும. எதிலுமே மனது வைக்க வேண்டும்"


"யப்பா...கருத்து கந்தசாமி. உன்னோட அறுவை வர வர ஜாஸ்தியாகி கிட்டே வருது. கொஞ்சம் நிறுத்தறியா"



'ம்ஊஹூம்...உன்னை திருத்தவே முடியாது'



கல்லூரி வாகனத்தில் அனைவரும் ஏற ஆரம்பித்தனர். பஷீரும் அம்ஜத்தும் அருகருகே அமர்ந்து கொண்டனர்.



முன் சீட்டில் இரண்டு மாணவிகள் அமர்ந்தனர். இது கடைசி பஸ் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. பஸ்ஸூக்கான கட்டணத்தை கறாராகக் கறந்து விடும் கல்லூரி நிர்வாகம் அதற்குள்ள வசதிகளை மட்டும் செய்து தருவதில்லை. இடப் பற்றாக் குறையால் பல மாணவ மாணவிகளும் நின்று கொண்டே வந்தனர். பேரூந்தும் புறப்பட்டது. பஷீரின் வீடும் அம்ஜத்தின் வீடும் வர எப்படியும் ஒரு மணி நேரமாகும்.



முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு மாணவியின் சடை இவர்கள் பக்கம் விழ சிரித்துக் கொண்டே அம்ஜத் அந்த மாணவியின் முடியைத் தொட்டான்.



'டேய்..என்னடா பண்றே'



"பஷீர்...இதை எல்லாம் கண்டுக்காதே...வாழ்க்கை என்றால் ஜாலியா இருக்கணும்டா' என்று சொல்லிக் கொண்டே சீட்டின் இடைவெளியில் கைகளை விட்டான். அந்த மாணவியோ இவனின் சில்மிஷத்தை தெரிந்து கொண்டு நெளிய ஆரம்பித்தாள். ஒரு முறை கோபமாக திரும்பி 'என்ன?' என்று கேட்டாள். பஷீருக்கோ பயத்தில் முகம் முழுவதும் வேர்வைத் துளிகள் அரும்பத் தொடங்கின. அம்ஜத்தோ எதுவும் நடக்காத மாதிரி சிரித்துக் கொண்டிருந்தான்..



இதற்குள் அம்ஜத்தின் சேட்டைகளால் அந்த மாணவி நெளிவதைப் பார்த்து ஒரு மாணவன் அதே கல்லூரியில் பயிலும் அந்த பெண்ணின் அண்ணன் ராஜாவிடம் விபரத்தை சொன்னான். அந்த மாணவன் சொன்னதைக் கேட்டவுடன் ராஜாவுக்கு கோபம் தலைக்கேறியது. பின் சீட்டிலிருந்து முன்னேறி வந்த ராஜா 'டேய் என்னடா என் தங்கச்சிகிட்டே வம்பு பண்றே' என்று கேட்டான்.



'நான் ஒன்னுமே பண்ணலப்பா...'



'கிண்டலா...ஏய் இவன் ஏதும் வம்பு பண்ணினானா'



அந்த மாணவி ஒரு வித பயத்துடன் 'ஆம்' என்று தலையாட்டினாள். அடுத்த நிமிடம் அம்ஜத்தின் சட்டை காலரை பிடித்தான் ராஜா. அவ்வளவுதான். ராஜாவுக்கு ஆதரவாக ஒரு குரூப்பும் அம்ஜத்துக்கு ஆதரவாக ஒரு குரூப்பும் பேரூந்தில் திரண்டது. நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் வண்டியை ஓரமாக்கி நிறுத்தினார். பலரும் அவசர அவசரமாக பஸ்ஸை விட்டு இறங்க ஆரம்பித்தனர். பஷீரும் இறங்கி விட்டான். அதற்குள் இரண்டு கோஷ்டியாக பிரிந்து ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். பஷீரும் மற்றும் சில நண்பர்களும் கைகலப்பை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பலனில்லை.



அம்ஜத் ஏற்கெனவே பலரிடம் தகராறு உள்ளதால் அதை எல்லாம் இதுதான் சமயம் என்று பல மாணவர்கள் பழி தீர்த்துக் கொண்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அம்ஜத் தன்னைக் காத்துக் கொள்ள இருக்கைக்கு கீழே இருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்தான். அம்ஜத்தை பிடிக்க ராஜா முன்னேறவும் கோபம் தாங்காமல் ராஜாவின் வயிற்றில் அந்த இரும்பு கம்பியை சொருகினான். நுனி கூராக இருந்ததால் வயிற்றிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. ரத்தம் வருவதைப் பார்த்த ராஜா பயத்தில் உடன் மூர்ச்சையானான். மயங்கி விழுந்ததை இறந்து விட்டதாக எண்ணி பயந்த அம்ஜத் பேரூந்திலிருந்து இறங்கி ஓட ஆரம்பித்தான். ராஜாவின் நிலையைப் பார்த்த பஷீர் அவனது வயிற்றில் துணியால் ஒரு கட்டு போட்டு 'அண்ணே வண்டியை சீக்கிரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க' என்று கூறினான். ஓட்டுனரும் மிக விரைவாக அருகில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு பேரூந்தை கொண்டு சென்றார். மற்ற மாணவர்களும் பஷீரும் சேர்ந்து ராஜாவை தூக்கிக் கொண்டு அவசர பிரிவை நோக்கி ஓடினர்.



அவசர சிகிச்சைப் பிரிவில் ராஜாவை அனுமதித்து விட்டு பஷீர் ராஜாவின் குடும்பத்துக்கு போன் பண்ணி விபரங்களைச் சொன்னான். அங்கிருந்து அழுது கொண்டே ராஜாவின் குடும்பத்தினர் மருத்துவ மனையை நெருங்கினர்.



'"யார் பையனோட பெற்றோர்?"



'?நாங்க தாங்க டாக்டர். பையன் எப்படி இருக்கான் டாக்டர்'



"ரத்தம் அதிகம் வெளியானதால் சற்று நிலை சீரியஸ்தான். நாங்க முயற்சிக்கிறோம்' என்று சொல்லி விட்டு ராஜாவின் பெற்றோர்களிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டது மருத்துவ நிர்வாகம்.



மற்ற மாணவர்கள் எல்லாம் கல்லூரி வாகனத்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப் பட்டனர். காவல் துறையினரும் மருத்துவ மனைக்கு வந்து வழக்கு பதிவு செய்து கொண்டனர். பஷீரும் நடந்த விபரங்களை எல்லாம் சொன்னான். சில மாணவர்களும் தங்கள் தரப்பு பிரச்னைகளை சொன்னார்கள். அம்ஜத் மேல் கொலை முயற்சி என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய புறப்பட்டனர். பஷீரும் ராஜாவின் பெற்றோரிடம் 'பார்த்துக்கோங்க...நான் வீட்டுக்கு போயிட்டு காலையில வருகிறேன்' என்று கிளம்பினான்.



இரவு மணி பத்து



"கடவுள் கிருபையால உங்க பையன் அபாய கட்டத்தை தாண்டி விட்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து நீங்கள் பையனை பார்க்கலாம்"'



'நன்றி டாக்டர்'



இரவு பதினோரு மணி...



பஷீரின் வீட்டுக் கதவு மெல்லிதாக தட்டப்பட்டது. ஆஸ்பத்திரியிலிருந்து அப்பொழுதுதான் வந்த பஷீர் இந்த நேரத்தில் யார் என்ற யோசனையோடு கதவை திறந்தான். வெளியே வெளிறிய முகத்தோடு அம்ஜத். 'ஏண்டா இப்படி பண்ணினே! இப்போ அவன் ஆபத்தான நிலையிலே கிடக்கிறான்டா"



"தெரியாம நடந்து போச்சுடா...சற்று நேரத்துக்கு முன்னால போலீஸ் என் வீட்டுக்கு வந்தது. அதனால தான் காலையில வக்கீலோட போய்க்கிலாம் என்று உன் வீட்டில் தங்க வந்தேன்"



'ஐயோ அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்னையாயிடும்டா. நீ போலீஸில் சென்று சரணடைந்து விடு'



"இரவு நேரங்கள்ல போனா லாக்கப்புல தள்ளிடுவாங்க பஷீர். சில நேரங்களில் அடிக்கவும் செய்வார்கள். நம்ம போலீஸைப் பற்றி உனக்கு தெரியாதா.. காலையில் 8 மணிக்கு நான் கிளம்பிடுறேன்டா"



"சரி சரி சத்தம் போடாம மாடிக்கு என் ரூமுக்கு போ' அரை மனத்தோடு அவனை வீட்டுக்குள் அனுமதித்து கதவை தாளிட்டான்.



நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டதை காதர் தனது ரூமிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இவனை நமது வீட்டில் தங்க வைத்தால் தனது குடும்பத்துக்கும் பிரச்னை என்பதால் காவல் நிலையத்துக்கு தனது செல் போனிலிருந்து அம்ஜத்தைப் பற்றிய தகவலை கொடுத்தார்.



அரை மணி நேரத்தில் போலீஸ் காதர் வீட்டின் அழைப்பு மணியை அழுததியது. காதர் கதவை திறந்து 'மாடியில் இருக்கான் கொண்டு போங்க' என்றார்.



போலீஸ் மாடிக்கு சென்றது. அப்போதுதான் படுக்கையில் படுத்த அம்ஜத்தை இரண்டு காவலர்கள் மடக்கி பிடித்து கையில் விலங்கிட்டனர். நடப்பது ஒன்றுமே பஷீருக்கும் அம்ஜத்துக்கும் விளங்கவில்லை. அம்ஜத் நமது வீட்டில் உள்ளது போலீஸாருக்கு எப்படி தெரிந்தது? என்ற யோசனையில் ஆழ்ந்தான் பஷீர்.



அம்ஜத்தை ஜீப்பில் ஏற்றிய காவலர்கள் உடன் இடத்தை காலி செய்தனர். அந்த நடுநிசியிலும் வீட்டைச் சுற்றி ஊர் மக்கள் கூடி ஆளாளுக்கு தங்கள் மனத்தில் தோன்றியதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கூட்டம் களைந்து அந்த தெருவே அமைதியானது.



'பஷீர்...போலீஸ் தேடும் ஒரு குற்றவாளியை நாம் மறைத்து வைக்கலாமா'



'தவறுதாம்பா...ஆனால் அவன் காலையில சரண் அடைஞ்சுட்றேன்னு சொன்னானே..'



'அம்ஜத்தோடு சேர வேண்டாம் என்று நான் பலமுறை சொல்லியுள்ளேன்'



'கொஞ்சம் முரடன். ஆனால் அவன் நல்லவம்பா'



"யார் நல்லவன். படிக்கப் போற இடத்துல கூட படிக்கும் மாணவிகளை கலாட்டா பண்ணுபவன்தான் நல்லவனா! அவன் நம் வீட்டில் தங்குவது பிரச்னையாகும் என்பதால் நான்தான் போன் போட்டு போலீஸை வரவழைத்தேன்"'



'இது நம்பிக்கை துரோகம்பா...உதவி என்று கேட்டு வந்தவனை இப்படி பண்ணிட்டீங்களே'



'குற்றவாளிக்கு பரிந்து பேசுகிறாயா'



'அவன் காலையில சரண் அடையிறேன்டு சொன்னானே'



"குற்றத்தை செய்து விட்டு அவன் விருப்பத்துக்கு காவல் நிலையம் செல்வானோ. அதற்கு நாம் உதவி செய்ய வேண்டுமோ"



இவர்களின் காரசரமான வாக்கு வாதத்தை கேட்டுக் கொண்டே தனது கையில் உள்ள நபி மொழித் தொகுப்பு அஹமதோடு வந்தார் ஆமினா.



"இங்கே பார் பஷீர். அப்பா சொல்வதுதான் சரி. அம்ஜத் நமது எல்லோருடைய பார்வையிலும் குற்றவாளி. நமக்கு தெரிந்தவன் நண்பன் என்பதால் நாம் அவனை ஆதரிக்கக் கூடாது. இதை நமது அரசும் அனுமதிக்காது. நமது மார்க்கமும் அனுமதிக்கவில்லை.' என்று சொல்லிக் கொண்டே 'இந்தா இந்த நபி மொழித் தொகுப்பில் இனவெறி என்ற தலைப்பில் உள்ள நபி மொழி மொழியைப் படித்துப் பார்' என்று அவனிடம் அந்த புத்தகத்தைக் கொடுத்தார் ஆமினா.



நபி மொழித் தொகுப்பில் உள்ள அந்த நபி மொழியை படிக்க ஆரம்பித்தான் பஷீர்..



ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் "தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.- நூல்: அஹ்மத்



படித்து முடித்தவுடன் தனது தாயை பார்த்தான். 'நல்ல நேரத்தில் எனக்கு அருமையான செய்தியை கொண்டு வந்தீர்கள். நான் தவறு செய்திருப்பேன். நல்ல வேளையாக இறைவன் என்னைக் காப்பாற்றி விட்டான். அப்பா செய்தது நூற்றுக்கு நூறு சரியே! சாரிப்பா உங்களை தப்பா நினைச்சுட்டேன்"



"பரவாயில்லப்பா..இவ்வாறு நமது நண்பன், நமது இனம் என்ற காரணம் கூறி தவறு செய்பவர்களை ஆதரிப்பதுதான் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவும் காரணம. இனியாவது கவனமாக இரு"


நடுநிசியாகி விட்டதால் மூவரும் தங்கள் படுக்கைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்.




1 comment:

vara vijay said...

Yeppa suvi. Good message for your people. For first time suvi had written a usefull message for his own people.